விளவங்கோடு தொகுதி காலியானதாக அறிவிப்பு! -திருக்கோவிலூருக்கு எப்போது?
பா.ஜ.,வில் காங்கிரஸ் கட்சியின் விஜயதரணி இணைந்ததையடுத்து, விளவங்கோடு தொகுதி காலியாக உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியில் 2021 சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஜயதரணி வெற்றி பெற்றார். இந்நிலையில், காங்கிரஸ் தலைமை மீதான அதிருப்தியில் அக்கட்சியில் இருந்து விலகி, கடந்த வாரம் பா.ஜ.,வில் இணைந்தார். இதையடுத்து, தனது எம்.எல்.ஏ., பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.
விஜயதரணியின் ராஜினாமா முடிவை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு சட்டசபை செயலர் சீனிவாசன் கடிதம் அனுப்பினார்.
தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளத்திலும் விளவங்கோடு தொகுதி காலியாக இருப்பதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், லோக்சபா தேர்தலுடன் விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரம், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடியின் எம்.எல்.ஏ., பதவியும் காலியானது. ஆனால், அவர் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்ட திருக்கோவிலூர் தொகுதியை காலியானதாக இன்னும் அறிவிக்கவில்லை. 'தேர்தல் ஆணையம் எப்போது அறிவிக்கும்?' என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
வாசகர் கருத்து