நயினார் மீது சட்ட நடவடிக்கை: தேர்தல் கமிஷனுக்கு மா.கம்யூ., கடிதம்
'தாம்பரத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரத்தில் பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு மா.கம்யூ., கடிதம் எழுதியுள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கு மா.கம்யூ., மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:
திருநெல்வேலி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக அவரது ஊழியர்கள், உறவினர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி சட்டத்துக்குப் புறம்பாக 4 கோடி ரூபாயை ரயிலில் எடுத்துச் சென்றுள்ளனர்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் அந்த ரயிலை சோதனையிட்டு அதிகாரிகள் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். அப்போது பிடிபட்ட 3 பேரும் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் பணிபுரிபவர்கள். நெல்லையில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு சென்றதாக கூறியுள்ளனர்.
இது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது மட்டுமன்றி, சட்டத்துக்குப் புறம்பான செயல் ஆகும். தமிழகத்தில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்கள், தேர்தல் விதிமுறைகளைக் கடைபிடிக்காமல் செயல்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
உதாரணமாக, கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டபோது பா.ஜ., வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் அதிகாரிகளை மிரட்டியுள்ளார். இந்த சம்பவத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ., வேட்பாளர்களுக்கு கொடுப்பதற்காக பக்கத்து மாநிலங்களில் இருந்து பணப்பரிமாற்றம் நடப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. எனவே, நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களிலும் அவரது உறவினர்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரின் வீடுகளிலும் சோதனை நடத்தி சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பா.ஜ., வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பண முறைகேடுகள் நடக்காமல் ஜனநாயகபூர்வமான தேர்தலை நடத்துவதை தேர்தல் கமிஷன் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து