தேர்தல் நடத்தை விதிகளை மீறிய முதல்வர்: நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க., வலியுறுத்தல்
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது, அ.தி.மு.க., சார்பில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஆரணி தொகுதியில் மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களுக்கு, தமிழக அரசு முத்திரையுடன் முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம், பதிவு தபாலில் அனுப்பப்பட்டு உள்ளது. அதில், மகளிருக்காக தமிழக அரசு செய்துள்ள பணிகளை பட்டியல் இட்டுள்ளார்.
சீலிட்ட கவர்
மேலும், 'மகளிர் உரிமைத்தொகை 1,000 ரூபாய், இனி மாதந்தோறும் தங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி இணை செயலர் பாலமுருகன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் புகார் அளித்துள்ளார்.
பாலமுருகன் கூறியதாவது:
தேர்தல் நடத்தை விதிகளை மீறி, தி.மு.க., அரசு மகளிர் வாக்காளர்களை கவர, ஏப்., 6, 10ம் தேதியிட்டு, தமிழக அரசு முத்திரையுடன், ஆரணி தொகுதியில் அமைச்சர் மஸ்தான் பெயரில் சீலிட்ட கவரில் மகளிர் உதவித்தொகை வழங்கியதாக, முதல்வர் அனுப்பிய கடிதத்தை பதிவு தபாலில் அனுப்பி உள்ளார்.
அரசு அனுப்புவதுபோல் கடிதம் அனுப்புவது தவறு. தேர்தல் நடத்தை விதிமுறையின்படி அனுப்பக் கூடாது. இவ்வாறு கடிதம் அனுப்புவதை தடை செய்யும்படியும், முதல்வர், அமைச்சர் மஸ்தான், வேட்பாளர் தரணிவேந்தன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., வேட்பாளரின் பொது முகவர் ஞானவேல், தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியுள்ள புகார்:
கள்ளக்குறிச்சி தொகுதியில், வட்டார வளர்ச்சி அலுவலகங்களில், தற்காலிகமாக நியமிக்கப்பட்ட தொழில்நுட்பாளர்கள், அலுவலக உதவியாளர்களை, தி.மு.க.,வினர் வீடு வீடாகச் சென்று, வாக்காளர்களின் வாக்காளர் அடடையாள எண், ஆதார் எண் போன்றவற்றை சேகரிக்க அனுப்புகின்றனர்.
அவர்கள் வாக்காளர்களை சந்தித்து, தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்கும்படி கூறி, பணம் வழங்குகின்றனர். பணம் வாங்க மறுத்தால், உங்கள் ரேஷன் கார்டை ரத்து செய்து விடுவோம் என, மிரட்டுகின்றனர்.
தாக்குதல்
அதேபோல் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோரிடம், தபால் ஓட்டு பெறப்படுகிறது. அவர்களை தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்கும்படி, தி.மு.க.,வினரால் மிரட்டப்படுகின்றனர். இப்பணிகளை தி.மு.க., ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், ஊராட்சி செயலர் கண்காணிக்கின்றனர்.
இதை தடுக்கும் அ.தி.மு.க.,வினர் தாக்கப்படுகின்றனர். இதை தடுக்கவும், தேர்தல் விதிகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், மாவட்ட தேர்தல் அலுவலருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து