தி.மு.க., வேட்பாளருக்கு 'ஆப்பு' ஐ.ஜே.கே., ஐ.டி., விங்கின் உத்தி
பெரம்பலுார் லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக, மூத்த அமைச்சர் நேருவின் மகன், அருண் போட்டியிடுகிறார். அவர், செல்லும் பெரும்பாலான இடங்களில் பொதுமக்கள் குடிநீர் வசதி, சாலை வசதி, போக்குவரத்து வசதி, சாக்கடை கால்வாய் வசதி போன்ற வசதிகளை ஏற்படுத்தி தரவில்லை என்றும், ஏற்கனவே ஜெயித்தவர்கள் மற்றும் எம்.எல்.ஏ., உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பகுதியை எட்டிக்கூட பார்க்க வரவில்லை, நன்றி சொல்லக்கூட வரவில்லை, 1,000 ரூபாய் கிடைக்கவில்லை என்றும் முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
வேட்பாளரை ஊருக்குள் விடாமல் திருப்பி அனுப்பும் அளவில் எதிர்ப்பு இருந்தால், ஊரின் முகப்பிலேயே பிரசாரம் செய்து விட்டு அடுத்த ஊருக்கு சென்று விடுகின்றனர்.
இதையறிந்த, ஐ.ஜே.கே., வேட்பாளர் பாரிவேந்தர், தி.மு.க., வேட்பாளர் அருணின் பிரசாரத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்ப தன் கட்சியின் ஐ.டி., விங் பொறுப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தினசரி 1,500 ரூபாய் சம்பளத்தில், வாகன வசதியுடன் சிலரை பணியில் அமர்த்தியுள்ளார். அவர்கள், நிருபர்கள் என்ற போர்வையில் வீடியோ கேமராவுடன் தி.மு.க., வேட்பாளர் அருண் பிரசாரம் செய்யும் அனைத்து கிராமங்களுக்கும் உடன் சென்று பொதுமக்களின் எதிர்ப்புகளை பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
தன்னை தோற்கடிக்க, இதுபோன்ற பல உள்ளடி வேலைகள் நடக்கும் நிலையில், தி.மு.க., வேட்பாளர் அருண் இப்போதே எம்.பி.,யாகி விட்டதுபோல் மிதப்பில் இருக்கிறார்.
வாசகர் கருத்து