கனவு காண்பது பா.ஜ.,வின் உரிமை: கனிமொழி
" இண்டியா கூட்டணியின் ஆட்சி மத்தியில் அமைய வேண்டும். பாஜ., எந்த பொறுப்புக்கும் வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்" என, தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி தெரிவித்தார்.
கோவையில் தி.மு.க., வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்த வந்த கனிமொழி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவையில் ஸ்டாலின் தேர்வு செய்து நிறுத்தியுள்ள வேட்பாளர், நிச்சயம் வெற்றி பெறுவார். இங்கு இரண்டாவது இடத்துக்குத் தான் மற்ற கட்சிகளுகு இடையே போட்டி இருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது. முதல்வரின் திட்டங்களை நம்பித் தான் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம்.
கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் தமிழக அரசு செய்துள்ள திட்டங்கள், மக்களிடம் சென்று சேர்ந்துள்ளன. இண்டியா கூட்டணியின் ஆட்சி மத்தியில் அமைய வேண்டும். பாஜ., எந்த பொறுப்புக்கும் வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.
தமிழகம் மற்றும் புதுவையில் 40 இடங்களிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். மகளிர் உரிமைத்தொகை மூலம் 1.15 கோடி மகளிர் பயன் பெற்றுள்ளனர். ஆனால், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஒரே செல்போன் நம்பரை வைத்து மோசடி செய்தனர். அதைப் போன்ற ஒரு மோசடியை பார்க்க முடியாது.
புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன், காலை உணவுத் திட்டம் போன்றவற்றை எல்லாம் பெயரளவுக்கு செயல்படுத்தவில்லை. போதைப் பொருள் விவகாரத்தில் தவறு நடந்திருந்தால் மத்திய உள்துறை அமைச்சகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்குத் தான் அந்தப் பொறுப்பு இருக்கிறது.
மத்திய அரசுக்குத் தேவையான உதவிகளை மாநில அரசு செய்யும். குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் பல லட்சம் மதிப்பிலான போதைப்பொருள்கள் சிக்கின. அதை யார் நடத்துகிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும். அது குறித்த விசாரணையில் என்ன நடந்தது என்பது இதுவரையில் வெளியில் வரவில்லை. சொல்லப் போனால், விசாரணை நடக்கிறதா என்பதே தெரியவில்லை.
தமிழகத்தில் பா.ஜ., 60 சதவீதம் அல்ல 90 சதவீத வாக்குகளைக் கூட வாங்கலாம். கனவு காண்பது பா.ஜ.,வின் உரிமை. ஆனால், ஒரு ரூபாய் கூட செலவழிக்க மாட்டோம் எனக் கூறுகிறவர்கள், எதற்காக தேர்தல் பத்திரங்களின் மூலம் பணம் வாங்க வேண்டும்?
இவ்வாறு கனிமொழி கூறினார்.
வாசகர் கருத்து