Advertisement

தி.மு.க., கூட்டணியில் குழப்பம் : பின்னணியில் கமல்

தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி இருந்தபோது, தி.மு.க., குழுவினரிடம், 12 தொகுதிகளை கேட்டு பட்டியல் வழங்கப்பட்டது.

தி.மு.க., தரப்பில், தமிழகம், புதுச்சேரி உட்பட 7 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு காரணம், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி. அக்கட்சி, 2 தொகுதிகளை, தி.மு.க.,விடம் கேட்டுள்ளது. அந்த இரண்டை, காங்கிரஸ் கட்சியிடமிருந்து எடுத்து கொடுக்க, தி.மு.க., திட்டமிடுகிறது.

கடந்த தேர்தலில், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில், இரண்டை குறைத்து வாங்க, காங்கிரஸ் விரும்பவில்லை. அதே நேரத்தில், காங்கிரசின் 'கை' சின்னத்தில், மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டால் விட்டுக் கொடுக்க தயாராக உள்ளது.

அதேபோல் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கமல் விரும்பினால், தி.மு.க.,வும் 'சீட்' கொடுக்க தயாராக இருப்பதாக, அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால், 'டார்ச் லைட்' சின்னத்தில் போட்டியிடுவதில், கமல் உறுதியாக நிற்கிறார். இச்சூழலில், காங்., மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார், நாளை சென்னை வருகிறார்.

இதற்கிடையில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், தி.மு.க., தலா இரண்டு தொகுதிகளை நேற்று ஒதுக்கியுள்ளது. ஆனால், எந்தெந்த தொகுதிகள் என்பதை அறிவிக்க முடியவில்லை. அதற்கு காரணமும் கமல் கட்சி தான் என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், மார்க்சிஸ்ட் கட்சிக்கு கோவை, மதுரை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கோவையில் நடராஜனும், மதுரையில் சு.வெங்கடேசனும் வெற்றி பெற்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட திருப்பூரில் சுப்பராயனும், நாகப்பட்டினத்தில் செல்வராஜும் வெற்றி பெற்றனர். அதே தொகுதிகளை கொடுத்தால் போதும் என்ற நிலைப்பாட்டில் தான் இரு கட்சிகளும் உள்ளன. அவற்றை மீண்டும் தருவதில், தி.மு.க.,வுக்கு தான் சிக்கல் உள்ளது.

அதற்கு காரணம், மக்கள் நீதி மய்யம் கட்சி. அதன் தலைவர் கமலுக்கு ஒரு தொகுதியை தந்து, கூட்டணியில் சேர்க்க, தி.மு.க., விரும்புகிறது. அவரோ கோவை அல்லது மதுரை என்பதில் உறுதியாக நிற்கிறார்.

இவ்விரு தொகுதிகளும் தற்போது மார்க்சிஸ்ட் வசம் உள்ளதால், இரண்டில் ஒன்றை விட்டுத் தருமாறு, அக்கட்சியிடம் தி.மு.க., கேட்டுள்ளது. அதற்கு உடன்பட வேண்டுமானால், கோவையை எடுத்துக் கொண்டு, திண்டுக்கல் தருமாறு கேட்கிறது மார்க்சிஸ்ட். கடந்த தேக்கள் வித்தியாசத்தில் வென்ற தொகுதியான திண்டுக்கல்லை எப்படி இழப்பது என, தி.மு.க., யோசிக்கிறது.

அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருக்கிற நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய இரண்டில் ஒன்றில், இம்முறை தி.மு.க., போட்டியிட விரும்புகிறது. அதற்கு பதிலாக, தென்காசியை எடுத்துக் கொள்ளும்படி, தி.மு.க., சொல்கிறது; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தயங்குகிறது.

இதுபோன்ற பிரச்னைகள் காரணமாக, தொகுதி எண்ணிக்கையை முடிவு செய்த தி.மு.க.,வால், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான தொகுதிகளை அடையாளம் காண முடியவில்லை.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்