சென்னை:'தமிழக மக்களுக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும், சட்டசபையில்,பா.ஜ.,வின் குரல் ஒலிக்கும்' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்கிறோம். தேர்தல் வாயிலாக கிடைக்கும் வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும், பா.ஜ., மக்களுக்காக உழைப்பதில் என்றும், பின் வாங்கியதில்லை. பா.ஜ., அரசியல் கட்சி மட்டுமல்ல; மக்களுக்காகவும், தேசத்திற்காகவும் சேவை செய்கிற அமைப்பு.தமிழகத்தில், தாமரை மலராது என்று சொல்லி கொண்டு இருந்தவர்கள் மத்தியில், 2021ல், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையை அலங்கரிப்பர் என்று சபதம் ஏற்றிருந்தோம். இன்று, அது நிறைவேறி இருக்கிறது.
கடந்த, 1996ல் ஒருவரும்; 2001ல் நான்கு பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களும் இருந்தனர். தற்போது, 20 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் நான்கு எம்.எல்.ஏ.,க்களையும் பா.ஜ., பெற்றிருக்கிறது. மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், கல்வியாளர் சரஸ்வதி ஆகியோர் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
அவர்களின் அனுபவம்,தொலைநோக்கு சிந்தனை, ஆற்றல், தமிழக மக்களுக்கு பெரிதும் பயன்படும். தமிழக மக்களுக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும், சட்டசபையில், பா.ஜ.,வின் குரல் ஒலிக்கும்.தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்காக பிரசாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன்.ராஜ்நாத் சிங், ஸ்மிருதிஇரானி உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
கடுமையாக உழைத்த பா.ஜ., - அ.தி.மு.க., - பா.ம.க., - த.மா.கா., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், கூட்டணிக்கு ஆதரவளித்து, 76 இடங்களை வழங்கிய தமிழக மக்களுக்கும், தமிழக பா.ஜ., சார்பில் நன்றியை தெரிவிக்கிறேன்.இவ்வாறு முருகன் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து