38 எம்.பி.,க்களால் எதாவது பலன் கிடைத்ததா: அன்புமணி கேள்வி
"தி.மு.க., கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் என்ற ஒருவர் இருக்கிறாரா. அ.தி.மு.க.,வுக்கு ஓட்டுப் போட்டு ஏன் வீணடிக்க வேண்டும்" என, பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பினார்.
தென்சென்னையில் பா.ஜ., வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து, அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகாலம் பார்லிமென்ட்டுக்கு 38 பேரை அனுப்பினீர்கள். எதாவது ஒரு துரும்பு அளவுக்காவது அவர்கள் பயன்பட்டார்களா.. அந்த தவறை மீண்டும் செய்யாதீர்கள். சென்னையில் டிசம்பர் மாதம் வந்தாலே மக்களுக்கு பயம் வந்துவிடும். எப்போது வெள்ளம் வரும் என்ற அச்சம் தான் காரணம்.
மழை என்பது இயற்கை கொடுத்த வரம். அதை நாம் பாதுகாக்க வேண்டும். இந்தக் கட்சிகள் 57 ஆண்டுகள் ஆட்சி செய்து மழையை சாபமாக மாற்றிவிட்டார்கள். வெள்ளத்தை தடுக்க முடியாது. ஆனால், பாதிப்பை தடுக்க முடியும். இவர்களிடம் அதற்கான தொலைநோக்கு பார்வை இருக்கிறதா?
பள்ளிக்கரணையில் சதுப்பு நிலம் இருக்கிறது. இந்தியாவில் எந்த நகரத்துக்கும் கிடைக்காத வரம் இது. 1967ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த போது 12500 ஏக்கர் பரப்பளவில் சதுப்பு நிலம் இருந்தது. அங்கு எவ்வளவு மழை பெய்தாலும் மழை நீரை உறிஞ்சிவிடும். ஆனால், இன்று 2000 ஏக்கர் நிலம் தான் மிச்சம் உள்ளது. 10,500 ஏக்கரை அழித்துவிட்டார்கள்.
2015ல் சென்னையில் வெள்ளம் வந்தது. அப்போது, நாம் விரும்பும் சென்னை என்ற ஆவணத்தைத் தயாரித்தேன். 10 ஆண்டுகளில் அடுத்த வெள்ளம் வரும் என்றேன். 8 ஆண்டுகளிலேயே வெள்ளம் வந்தது. அடுத்த 6 ஆண்டுகளில் மற்றொரு வெள்ளம் வரும்.
இன்னும் இந்தக் கட்சிகளை எல்லாம் நம்ப வேண்டுமா. இவர்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக பா.ம.க., கூட்டணி முடிவை எடுத்தது. தமிழகத்தை இவர்கள் ஆண்டது போதும். 2026ல் ஒரு மாற்றம் வர வேண்டும் என்றால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
இந்த இரு கட்சிகளையும் நம்பி பலன் இல்லை.தி.மு.க., கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் என்ற ஒருவர் இருக்கிறாரா. அ.தி.மு.க.,வுக்கு ஓட்டுப் போட்டு ஏன் வீணடிக்க வேண்டும். மோடி மீண்டும் 3வது முறையாக பிரதமர் ஆவார்.
கொள்கை வேறு. லட்சியங்கள் வேறு. எந்தக் கூட்டணியில் இருந்தாலும் சமூக நீதியை விட்டுக் கொடுக்க மாட்டோம். ஒரே வாரத்தில் நீட்டை ரத்து செய்வோம் என தி.மு.க., கூறியது. எவ்வளவு பெரிய மோசடி இது.
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எனச் சொல்லியே 50, 60 வருடங்கள் இப்படித்தான் பேசுவார்கள். உங்களுக்கே சலிப்பு வரவில்லையா. சட்டையை மாற்றிக் கொள்வது போல இவர்கள் கொள்கையை மாற்றிக் கொள்வார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து