Advertisement

தேர்தல் பணியில் செந்தில் பாலாஜி: பிரசாரத்தில் நேரு வாக்குமூலம்

திருச்சி, பெரம்பலுார் லோக்சபா தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் பெரும்பான்மை மக்களான முத்தரையர்கள், உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காததால், தி.மு.க., மீது அதிருப்தியில் உள்ளனர்.

திருச்சி, பெரம்பலுார் லோக்சபா தொகுதிகளில் உள்ள, 12 சட்டசபைத் தொகுதிகளில் பெரும்பான்மை சமுதாயமாக முத்தரையர்கள்உள்ளனர்.

திருச்சி லோக்சபா தொகுதியில் கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, திருவெறும்பூர் தவிர, திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளிலும், பெரம்பலுார் லோக்சபா தொகுதியில் பெரம்பலுார் சட்டசபைத் தொகுதி தவிர, துறையூர், மண்ணச்சநல்லுார், லால்குடி, குளித்தலை, முசிறி ஆகிய, ஐந்து தொகுதிகளிலும் முத்தரையர் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.

பின்னடைவு



இவ்விரு தொகுதிகளிலும் தி.மு.க., சார்பில், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.

ஏற்கனவே, திருச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே அமைக்கப்பட்ட, முத்தரையர் சமுதாயத்தின் அரசர், பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபத்தை திறக்க காலதாமதம் செய்ததும், அதை முதல்வர் நேரில் வந்தது திறந்து வைக்காததும், அச்சமுதாய மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மேலும், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காததும், தி.மு.க., மீது, அச்சமுதாயத்தினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

அ.தி.மு.க., சார்பில், பெரம்பலுார் லோக்சபா தொகுதியில், சந்திரமோகன் என்ற முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முத்தரையர் சமுதாயத்தின் முக்கிய அமைப்பாக உள்ள தமிழ் தேசம் கட்சியின் தலைவர் செல்வக்குமார், பா.ஜ.,வை ஆதரித்துள்ளார்.

இதனால், முத்தரையர் சமுதாயத்தின் பெரும்பாலான ஓட்டுகள், அ.தி.மு.க., மற்றும் பா,ஜ., கூட்டணிக்கே செல்ல வாய்ப்புள்ளதால், இந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களுக்கு, முத்தரையர் சமுதாய ஓட்டுகள் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், முத்தரையர்களை சமாதானப்படுத்தும் விதமாக, தன்னுடைய மகனுக்காக பெரம்பலுாரில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது பேசியுள்ளார் தி.மு.க., முதன்மை செயலரும் அமைச்சருமான நேரு.

எண்ணம்



அவர் பேசியதாவது:

திருச்சி தொகுதி தி.மு.க.,வுக்கு கிடைத்திருந்தால் முத்தரையர்கள் நினைப்பது நடந்திருக்கும். கடைசி நேரத்தில் கூட்டணி கட்சிக்கு விட்டுக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது.

தி.மு.க., யாரையும் புறக்கணிக்காது. எதிரியாக நினைப்பதும் கிடையாது. எல்லோருடனும் இணைந்து பணியாற்றி, ஒவ்வொருவரையும் முன்னேற்றம் அடைய செய்வதுதான் தி.மு.க.,வின் எண்ணம்.

மிகப் பெரிய சமூகமாக முத்தரையர்கள் உள்ளனர். நாங்களும் உங்களை ஒட்டித் தான் இருப்போம். வாய்ப்பு கிடைக்கும்போது, மிகப் பெரிய அளவுக்கு இந்த சமூகம் வளரும்.

அரசியல் ரீதியிலும் முக்கியத்துவம் பெறும். அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

நடக்கவிருக்கும் தேர்தல் முக்கியமானது. அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லாததால், தி.மு.க.,வுக்காக அந்த வேலையை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இப்போதும், அவர் பணி செய்யாமல் இல்லை. முடிந்த அளவுக்கு அவரும் தேர்தல் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

7ல் ஒரு பங்கு



இந்த தேர்தலில் 40 இடங்களிலும் நாம் வெற்றி பெற வேண்டும். திருச்சியில் 9 தொகுதிகள் இருக்கின்றன. அங்கு 3,000 கோடி ரூபாய் அளவுக்கு வளர்ச்சி திட்டங்களை முதல்வர் கொடுத்திருக்கிறார்.

மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தால், நாம் நினைக்கும் பணி நடக்கும்.

சமூக நீதிக் கொள்கைக்கு நேர் எதிரானவராக மோடி இருக்கிறார். சமூக நீதியை பா.ஜ., ஏற்காது. தி.மு.க., கொள்கையைப் போலவே மிகச் சிறப்பான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கொடுத்துள்ளது.

தேர்தல் களம் இப்போது முழுமையாக மாறி விட்டது. வரும் தேர்தலில் 200 இடங்களுக்கும் கீழ் தான் மோடி வெற்றி பெறுவார். 220 இடங்கள் இருந்தாலே ஒருவர் ஆட்சிக்கு வந்துவிட முடியும். அதில் 7ல் ஒரு பங்காக நாம் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்