'மோசமான சாலையில் செல்லுங்கள்': புகார் சொன்னவர்களை தாக்கிய கட்சியினர்
சிங்கம்புணரி அருகே 'பஞ்சரான' சாலை வழியாக அமைச்சரை பயணிக்க சொன்ன கிராம மக்களை அமைச்சரின் ஆதரவாளர்கள் தாக்கினர்.
சிவகங்கை தொகுதியில் காங்., சார்பில் போட்டியிடும் கார்த்திக்கு ஆதரவாக அமைச்சர் பெரியகருப்பன் எஸ்.புதுார் ஒன்றியத்தில் பிரசாரம் செய்தார்.
உரத்துப்பட்டிக்கு வந்த அமைச்சரை உள்ளூர் தி.மு.க.,வினர் மற்றும் கிராம மக்கள் சூழ்ந்து கொண்டு, உரத்துப்பட்டி- மேலவண்ணாரிருப்பு சாலைப் பணி பல ஆண்டுகளாக பாதியிலேயே நிற்பதாகவும், அவ்வழியாக அமைச்சர் காரில் சென்றால் தான் பிரச்னை தெரியும் என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அமைச்சருடன் வந்த சிலர், வாக்குவாதத்தில் ஈடுபட்டோரை தாக்கினர். அங்கு பதற்றம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் அதே ஊரைச் சேர்ந்த பா.ஜ., ஒன்றிய தலைவர் செல்வராஜுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர், தி.மு.க., ஒன்றிய செயலரின் காரை மறித்து கேள்வி எழுப்ப முயன்றார். அவரையும் அமைச்சரின் ஆதரவாளர்கள் தாக்கினர்.
அங்கிருந்தோர் செல்வராஜை வீட்டுக்குள் கூட்டிச்சென்று கதவை பூட்டி பாதுகாக்க முயன்றனர். ஆனாலும், வீட்டுக்குள் சென்ற கும்பல் செல்வராஜ் மற்றும் அவரது மனைவி மீது தாக்குதல்நடத்தியது.
கேள்வி எழுப்பியதால் தாக்கப்பட்டு காயமடைந்த உள்ளூர் தி.மு.க., பிரமுகர்கள் அழகப்பன், 35, ராசு, 34, பா.ஜ, செல்வராஜ் உள்ளிட்ட ஏழு பேர் பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையில், கிராமத்தினர் தங்களை தாக்கியதாக கூறி அமைச்சரின் ஆதரவாளர்களான விக்னேஷ் பிரபு, விஸ்வநாதன் ஆகியோரும் அதே மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். உலகம்பட்டி போலீசார்விசாரிக்கின்றனர்.
தொடர்ந்து, அமைச்சர் மின்னமலைப்பட்டி, மேலவண்ணாரிருப்பு சென்றபோது அங்கும் அந்த சாலை பணியை கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மூன்று மாதங்களில் உறுதியாக சாலை பணியை முடிப்பதாக அமைச்சர் உறுதி அளித்து நழுவினார்.
வாசகர் கருத்து