கச்சத்தீவு பிரச்னையில் பா.ஜ.,வுக்கு சசிகலா ஆதரவு
ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறிக்கை:
கச்சத்தீவு குறித்து பேச தி.மு.க.,வினருக்கு அருகதை கிடையாது. தி.மு.க.,வினர் என்னதான் உண்மையை மூடி மறைக்க பார்த்தாலும், அந்த முயற்சியில் தோல்வியை அடைவர்.
கச்சத்தீவை மீட்டெடுக்கவும், இலங்கைத் தமிழர்களின் குடியுரிமையை நிலை நாட்டவும், ஜெயலலிதா மறைவுக்கு முன்பாகவே, ஒரு சிறந்த செயல் திட்டம் வகுக்கப்பட்டது.
இந்த செயல் திட்டமானது, இலங்கையை சேர்ந்தவர்களும் ஏற்றுக் கொண்டு உருவானது. அந்த திட்டம் இன்றும் உயிர்ப்போடுதான் இருக்கிறது.
அதை முன்னெடுத்து செயல்படுத்த, வலுவான, நிலையான மத்திய அரசு தற்போது தேவைப்படுகிறது.
அதேபோல், இந்தியாவின் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய, இந்திய மக்கள் மீது அக்கறை கொண்ட, ஒரு வலிமையான பிரதமரையும் நாம் தேர்ந்தெடுக்கப்போகிறோம்.
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் உறுதியான பிரதமரை வைத்து, புதிதாக அமைய உள்ள மத்திய அரசின் துணையோடு, கச்சத்தீவை மீட்பதுடன், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
வலிமையான பிரதமர் என, சசிகலா மறைமுகமாக மோடியை குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டி.டி.வி.தினகரன் பா.ஜ., கூட்டணியில் இணைந்த பின், சசிகலாவும் பா.ஜ.,வை ஆதரிப்பது போல அறிக்கை வெளியிட்டு இருப்பது பா.ஜ., கூட்டணியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இதையடுத்து லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு அவரை அழைத்துச் செல்ல முயற்சிகள் துவங்கி இருப்பதாக பா.ஜ., வட்டாரங்கள் கூறின.
வாசகர் கருத்து