'ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு காலை 5 மணிக்கு வர வேண்டும்'
கரூர்: ''லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளில் அலுவலர்கள் காலை, 5:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு வர வேண்டும்,'' என, கலெக்டர் தங்கவேல் பேசினார்.
கரூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஓட்டு
எண்ணிக்கை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது. அதில், கலெக்டர் தங்கவேல் பேசியதாவது:
கரூர் லோக்சபா தொகுதியின் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தளவாப்பாளையம் குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் வைக்கப்பட்டுள்ளது. ஜூன், 4ல் ஓட்டு எண்ணிக்கை நாளாகும். அன்று காலை, 5:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு அலுவலர்கள், அடையாள அட்டையுடன் வர வேண்டும். மொபைல் போன், மின்னனு சாதனங்கள் எடுத்து வரக்
கூடாது. ஓட்டு எண்ணிக்கை நடைபெறும், 24 மணி நேரத்துக்கு முன், கணினி முறையில் பணிபுரியும் சட்டசபை தொகுதி இறுதி செய்யப்படும். ஓட்டு எண்ணிக்கை நாளன்று காலை, 5:00 மணிக்கு பணிபுரியும் மேஜை எண் ஒதுக்கீடு செய்யப்படும். அஞ்சல் ஓட்டு எண்ணிக்கையில், ஒரு ஓட்டு எண்ணிக்கை மேற்பார்வையாளர், இரண்டு ஓட்டு எண்ணிக்கை உதவியாளர், ஒரு நுண் பார்வையாளர் பணியில் இருப்பர். ஓட்டு எண்ணிக்கை பணியில் உள்ள, அலுவலர்கள் நேர்மையுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
டி.ஆர்.ஓ., கண்ணன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சையது காதர், பேரிடர் மேலாண்மை பிரிவு தாசில்தார் பிரபு, தேர்தல் பிரிவு தாசில்தார் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து