வாரிசு அரசியலுக்கு இந்த தேர்தலோடு முற்றுப்புள்ளி: பழனிசாமி கணிப்பு
"நான் மோடியை எதிர்க்கவில்லை என்கிறார்கள், நாங்கள் ஆட்சியில் இருந்தால் தானே எதிர்க்க முடியும். நான் முதல்வராக இருந்திருந்தால் தமிழகத்துக்கு எதிராக உள்ள அனைத்து திட்டத்தையும் எதிர்த்து இருப்பேன்" என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.
அரக்கோணம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் விஜயனை ஆதரித்து பழனிசாமி பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலினும் உதயநிதியும் கண்ட கனவு மாறிவிட்டது. இதனால் தோல்வி பயத்தில் என்ன பேசுகிறோம் எனத் தெரியாமல் பேசுகின்றனர். தேர்தல் வாக்குறுதிகளாக 520 அறிவிப்புகளை தந்துவிட்டு அதில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை.
பொய் சொல்வதற்கு நோபல் பரிசு தந்தால் அதை ஸ்டாலினுக்கு தரலாம். ஆனால், நான் பொய் சொல்வதாக ஸ்டாலின் சொல்கிறார். கவர்ச்சிகரமான அறிவிப்புகளை தந்து ஆட்சிக்கு வந்தவர்கள், இனி மக்களை ஏமாற்ற முடியாது.
வாரிசு அரசியலுக்கு இந்த தேர்தலோடு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். உங்கள் உருட்டல் மிரட்டலுக்கு பயப்படும் கட்சி அ.தி.மு.க., கிடையாது, விவசாயியாக இருந்தவரை என்ன வேண்டுமானாலும் பேசலாம் என நினைத்தால் அது தவறு.
நான் முதல்வராக இருந்தபோது நினைத்திருந்தால் எவ்வளவோ வழக்குகளை தி.மு.க.,வினர் மீது தொடுத்திருக்கலாம்அதை நான் செய்யவில்லை. 3.50 லட்சம் கோடி கடன் வாங்கியது தி.மு.க., ஆட்சியில் மிச்சம்.
அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்தை 'ஸ்டிக்கர்' ஒட்டி செயல்படுத்தி வருகிறது தி.மு.க.,. அரிசி, பருப்பு, எண்ணெய் விலை என அனைத்துப் பொருள்களின் விலையும் உயர்ந்துவிட்டன.
நாட்டில் மக்களை பற்றி சிந்திக்காத ஒரு முதல்வர் ஸ்டாலின் மட்டுமே. பெட்டி வாங்குவதில் மட்டும் தி.மு.க.,வினர் கில்லாடி. சதுரங்க வேட்டை படத்தில் வரும் வசனம் போல், மக்கள் ஆசையைத் துாண்டி ஏமாற்றிவிட்டார் ஸ்டாலின்.
நான் மோடியை எதிர்க்கவில்லை என்கிறார்கள், நாங்கள் ஆட்சியில் இருந்தால் தானே எதிர்க்க முடியும். நான் முதல்வராக இருந்திருந்தால் தமிழகத்துக்கு எதிராக உள்ள அனைத்து திட்டத்தையும் எதிர்த்து இருப்பேன்.
காவேரி விவகாரத்தில் பார்லிமென்ட்டில் 22 நாட்கள் அழுத்தம் தந்தோம். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி குழுவும் அமைக்கப்பட்டது. பார்லிமென்டில் மசோதா கொண்டு வந்தால் தான் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும், இங்கு பேசினால் என்ன நடக்கும்?
38 எம்.பி.,களும் அழுத்தம் தந்திருந்தால் நீட் தேர்வுக்கு தீர்வு கிடைத்திருக்கும். விளம்பரத்துக்காக கட்சியை நடத்துகிறது தி.மு.க., எங்கள் ஆட்சியில் இன்று 2160 அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர். உங்ள் ஆட்சியில் இது போன்ற சாதனைகளை செய்ய முடிந்ததா?
தமிழகத்தில் கஞ்சா விற்பனையாகாத இடமே கிடையாது. தி.மு.க., நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் பல ஆயிரம் கோடி போதைப்பொருளைக் கடத்தி இருக்கிறார். சூதாட்ட நிறுவனத்திடமிருந்து தி.மு.க., 509 கோடி ரூபாயை தேர்தல் பத்திரம் வாயிலாக வாங்கியுள்ளது.
தி.மு.க.,வுக்கு 656 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் வாயிலாக கிடைத்துள்ளது, என்ன காரணத்துக்காக இவ்வளவு பணம் அவர்கள் தந்துள்ளனர். இதில் மர்மம் இருக்கிறது. தேர்தல் பத்திரத்தைப் பற்றி பேச ஸ்டாலினுக்கு என் தகுதி இருக்கிறது?
சொத்துவரி, மின்கட்டணம் உயர்வு, விலைவாசி உயர்வு என மக்கள் நொந்து போய் உள்ளனர். இந்த சூழலில், 'நீங்கள் நலமா?' எனக் கேட்கிறார் ஸ்டாலின்.
ஊழல் செய்வது, போதைப் பொருள் விற்பனை, அதிக கடன் வாங்கிய மாநிலத்தில் முதலிடம் என சூப்பர் முதல்வர் பட்டம் தான் ஸ்டாலினுக்கு பொருந்தும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து