பொன்முடிக்கு மீண்டும் பதவி: விடுதலை சிறுத்தைகள் குஷி
பொன்முடி மீண்டும் அமைச்சராகி உள்ளதை, அவரது சொந்த கட்சியினரை விட, வி.சி., கட்சியினர் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.
தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் தி.மு.க., போட்டியிடும் தொகுதியாக இருந்தாலும், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதியாக இருந்தாலும், அந்தந்த மாவட்டத்துக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர்களே தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர்.
தி.மு.க., மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் தோல்வி அடைந்தால், மாவட்ட செயலர்களாக இருக்கும் அமைச்சர்களே பொறுப்பேற்க வேண்டும் என அக்கட்சி தலைமை எச்சரித்துள்ளது. இதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் களத்தில் இறங்கி வேலை பார்த்து வருவதுடன், தேர்தல் செலவுகளுக்கும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, சொத்து குவிப்பு வழக்கு காரணமாக அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டு இருந்தார். விழுப்புரம் தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் வி.சி., வேட்பாளராக ரவிகுமார் போட்டியிடும் நிலையில், மாவட்டத்தில் பொறுப்பு அமைச்சர் இல்லாததால் தேர்தல் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. இதற்கிடையில், சுப்ரீம் கோர்ட்டில் பொன்முடி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, மீண்டும் உயர் கல்வி அமைச்சராக பொன்முடி பதவியேற்றார்.
பதவி ஏற்ற சூட்டோடு சூடாக விழுப்புரம் தொகுதி யில் களத்தில் இறங்கி, தேர்தல் பணிகளை துவக்கி விட்டார். அமைச்சர் பொன்முடியின் வாகனத்தின் முன்புறம், வி.சி., வேட்பாளரின் பானை சின்னம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வி.சி., கட்சியினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
வாசகர் கருத்து