எல்.முருகன் மட்டும் தான் கட்சியா: அ.தி.மு.க.,வில் இணைந்த 'தடா' பெரியசாமி
தமிழக பா.ஜ., பட்டியல் அணியின் மாநில தலைவர் 'தடா' பெரியசாமி, அ.தி.மு.க.,வில் தன்னை இணைத்துக் கொண்டார். "பட்டியல் சமூகத்துக்கு பா.ஜ.,வில் எந்த அங்கீகாரமும் கிடைப்பதில்லை" என, 'தடா' பெரியசாமி விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஒரேகட்டமாக நடத்தப்படுவதால், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக பா.ஜ.,வின் பட்டியல் அணியின் மாநில தலைவர் 'தடா' பெரியசாமி, அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளார்.
பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நான் நல்ல முடிவை எடுத்துள்ளேன். என்னைப் போல மற்றவர்களும் பா.ஜ.,வில் இருந்து வெளியே வருவார்கள். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட பா.ஜ., வாய்ப்பு கொடுத்துள்ளது. இதனால் எனக்கு எந்தவித அதிருப்தியும் இல்லை.
ஆனால், என்னுடைய சொந்த தொகுதி சிதம்பரம். அங்கு ஒரு வேட்பாளரை நிறுத்தும்போது என்னிடம் கேட்டிருக்க வேண்டும். நான் பா.ஜ.,வில் எஸ்.சி அணியின் மாநில தலைவர் பொறுப்பில் இருந்தேன். கார்த்தியாயினியின் சொந்த ஊர் வேலூர். ஆனால், சிதம்பரத்தில் போட்டியிடுகிறார்.
பொன். பாலகணபதி, எல்.முருகன் ஆகியோருக்கு கொடுத்ததிலும் வருத்தம் இல்லை. ஆனால், ஒரு ஒரு கேள்வி எழுகிறது. எல்.முருகன் மட்டும் தான் கட்சியா. அவர் எஸ்.சி-எஸ்.டி கமிஷனின் துணைத் தலைவராக இருந்தார். பின், தாராபுரத்தில் சீட் கொடுத்தனர். பிறகு ராஜ்யசபா எம்.பி., ஆனார். இணை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
மீண்டும் ராஜ்யசபா சீட்டை அவருக்கு கொடுத்துள்ளனர். தற்போது நீலகிரி தொகுதியில் போட்டியிடுகிறார். ஒருவருக்கு மட்டுமே இவ்வளவு வாய்ப்புகளை கொடுப்பது ஏன். அவர் மட்டும் தான் கட்சியா?
அண்ணாமலை, எல்.முருகன், கேசவவிநாயகம் ஆகியோர் கட்சியை குழி தோண்டிப் புதைக்கின்றனர். தமிழகத்தில் பா.ஜ., வளரவில்லை. இங்கு கூட்டம் கூடும். அவ்வளவு தான். கோவை தொகுதியில் அண்ணாமலை தோற்பார். அவர் மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே பா.ஜ தோற்கும்.
கட்சியில் யாரிடம் அண்ணாமலை கலந்து ஆலோசிப்பதில்லை. எங்களை அவர் மதிப்பது இல்லை. பட்டியல் சமூகத்துக்கு பா.ஜ.,வில் எந்தவித அங்கீகாரமும் இல்லாததால் அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து