புறக்கணிக்கும் ஆளுங்கட்சியினர் கொந்தளிப்பில் காங்கிரசார்
தி.மு.க.,வுடன் இணைந்து தேர்தல் பணிகளை செய்ய மாட்டோம் என தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் மேற்கு வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாவூர்சத்திரத்தில் கீழப்பாவூர் மேற்கு வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம், வட்டார தலைவர் குமார பாண்டியன் தலைமையில் நடந்தது.
மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர் வைகுண்டராஜன் முன்னிலை வகித்தனர்.
தென்காசி லோக்சபா தேர்தலில் தி.மு.க., மாவட்ட தலைமை, கூட்டணி கட்சி நிர்வாகிகளை அழைத்து பேச தவறியதை கண்டித்தும், தி.மு.க.,வுடன் சேர்ந்து தேர்தல் பணிகளை செய்ய மாட்டோம் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை நிர்வாகிகள் ஏற்று கையெழுத்திட்டனர்.
காங்., நிர்வாகிகள் கூறுகையில், 'தேர்தல் செலவுக்கான பணத்தை தி.மு.க.,வினர் வைத்துக் கொண்டு காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கு கொடுப்பதுமில்லை; எங்களை மதிப்பதுமில்லை. தேர்தல் பணி தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தாமல் தன்னிச்சையாக பிரசாரம் செய்து வருகின்றனர்'என்றனர்.
லோக்சபா தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், தி.மு.க.,வினருடன் இணைந்து தேர்தல் பணிகளை செய்ய மாட்டோம் என காங்கிரஸ் நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியது, கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்திஉள்ளது.
வாசகர் கருத்து