'39 எம்.பி.,க்கள் ஜெயிச்சு என்னத்த கிழிச்சிட்டாங்க?'
தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா, 'தி.மு.க., - அ.தி.மு.க., எம்.பி.,க்கள் வெற்றி பெற்று செய்தது என்ன' என்று பேசிய வீடியோவை, சமூக வலைதளங்களில் பா.ஜ.,வினர் வெளியிட்டு, 'தமிழகத்திற்கு நன்மை செய்ய பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்கவும்' என, பிரசாரம் செய்கின்றனர்.
இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க.,வில் இருந்து வெற்றி பெறும் எம்.பி.,க்கள், லோக்சபாவில் தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் குறித்து பேசுவதில்லை. குறிப்பாக, தங்கள் தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து கூட பேசுவதில்லை. கட்சி தலைமை சொல்லும் விஷயங்களை மட்டுமே பேசுகின்றனர்.
பா.ஜ.,வுக்கு ஆதரவாக...
அ.தி.மு.க., கூட்டணியில், முக்கிய கட்சியாக தே.மு.தி.க., உள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், '38 எம்.பி.,க்கள் வெற்றி பெற்ற போதிலும் அ.தி.மு.க., என்ன செய்தது; 39 எம்.பி.,க்கள் வெற்றி பெற்ற போதிலும் தி.மு.க., என்ன செய்தது? யாரும் ஒன்றும் சாதிக்க போவதில்லை. அனைத்து எம்.பி.,க்களும் தி.மு.க.,வில் உள்ளனர்; ஒரு சிறு திட்டம் கொண்டு வர முடிகிறதா? எம்.பி.,க்கள் டில்லிக்கு செல்லாமல் இங்கேயே முடங்கியுள்ளனர்' என, பேசியுள்ளார்.
இதை தான் பா.ஜ.,வும் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. மொத்தத்தில் பா.ஜ., கருத்தையே பிரதிபலிக்கும் பிரேமலதா, எங்கள் கட்சிக்கு உதவியதாகவே கருதுகிறோம். தேர்தலில் பிரேமலதா பேச்சு, பா.ஜ.,வுக்கு ஆதரவாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
ஜெ., பாணியில் பிரசாரம்
இதற்கிடையே ஜெயலலிதா பாணியில் பிரேமலதா பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
''வெற்றியை வேட்பாளருக்கு தருவீர்களா? இரட்டை இலைக்கு வாய்ப்பு தருவீர்களா? இரட்டை இலை வென்றது என்ற சரித்திரத்தை உருவாக்குவீர்களா?” எனக் கேட்டு, வாக்காளர்களை ஈர்க்க முயல்கிறார்.
வாசகர் கருத்து