வேட்பாளர் கணக்கு ரூ.2 லட்சம் அதிகாரிகள் கணக்கு ரூ.22 லட்சம்
காஞ்சிபுரம் தனித் தொகுதியில் தி.மு.க., சார்பில் செல்வம், அ.தி.மு.க., சார்பில் பெரும்பாக்கம் ராஜசேகர், பா.ம.க., சார்பில் ஜோதி உட்பட 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பிரசார நேரத்தில் கொடி வாங்குவது, வாகன வாடகை, ஸ்பீக்கர் வாடகை, மேடை அமைப்பது, கட்சி அலுவலகம் திறப்பது உள்ளிட்ட பல்வேறு செலவுகளை, தேர்தல் கமிஷனுக்கு, வேட்பாளர்கள் சார்பில் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
இதை மூன்று தவணைகளாக செய்யலாம். முதல் தவணையாக ஏப்., 2ம் தேதிக்குள் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, காஞ்சிபுரம் வேட்பாளர்கள் தங்களது முதல் தவணை செலவு கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.
தி.மு.க., வேட்பாளர் செல்வம் சார்பில், கடந்த மாதம் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை செலவான விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதில், 1.99 லட்சம் ரூபாய், பிரசாரத்திற்கு பல வகையில் செலவானதாக கணக்கு தாக்கல் செய்துள்ளார். ஆனால், வேட்பாளரின் பிரசார நிகழ்ச்சிகளை பின்தொடர்ந்து வீடியோ பதிவு செய்யும் தேர்தல் அதிகாரிகள், அப்போது நடந்த செலவுகளை கணக்கிட்டு, 22.75 லட்சம் ரூபாய் செலவானதாக கணக்கு எழுதியுள்ளனர்.
இரண்டுக்கும் 20.7 லட்சம் ரூபாய் வித்தியாசம் வருவதால், தி.மு.க., நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கான ஒப்புதலையும், தேர்தல் செலவின பார்வையாளர் மதுக்கர் ஆவேஸ் வழங்கியுள்ளார்.
அதேபோல, அ.தி.மு.க., வேட்பாளர் ராஜசேகர் தரப்பில், 11.11 லட்சம் ரூபாய் பிரசாரத்திற்கு செலவானதாக கணக்கு காண்பித்துள்ளனர். தேர்தல் அதிகாரிகள் தரப்பில் 17.83 லட்சம் ரூபாய் செலவானதாக கணக்கிட்டுள்ளனர். இரண்டுக்கும் இடையே, 6.7 லட்சம் ரூபாய் வித்தியாசம் உள்ளது.
பா.ம.க., வேட்பாளர் ஜோதி தரப்பில் 7.44 லட்சமும், தேர்தல் அதிகாரிகள் தரப்பில் 9 லட்சம் ரூபாய் செலவானதாகக் கணக்கிடப்பட்டுள்து.
தவிர, ஆறு சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தல் செலவினம் ஏதும் இல்லை என, கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.
வாசகர் கருத்து