ஸ்டாலின் செய்வது ஏமாற்று வேலை: அன்புமணி விமர்சனம்
"எந்தக் கூட்டணியில் இருந்தாலும் எங்கள் கொள்கையை விட்டுக் கொடுப்பது கிடையாது. சமூக நீதிக்காக பழனிசாமியும், ஸ்டாலினும் தனிப்பட்ட முறையில் என்ன செய்தார்கள்?" என, பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பினார்.
செய்தியாளர்களிடம் அன்புமணி கூறியதாவது:
தருமபுரி-காவிரி உபரிநீர் திட்டம் வரவேண்டும் என தருமபுரி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கையாக பேசி வருகின்றனர். இதனை செயல்படுத்த பல போராட்டங்களை செய்துள்ளோம்.
தேர்தல் நேரத்தில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பழனிசாமி உறுதியளித்தார். ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. இவர்களுக்கு எல்லாம் மாவட்டம் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.
பா.ம.க., ஏதோ திடீரென பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்ததைப் போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர். 2014 தேர்தலிலும் கூட்டணியில் பா.ஜ., கூட்டணியில் இருந்தோம்.
எந்தக் கூட்டணியில் இருந்தாலும் எங்கள் கொள்கையை விட்டுக் கொடுப்பது கிடையாது. சமூக நீதிக்காக பழனிசாமியும், ஸ்டாலினும் தனிப்பட்ட முறையில் என்ன செய்தார்கள்?
2019ல் பா.ம.க., இல்லையெனில் பழனிசாமி முதல்வராக தொடர்ந்திருக்க முடியாது. வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தும் பழனிசாமி நிறைவேற்றவில்லை.
ஸ்டாலினுக்கு சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்கும் எண்ணம் எதுவும் இல்லை. அதிகாரம் இல்லை எனச் சொல்வது ஏமாற்று வேலை.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து