கச்சத்தீவு பிரச்னைக்கு 3 தீர்வுகள் : பட்டியலிட்ட அண்ணாமலை
"கச்சத்தீவை மீட்க கப்பல் படையை அனுப்புவோம் எனக் கூறவில்லை. அறிவியல்பூர்வமான தீர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்" என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:
சீமானுக்கு சின்னமும் இல்லை ஓட்டும் இல்லை. நான் என்ன சீமானின் ஸ்லீப்பர் செல்லா. இளைஞர்கள் எந்தப் பக்கம் வருகிறார்கள் என்று சீமானுக்கு தெரியும். மோடி மீண்டும் வரப்போகிறார் என்பது மக்களுக்குத் தெரியும். சீமான் பேசுவதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
கச்சத்தீவு நமக்கு வேண்டும் என்பது தான் பா.ஜ,. நிலைப்பாடு. அப்போது தான் தமிழக மீனவர்களின் பிரச்னையை தீர்க்க முடியும். என்னுடைய இலங்கை பயணத்தில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை சந்தித்துப் பேசியிருக்கிறேன்.
இதற்கான மூன்று தீர்வுகள் குறித்து பேசி வருகிறோம். ஒன்று, தினமும் 10 ஆயிரம் பேருக்கு மீன்பிடிக்கும் உரிமை வாங்கலாமா. இரண்டாவது, கச்சத்தீவை மீண்டும் தமிழக மீனவர்கள் பயன்படுத்த அனுமதி வாங்க முடியுமா.. மூன்றாவது, கச்சத்தீவையே மீண்டும் பெறலாமா என்பது குறித்து கடந்த 3 ஆண்டுகளாக பேசி வருகிறோம்.
கச்சத்தீவை மீட்க கப்பல் படையை அனுப்புவோம் எனக் கூறவில்லை. அறிவியல்பூர்வமான தீர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். கச்சத்தீவு தொடர்பான ஆர்.டி.ஐ தகவலை அதிகாரபூர்வமாக வாங்கியிருக்கிறேன்.
நான் வாங்கவில்லை என சம்பந்தப்பட்டவர்கள் கூறட்டும். எந்த அதிகாரி கையெழுத்து போட்டார் என்ற தகவல் இருக்கிறது. தி.மு.க.,வின் பதில் வேடிக்கையாக இருக்கிறது. இது பச்சைப் பொய் எனக் கூறுகிறவர்கள் என்னிடம் விவாதத்துக்கு வரட்டும்.
நான் வாங்கிய அதே ஆர்.டி.ஐ.,யை தி.மு.க., ஏன் வாங்கவில்லை. நாங்கள் ஒரு காரியத்தை செய்யும்போது என் மீது பாய்வது எந்தவகையில் நியாயம்?
ஜனநாயக நாட்டில் யாரையும் குடிக்க வேண்டாம் எனக் கூற முடியாது. 'கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும்' எனறு 317 பக்கம் வெள்ளை அறிக்கையை கவர்னரிடம் கொடுத்து ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. டாஸ்மாக் என்பது கேடு. அதில் வரும் பணம் கட்சி சார்ந்து இருக்கிறது. விவசாயிகளுக்கு கள்ளுக்கடைகள் மூலம் வருமானம் வரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து