தபால் ஓட்டு எண்ண 6 மேஜை அமைப்பு
சேலம் : சேலம் லோக்சபா தொகுதியில் பதிவான தபால் ஓட்டுகள் எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள், பணியாளர்களுக்கு பயிற்சி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதற்கு தலைமை வகித்து கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது:சேலம் தொகுதியில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி வரும், 4 காலை, 8:00 மணிக்கு கருப்பூர் அரசு பொறியியல் கல்லுாரியில் நடக்க உள்ளது. தபால் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளி, தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர், போலீஸ் துறையினர் என, 10,748 தபால் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இந்த ஓட்டுகள், தேர்தல் பொதுப்பார்வையாளர், தேர்தல் அலுவலர், வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் எண்ணப்படும். தபால் ஓட்டுகள் எண்ணுவதற்கு, 6 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு மேஜைக்கும், உதவி தேர்தல் அலுவலர், ஓட்டு எண்ணும் மேற்பார்வையாளர், ஓட்டு எண்ணும் உதவியாளர் இருவர், ஒரு நுண் பார்வையாளர் என, 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மேஜைக்கும், வேட்பாளர்கள் தலா ஒரு முகவர்களை நியமித்துக்கொள்ளலாம். ஒரு சுற்றுக்கு ஒவ்வொரு மேஜைக்கும் தலா, 500 தபால் ஓட்டுகள் வழங்கி எண்ணப்படும். இப்பணியில் ஈடுபடும் அலுவலர்கள், மொபைல், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட தேர்தல் கமிஷனால் தடை செய்யப்பட்ட, எந்த பொருட்களையும் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை.ஓட்டு எண்ணிக்கையில் பங்கேற்க நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள், பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் ஓட்டு எண்ணும் மையங்களில் அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.4ல் மதுக்கடை மூடல்சேலம் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை வரும், 4ல் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு அன்று மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், பார்கள் அனைத்தையும் மூட வேண்டும். மீறி மது விற்போர் மீது அரசு விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து