ரூ.921 கோடி சொத்து காட்டியவர் மனு தள்ளுபடி
இந்த தேர்தலில் ஈரோட்டில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் 'ஆற்றல்' அசோக்குமார் அதிபணக்காரராக உள்ளார். அவரைவிட அதிக சொத்து இருப்பதாக கணக்கு காட்டிய ஒருவரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அவர் திருப்பரங்குன்றம் தோப்பூரைச் சேர்ந்த கன. வேழவேந்தன் 50. வேட்புமனு தாக்கலின் போது கடைசி நாளில், கடைசிக்கு முந்தைய நபராக வேக வேகமாக வந்தார். மனுதாக்கல் முடிய சில நிமிடங்களே இருந்ததால் அவருக்கு டோக்கன் கொடுக்கப்பட்டது. கடைசி ஆளாக மனுதாக்கல் செய்து திரும்பினார்.
மனுக்கள் பரிசீலனையின்போது அவரது மனு முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என்ற காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. தன் மனுவில் அவர் காட்டியிருந்த சொத்து மதிப்பு 921 கோடி ரூபாய். தாயாரின் புடவை 2 கோடி ரூபாய் என தெரிவித்துள்ளார். தமிழகத்திலேயே இந்தளவு சொத்து மதிப்பை யாரும் இதுவரை காட்டியதில்லை.
வழக்குகள், கடன்கள், நிதி நிறுவன முதலீடு, வாகனங்கள் உட்பட 90 சதவீத கேள்விகளுக்கு 'இல்லை' என்றே தெரிவித்திருந்தார். அவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, நான் திருச்சி மாவட்டம் மாம்பட்டி ஜமீன் வாரிசு. துங்கபத்ரா முதல் கன்னியாகுமரி வரை எங்கள் ஆளுகையில் இருந்தது. 2011ல் ஏற்கனவே போட்டியிட்டு 300 ஓட்டுகள் வாங்கியுள்ளேன்'' என்றார்.
வாசகர் கருத்து