கோஷ்டி பூசல், கைவிரிக்கும் தி.மு.க., : விழுப்புரத்தில் பானைக்கு வந்த சோதனை
விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாருக்கு எதிராக, தி.மு.க., நிர்வாகிகளும், சொந்த கட்சியினரும், ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.தி.மு.க., கூட்டணியில், வி.சி., கட்சி சார்பில், சிதம்பரத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் போட்டியிடுகின்றனர்.
விழுப்புரம் லோக்சபா தொகுதியில் வானுார், திண்டிவனம், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன.அவற்றில், வானுார், உளுந்துார்பேட்டை ஆகிய இரண்டு தொகுதிகளும் அ.தி.மு.க., வெற்றி பெற்றவை.
மற்ற நான்கும் தி.மு.க., வென்றவை.விழுப்புரம், வானுார், விக்கிரவாண்டி, திருக்கோவிலுார் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளும், அமைச்சர் பொன்முடி கட்டுப்பாட்டிலும்;
திண்டிவனம் தொகுதி, அமைச்சர் மஸ்தான் கட்டுப்பாட்டிலும்; உளுந்துார்பேட்டை தொகுதி, அமைச்சர் எ.வ.வேலு கட்டுப்பாட்டிலும் உள்ளன.இந்த ஆறு தொகுதிகளிலும் தேர்தல் பணிகளுக்கு செலவு செய்யும் பொறுப்பு, எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள், ஒன்றிய செயலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வேலு தவிர்த்து மற்ற அமைச்சர்கள், செலவை கட்சி நிர்வாகிகள் தலையில் கட்டி விட்டனர்.ரவிக்குமாருக்கு ஆதரவாக திருமாவளவனும், அமைச்சர் உதயநிதியும் பிரசாரம் செய்தும், தேர்தல் பணிகள் பின்தங்கியுள்ளன.முதல் காரணம், தேர்தல் பணிகளுக்கான செலவை சமாளிக்க முடியாமல் தி.மு.க., நிர்வாகிகள் திணறுகின்றனர். இரண்டாவது
காரணம், வி.சி., கட்சியில் இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு தலா ஒரு மாவட்ட செயலர் நியமிக்கப்பட்டுள்ளதால், கோஷ்டி பூசல் தலைவிரித்தாடுகிறது.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, திண்டிவனம் மா.செ., திலீபனுக்கும், முன்னாள் மா.செ., சேரனுக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. இப்படி சொந்த கட்சி நிர்வாகிகளும், தி.மு.க.,
நிர்வாகிகளும் ரவிக்குமாருக்கு ஒத்துழையாமை இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பதால், பானை ஜெயிக்குமா என்ற கேள்வி வாக்காளர்களிடம் எழுந்துள்ளது.
வாசகர் கருத்து