புதுச்சேரியில் ஆதரவு; மாகியில் எதிர்ப்பு யூனியன் பிரதேசத்தில் கம்யூ., கட்சிகள் 'லகலக'

புதுச்சேரி லோக்சபா தேர்தலில் கம்யூ., கட்சிகள் இரண்டு விதமான நிலைப்பாடுகளை எடுத்துள்ளது, காங்., வேட்பாளருக்கு சிக்கலை ஏற்படுத்திஉள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம், புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. இதில், புதுச்சேரியின் ஒரு பகுதியான மாகி, கேரள மாநிலம் கண்ணுார் மாவட்டம் அருகே உள்ளது.

சிக்கல்



கேரளாவில் காங்., கட்சியும், கம்யூ., கட்சிகளும் எதிரெதிர் அணியில் உள்ளன. அதேநேரம், புதுச்சேரியில் இரு தரப்பும் 'இண்டியா' கூட்டணியில் உள்ளன.

புதுச்சேரியில் 'இண்டியா' கூட்டணியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து கம்யூ., கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், மாகியில் இண்டியா கூட்டணிக்கு மா.கம்யூ., இ.கம்யூ., கட்சியினர் ஆதரவு அளிக்காமல் சுயேச்சைக்கு ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளனர். இதனால், மாகி காங்., வேட்பாளருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாகி கம்யூ., நிர்வாகிகள் கூறியதாவது:

புதுச்சேரி இண்டியா கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு பிரசாரம் செய்யவும், ஓட்டளிக்கவும் இங்குள்ள தொழிலாளர்கள் விரும்ப மாட்டார்கள். இதை, புதுச்சேரியில் உள்ள கட்சி தலைமைக்கு தெரிவித்து விட்டோம். நாங்கள் கேரள மாநிலம் கண்ணுார் மாவட்ட செயலகத்தில் இணைந்துஉள்ளோம்.

கடந்த லோக்சபா தேர்தலிலும் நாங்கள் வைத்திலிங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை தான் ஆதரித்தோம். இந்த முறையும் காங்., கட்சிக்கு ஓட்டளிக்க முடியாது; பிரசாரமும் செய்ய முடியாது.

ஏனெனில், மாகியில் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால், கேரளாவில் உள்ள காங்., கட்சியுடன், எங்கள் மோதலை நீர்த்து போகச் செய்யும். அதனால், நாங்கள் சுயேச்சை வேட்பாளருக்கு ஓட்டளிப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

எதிரான ஓட்டு



புதுச்சேரி மா.கம்யூ., கட்சியின் செயலர் ராஜாங்கம் கூறுகையில், 'மாகி நிலவரத்தை கட்சி தலைமை அறிந்துள்ளது. பா.ஜ.,வுக்கு எதிரான ஓட்டுகள் பிளவுபடாமல் இருக்க கட்சி தலைமை வழி வகை செய்து வருகிறது' என்றார்.

புதுச்சேரி இ.கம்யூ., செயலர் சலீம் கூறுகையில், 'கூட்டணியின் ஒற்றுமையை பாதிக்கும் வகையில் எதுவும் செய்யக்கூடாது. வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக ஓட்டளிக்க மாகியில் முயற்சி எடுத்துவருகிறோம்' என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்