நாயுடு சமுதாயத்தின் 12 சதவீத ஓட்டு யாருக்கு?
வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில்,அ.தி.மு.க., வில் நான்கு பேரும், தி.மு.க., வில் இருவரும், காங்கிரஸ், தே.மு.தி.க., - -ம.தி.மு.க., வில் தலா ஒருநாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக இடம் பெற்றுள்ளனர்.
பா.ஜ., வில் நடிகை ராதிகா ஒருவரே இடம் பெற்றுள்ளார். அவர் சினிமா துறையை சார்ந்தவர். முழுநேர அரசியல்வாதிக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்ற அதிருப்தி பா.ஜ.,வில் நீடிக்கிறது.
துாத்துக்குடியில் போட்டியிட விரும்பிய நாயுடு சமுதாயத்தை சேர்ந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன், விவேகம் ரமேஷ் ஆகியோரும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ., கோபால்சாமி, பாண்டுரங்கனையும் வேட்பாளராக்கவில்லை என்ற அதிருப்தி நீடிக்கிறது.
இந்நிலையில், பா.ஜ.,வுக்கு ஆதரவளிக்க நாயுடு சமுதாய சங்கங்கள் முடிவெடுத்துள்ளன.
இதுகுறித்து, நாயுடு சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது:
தமிழகத்தில் எங்கள் சமூகத்திற்கு 12 சதவீத ஓட்டுகள் உள்ளன. தென்காசி, துாத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மேற்கு, வட மாவட்டங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக நாங்கள் உள்ளோம்.
இருப்பினும், சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் எங்கள் சமுதாயத்தினருக்கு தேசிய, மாநில கட்சிகள் முன்னுரிமை தருவதில்லை.
அ.தி.மு.க.,வில் ஜெயலலிதா தலைமைக்கு முன், எம்.ஜி.ஆர்., தலைமையிலான ஆட்சியில் 60 எம்.எல்.ஏ.,க்கள் வரை இருந்தனர். ஜெயலலிதா காலத்தில், முக்குலத்தோர் சமுதாயத்திற்கும், கவுண்டர் சமுதாயத்திற்கும் அ.தி.மு.க., முக்கியத்துவம் கொடுத்தது.
தி.மு.க.,வும், அதே பார்முலாவை பின்பற்றியது. இதனால், நாயுடு சமூகத்தை சேர்ந்தவர்கள் தலைவராக இருக்கும், ம.தி.மு.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தோம். இனி அந்த கட்சிகளை ஆதரித்தும் பயனில்லை.
எனவே, இந்த தேர்தலில் பா.ஜ., வுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளோம். அதேநேரம், மற்ற கட்சிகளில் போட்டியிடும் எங்கள் நாயுடு சமுதாய வேட்பாளர்களுக்கு ஓட்டு போட முடிவெடுத்து உள்ளோம்.
இதற்கு நாயுடு சங்கம், பேரவை, நாயுடு மகாஜன சங்கம் என, 14க்கும் மேற்பட்ட அமைப்புகளும் ஆதரவு அளித்துள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து