'உரிய முறையில் அழைக்கவில்லை' மனம் திறந்த இளங்கோவன்
'ஒதுங்கும் இளங்கோவன்; தி.மு.க.,வினர் அப்செட்' என, நேற்று நம், 'தேர்தல் களம்' இணைப்பிதழில் செய்தி வெளியானது. அச்செய்தியை படித்தபடியே, ஈரோட்டில், தமிழக காங்., முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ.,வுமான இளங்கோவன் கூறியதாவது:
உண்மைதான்; தேர்தல் துவங்கியது முதல், தி.மு.க.,வினர் முறையாக அழைக்கவில்லை. வேட்புமனு தாக்கல் அன்று, கூட்டணி கட்சியினர் என்ற முறையில், எங்களையும் அழைத்து செல்வர் என, 2 மணி நேரம் காத்திருந்தோம். பிற மாவட்டங்களில் காங்., நிர்வாகிகளை அழைத்து சென்றுதான் தாக்கல் செய்துள்ளனர். காங்., வேட்பாளர்களும், தி.மு.க., நிர்வாகிகளுடன் சென்றுதான் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இங்கு யாரும் அழைக்காததால், நாங்களும் செல்லாமல் விட்டுவிட்டோம்.
அதன்பின், 'அறிவாலயத்தில் இருந்து அன்று காலை தி.மு.க.,வினருக்கு தகவல் வந்ததாம். வேட்பு மனு தாக்கலுக்கு எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் யாரும் செல்ல வேண்டாம்' என, கூறியதாக அறிந்தேன்.
இடையிடையே பிரசாரத்துக்கு அவர்கள் சென்றபோதும், எங்களுக்கு ஏதும் சொல்லவில்லை. அதனால், நாங்களும் போகவில்லை. எங்களை மதிக்கவில்லை என அதை பார்க்க வேண்டாம். இருந்தாலும், அவர்களாக அழைத்தால், பிரசாரத்துக்கு செல்வேன். மற்றவர்களும் வருவர்.
கடந்த இடைத்தேர்தலில் நான் கும்பிட்டபடி மட்டுமே சென்றேன். அத்தனை பணிகளையும் தி.மு.க.,வினர்தான் செய்தனர். அதனால், நான் கட்டாயம் ஈரோடு தொகுதியில் பிரசாரம் செய்வேன்.
எனக்கு சற்று உடல் நிலை சரி இல்லை. என்னால் வெகுதுாரம் நடந்து செல்லவோ, பிரசாரத்தில் செல்லவோ முடியவில்லை. அதனால் தமிழகத்தில் பிரசாரம் செய்ய செல்லவில்லை. தமிழக பிரசாரத்துக்கு ராகுல் வரும்போது, ஈரோட்டுக்கும் அழைத்து வர வேண்டும் என, மாநில தலைவர் செல்வப்பெருந்தகையிடம் தேதி, நேரம் ஒதுக்க கேட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இளங்கோவனின் விரக்தி பேச்சு குறித்து அங்கிருந்த காங்., முக்கிய நிர்வாகிகள் கூறியதாவது:
தி.மு.க.,வினர் எங்களை மதிக்கவில்லை என்பது உண்மைதான். ஒரு சீட் கூட பெறாத மக்கள் நீதி மய்யம் கமலை கூட, டி.ஆர்.பாலு உட்பட பல தலைவர்கள் வீடு தேடி சென்று பிரசாரத்துக்கு வந்து பேசும்படி அழைப்பு விடுத்து கூட்டி செல்கின்றனர்.
தமிழக முன்னாள் காங்., தலைவரான இளங்கோவனை பெயருக்கு கூட தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் அழைக்கவில்லை. அந்த வருத்தத்தை தான் இளங்கோவன் அதிருப்தியாக வெளிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து