ஹிந்தியில் பட்டியல்: வாக்காளர்கள் அதிர்ச்சி
தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலில், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளில் வாக்காளர் பெயர்களும், பலரது பெயர்களுக்கு கீழ் இதரர் என ஒரே பெயரும் இடம் பெற்றுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு, 10 நாட்களே உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியில், அதிகாரிகளும், அரசியல் கட்சியினரும் தீவிரம் காட்டி வருகின்றனர். தேர்தல் கமிஷன் செம்மையான வாக்காளர் பட்டியல் தயாரிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும், அதிகாரிகள் அலட்சியம் காரணமாக பல்வேறு குளறுபடிகள் காணப்படுகிறது.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதி, மடத்துக்குளம் சட்டசபை தொகுதியில், கணக்கம்பாளையம் கிராமம் பாகம் எண், 133ல், வாக்காளர் பெயர் ஹிந்தி மொழியில் காணப்படுகிறது.
அதே போல், உடுமலை, மடத்துக்குளம் தொகுதியிலுள்ள வாக்காளர் பட்டியலில் ஒரு சில பெயர்கள், மலையாளம், ஹிந்தி மொழியில் காணப்படுகிறது. வேறு மொழிகளில் உள்ளதால், அரசியல் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடுமலை தொகுதி, பாகம் எண்: 272ல், வழக்கமாக, தந்தை பெயர், கணவர் பெயர் இடம் பெறும் பகுதியில், இதரர் என குறிப்பிட்டு, சாந்தி, கிருபாகரன் என இரு பெயர்கள், 30க்கும் மேற்பட்ட வாக்காளர்களின், கணவர், தந்தை பெயர்களுக்கு பதில் இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு, குளறுபடிகள் உள்ளது குறித்து, தேர்தல் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'ஆன்லைன் வாயிலாக, தொகுதி மாற்றம் உள்ளிட்ட திருத்தப்பணிகள் மேற்கொண்ட போது, மற்ற மாநிலத்தில் இருந்து இங்கு வந்தவர்கள், பழைய வாக்காளர் அடையாள அட்டை அடிப்படையில் விண்ணப்பித்ததால் மாறியிருக்கலாம். இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளின் போது, சரி செய்யப்படும்' என்றனர்.
வாசகர் கருத்து