வி.சி.,க்கு பானை சின்னம் கிடைக்குமா : ம.தி.மு.க.,வின் சின்னம் எது?
தமிழகத்தில் வேட்புமனு பரிசீலனை முடிவடைந்துள்ள நிலையில், 1,085 மனுக்களை ஏற்றுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. ம.தி.மு.க., வி.சி., ஆகிய கட்சிகளுக்கான சின்னங்கள் குறித்த தகவல், இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் இன்று வெளியாக உள்ளது. முன்னதாக, மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 1,403 வேட்பாளர்கள், 1,749 மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்தப் பட்டியலில் கரூரில் மட்டும் அதிகபட்சமாக 73 பேரும் வடசென்னையில் 67 பேரும் தென்சென்னையில் 64 பேரும் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, வேட்பு மனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். இதில், உரிய ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. முடிவில், 1,085 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
இறுதியாக வெளியான பட்டியலின்படி கரூரில் அதிகபட்சமாக 56 மனுக்களும் நாகப்பட்டினத்தில் 9 பேரின் மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு இன்று (30ம் தேதி) மாலை வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர், இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட உள்ளது.
அதேநேரம், ம.தி.மு.க., வி.சி., ஆகிய கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படவில்லை. வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியான பிறகு சின்னங்களை ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
'வி.சி.,க்கு பானை சின்னத்தை ஒதுக்க வாய்ப்பில்லை' எனக் கூறிய பிறகும், அக்கட்சியின் வேட்பாளர்கள் பானை சின்னத்துக்கு ஓட்டு கேட்டு வருகின்றனர். இதில், முன்னுரிமை அடிப்படையில் வி.சி..,வுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
காரணம், விழுப்புரம் தொகுதியில் பானை சின்னத்தைக் கேட்டு யாரும் விண்ணப்பிக்கவில்லை. சிதம்பரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர், பானை சின்னம் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதனால், 'திருமாவளவனுக்கு பானை சின்னம் கிடைக்குமா?' என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருச்சியில் காஸ் சிலிண்டர் அல்லது தீப்பெட்டி சின்னம் கேட்டு ம.தி.மு.க., விண்ணப்பித்திருந்தது. இதில், காஸ் சிலிண்டர் சின்னத்தை 4 பேர் கேட்டுள்ளதால், தீப்பெட்டி சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வாசகர் கருத்து