தேர்தலுக்குப் பிறகு பா.ஜ., காணாமல் போகும்: ஜெயக்குமார் கணிப்பு
பிரதமரின் 'ரோடு ஷோ' நிகழ்ச்சியை முன்வைத்து அ.தி.முக.,வும் பா.ஜ.,வும் கடுமையான வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருவது, தேர்தல் களத்தில் அனல் பரப்பியுள்ளது.
சென்னையில் பிரதமரின் ரோடு ஷோ குறித்து பொதுக்கூட்டம் ஒன்றில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசுகையில், "விமானத்தில் இருந்து இறங்கிய உடன் நேராக ரோடு ஷோ நடத்துகிறார்கள். இதைப் பார்த்து மக்கள் ஓட்டு போடுவார்களா. பா.ஜ.,வின் ஏமாற்று வேலை தமிழகத்தில் எடுபடாது" என்றார்.
பழனிசாமியின் பேச்சுக்கு கோவையில் செய்தியாளர்களிடம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறுகையில், " அ.தி.மு.க.,வின் பேச்சு என்பது உயரத்தில் இருக்கும் திராட்சைப் பழத்தைப் பறிக்க முயன்று முடியாமல் போன நரி, 'அந்தப் பழம் புளிக்கும்' என கூறுவதைப் போல உள்ளது.
ரோடு ஷோவை இவர்கள் நடத்தலாமே. பழனிசாமி வீதியில் சென்றால் பார்ப்பதற்கு மக்கள் யாரும் வரமாட்டார்கள். அது அவர்களுக்கே தெரியும்" என விமர்சித்திருந்தார்.
இது குறித்து அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:
அண்ணாமலை நிதானம் இழந்து மற்றவர்களை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இதைப் பார்க்கும் போது அவர் விரக்தியின் உச்சத்தில் இருப்பதாக தெரிகிறது.
அவர் ஒரு வால் அறுந்த நரி... அரசியலில் கத்துக்குட்டி. தமிழகத்தின் வரலாறு தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த தேர்தலில் போட்டி என்பது தி.மு.க.,வுக்கும் அ.தி.மு.க.,வுக்கும் இடையில் தான்.
நானும் தேர்தல் களத்தில் இருக்கிறேன் என்பதற்காக அ.தி.மு.க.,வை சீண்டிப் பார்க்கிறார். தமிழகத்தில் அவர்களால் தனித்து நின்று ஒரே ஒரு எம்.எல்.ஏ சீட்டை பெற முடியுமா?
2019 லோக்சபா தேர்தலில் அவர்களுடன் கூட்டணி வைத்ததால் தான் அ.தி.மு.க., தோற்றம். இதுவரை தேர்தலில் தோல்வியே காண முடியாத நான் ராயபுரம் தொகுதியில் தோற்றதற்கு காரணமும் பா.ஜ., தான்.
கருணாநிதியால் கூட அழிக்க முடியாத அ.தி.மு.க.,வை ஓராயிரம் அண்ணாமலை வந்தாலும் அழிக்க முடியாது. இந்த தேர்தல் முடிந்த பிறகு பா.ஜ., எங்கே இருக்கிறது எனப் பாருங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து