மாறி மாறி பணம் பறிக்கும் படைகள்: சத்தமின்றி 'எஸ்கேப்'பாகும் அ.தி.மு.க.,
தமிழகம் முழுதும் கடந்த ஒரு வார காலமாக 60 இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தி உள்ளது. அதில் 22 கோடி ரூபாய் வரை பிடிபட்டிருக்கிறது. அதேபோல, பறக்கும் படையும் தமிழகம் முழுதும் 82.63 கோடி ரூபாய்க்கான ரொக்கத்தை கைப்பற்றி உள்ளது.
இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சென்ற ரயிலில், பெரிய பைகளில், 4 கோடி ரூபாய் எடுத்துச் செல்லப்படுவதாக தாம்பரம் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. போலீசாருடன் சென்று பணத்தை கைப்பற்றி உள்ளனர்.
பிடிபட்ட நவீன், சதீஷ், பெருமாள் ஆகிய மூவரில் சதீஷ், திருநெல்வேலி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான, சென்னை கீழ்பாக்கத்தில் இருக்கும் 'புளு டைமண்ட்' ஹோட்டலில் பணியாளராக உள்ளார்.
பா.ஜ., உறுப்பினராகவும் இருக்கும் சதீஷிடம் போலீசார் விசாரித்தபோது, 'திருநெல்வேலி லோக்சபா தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் தேர்தல் செலவுக்காக பணம் கொண்டு செல்லப்பட்டது' என கூறியுள்ளார்.
பிடிபட்ட மூவரில் பெருமாள், நயினார் நாகேந்திரனின் உறவுக்காரர் என்பதால், பணம் நயினார் நாகேந்திரனுடையது தான் என்று அடித்துச் சொல்லத் துவங்கியுள்ளது போலீஸ். தேவையானால், நயினார் நாகேந்திரனையும் வரவழைத்து விசாரணை நடத்துவோம் என போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, லோக்சபா தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடத்துவர் என்பதால், வருமான வரித் துறையை மத்திய அரசு முழு வேகத்தில் முடுக்கி விட்டுள்ளது.
குறிப்பாக, தி.மு.க.,வினர் தேர்தல் செலவுக்காக அதிக அளவில் பணம் எடுத்துச் செல்வர் என்பதால், வருமான வரித் துறை அவர்களை கண்கொத்திப் பாம்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது. இதை, பா.ஜ., பின்னணியில் இருந்து செய்வதாக தி.மு.க., தரப்பு குற்றம்சாட்டுகிறது.
வருமான வரித் துறை தமிழகம் முழுதும் சோதனையிட்டிருக்கும் இடங்களை பார்த்தால், பின்புலம் புரியும் என்றும் தி.மு.க.,வினர் சொல்கின்றனர். இப்படி செய்வதால், தேர்தல் நடக்கவிருக்கும் பல இடங்களில் பணத்துக்காக தி.மு.க., தடுமாறுவதாக அக்கட்சியினர் கூறுகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்க தி.மு.க., தரப்பும் தயாராகி விட்டது.
இதற்காகவே, தமிழக போலீசில் உளவுத் துறையினரை முழு வேகத்தில் முடுக்கி விட்டுள்ளது. அவர்கள் உளவறிந்து கொடுக்கும் தகவல்களை வைத்து, அரசுத் தரப்பிலும் பறக்கும் படையினரை ஏவி விட்டு, பா.ஜ., தொடர்புடைய இடங்களில் சோதனைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அப்படி நடத்தப்பட்ட சோதனைதான் நெல்லை ரயிலில் நடந்த சோதனை என்கிறது பா.ஜ.,
இந்த விஷயத்தில் எலியும், பூனையுமாக பா.ஜ., - தி.மு.க., மோதிக் கொண்டிருக்க, சத்தமில்லாமல் அ.தி.மு.க., தரப்பில் தேர்தல் செலவுக்கு பணம் எடுத்துச் செல்வதை யாரும் கண்டு கொள்ளவில்லை என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:
தேர்தல் என்றால் பறக்கும் படையும், வருமான வரித் துறையும் களத்தில் இறக்கி விடப்படுவது வாடிக்கை. ஆனால், இம்முறை அது தி.மு.க., - பா.ஜ., என இரு கூறாக பிரிந்து கிடக்கிறது. தி.மு.க., தரப்பை நோக்கி வருமான வரித் துறை வேகமாக பாய்கிறது. அந்த விபரம் தெரிய வந்ததும், தமிழக அரசை கையில் வைத்திருக்கும் தி.மு.க., பறக்கும்படை போலீசை பா.ஜ.,வை நோக்கி ஏவி விட்டுள்ளது. மாறி மாறி பிடிக்கின்றனர். அந்த வகையில் தான், நயினார் நாகேந்திரனுடையதாக சொல்லப்படும் பணத்தை பறக்கும்படை பிடித்து, வருமான வரித் துறையிடம் ஒப்படைத்துள்ளது.
இதே மாதிரிதான், செந்தில் பாலாஜி, பொன்முடி என தி.மு.க., அமைச்சர்கள் மீது அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்கத் துவங்கியது. உடனே, இதற்கு பதிலடி கொடுக்க விரும்பிய தி.மு.க.,வினர், மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை லஞ்ச வழக்கில் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இப்படி பா.ஜ.,வும், தி.மு.க.,வும் இரண்டு படைகளை வைத்து எலியும், பூனையுமாக மோதிக் கொண்டிருக்கின்றன. தேர்தல் நெருக்கத்தில் இது இன்னும் அதிகமாகும்.
வருமான வரித் துறையினர் ஏற்கனவே நிறைய விபரங்களை, தி.மு.க.,வினர் வாயிலாகவே சேகரித்து வைத்துள்ளனர். அதை வைத்து, தொடர் சோதனையில் ஈடுபடுகின்றனர். தேர்தல் நெருங்கும்போது, சோதனைகள் அதிகமாகும்போது, தி.மு.க.,வினரால் பணத்தை வெளியில் எடுக்க முடியாது என்பதாலேயே, இப்படிப்பட்ட சோதனைகள் நடக்கின்றன.
இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.
ஏமாற்றும் தி.மு.க., வருமான வரித் துறைக்கு தகவல் கொடுக்கும் தி.மு.க.,வினர், சோதனைக்கு அதிகாரிகளை ஒரு பகுதிக்கு வரவழைத்து, இன்னொரு ஏரியா வாயிலாக பணத்தை வெளியே கொண்டு செல்கின்றனர். கூடவே, தேர்தல் பரிசாக மக்களுக்கு வேறு இடங்களில் வைத்து பணம் கொடுத்து விடுவதால், பல இடங்களில் வருமான வரித்துறையினருக்கு பெரிய அளவில் பணம் சிக்குவதில்லை என்கின்றனர்.
வாசகர் கருத்து