ஏமாற்றுவதில் ஸ்டாலினுக்கே முதல் பரிசு: அண்ணாமலை
"மோடியின் ஆட்சியில் பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு நாடு முன்னேறியுள்ளது. கடன் வாங்கும் மாநிலத்தில் தமிழகம் 3வது இடத்தில் இருந்து முதல் இடத்துக்குச் சென்றுவிட்டது" என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.
ஸ்ரீபெரும்புதுாரில் த.மா.கா., வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து அண்ணாமலை பேசியதாவது:
தி.மு.க., அரசு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 3.50 லட்சம் கோடி ரூபாயை கடனாக வாங்கி நாட்டிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக ஸ்டாலின் மாற்றியிருக்கிறார். இது தான் தி.மு.க., அரசின் சாதனை.
மோடியின் ஆட்சியில் பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு நாடு முன்னேறியுள்ளது. கடன் வாங்கும் மாநிலத்தில் தமிழகம் 3வது இடத்தில் இருந்து முதல் இடத்துக்குச் சென்றுவிட்டது.
மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவோம் என கூறினர். ஆனால், 70 சதவீத பெண்களுக்கு தரவில்லை. ஆட்சிக்கு வந்தால் நெல்லுக்கான குறைந்தபட்ச விலையை அதிகரிப்போம் எனக் கூறி விவசாயிகளை ஏமாற்றினர்.
கல்விக்கடனை தள்ளுபடி செய்வோம் எனக் கூறி மாணவர்களை ஏமாற்றியது, தி.மு.க., அரசு. நாட்டில் ஏமாற்றியவர்களுக்குப் பரிசு தந்தால் முதல் பரிசை ஸ்டாலினுக்கு தான் தர வேண்டும்.
ஏமாற்றுவது, பொய் சொல்வதற்காக ஒரு குடும்பம் பிறந்திருக்கிறது என்றால் அது கோபாலபுரம் குடும்பம் மட்டுமே. கடந்த தேர்தலுக்கு தி.மு.க., தந்த அதே வாக்குறுதிகளை இந்த முறையும் தந்துள்ளனர்.
காஸ் மானியம் 100 ரூபாய் தருவோம், பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதிகளையே தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை.
நாட்டின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார். ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்களை நேரில் சந்தித்துப் பேசினார், ஸ்டாலின். இது தான் பாதுகாப்பா.
பா.ஜ., அமைச்சரவையில் பட்டியலினத்தை சேர்ந்த அமைச்சர்கள் மட்டும் 11 பேர் இருக்கிறார்கள். இதில், 12 பேர் பெண்கள், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 27 பேர் அமைச்சர்களாக உள்ளனர். சமூகநீதிக்காக போராடும் ஒரே கட்சி பா.ஜ., தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து