இந்தியாவின் மாடலாக, திராவிட மாடல் மாறும்: கமல் கணிப்பு
"தேசத்தின் பன்முகத்தன்மையை காக்கும் நேரம் இது. அரசியலை விமர்சிக்க வேண்டியது உங்கள் கடமை அதை செய்யும் போது தான் நாடு நன்றாக இருக்கும்" என, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் பேசினார்.
திருச்சி தி.மு.க., கூட்டணி வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து கமல் பேசியதாவது:
எந்த அரசாக இருந்தாலும் விமர்சனத்தை ஏற்க வேண்டும். அது தான் அரசின் தன்மை. இன்று அரசை விமர்சித்தால் தேசத் துரோகம் என சொல்லும் அளவுக்கு மாறிவிட்டது.
தேசத்தின் பன்முகத்தன்மையை காக்கும் நேரம் இது. அரசியலை விமர்சிக்க வேண்டியது உங்கள் கடமை அதை செய்யும் போது தான் நாடு நன்றாக இருக்கும்.
நான் சீட்டுக்காக வரவில்லை, நாட்டுக்காக வந்துள்ளேன். எனக்கு சிக்கல் வரும் போது வீட்டு சாவியை தந்து அனுப்பியவர்கள் நிறைய பேர் உண்டு. தமிழக மக்களுக்கும் இந்தியாவுக்கும் உள்ள காதல் சாதாரணமானதல்ல, அதையும் தாண்டி புனிதமானது.
மதிய உணவுத் திட்டத்தை நீதிக்கட்சி துவங்கி வைத்தது. ஆனால், அதனை தொடர முடியவில்லை. பின் காமராஜர் வந்ததும் அதைச் செயல்படுத்தினார். எம்.ஜி.ஆர்., அதே திட்டத்தை தொடர்ந்தார்.
இன்று முதல்வர் ஸ்டாலின் காலை மற்றும் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இந்தியாவின் நுழைவுவாயிலாகவே தமிழகம் மாற வேண்டும். அப்படி மாற வேண்டும் என்பதே என் ஆசை.
நாம் 1 ரூபாயை மத்திய அரசுக்கு தந்தால் அவர்கள் 29 பைசா மட்டுமே திருப்பி தருகின்றனர். அந்த 29 பைசாவில் தான் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள்.
எங்களிடம் 1 ரூபாய் தந்து பாருங்கள். இந்தியாவின் மாடலாக திராவிட மாடல் மாறும். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மகளிருக்கான திட்டஙகளை நாடு முழுதும் செயல்படுத்தினால் உலகம் நம்மை திரும்பி பார்க்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து