20 தொகுதிக்கு ஆள் இல்லை: சின்னத்தால் சீமான் கட்சி குழப்பம்
கட்சி சின்னம் பிரச்னையால் 20 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் கிடைக்காமல் நாம் தமிழர் கட்சி தலைமை தவித்து வருகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் ஒதுங்குவதால், அவர்களை சமரசம் செய்யும் முயற்சியும் நடக்கிறது.
நாம் தமிழர் கட்சி, மூன்று தேர்தல்களில் பயன்படுத்திய கரும்பு விவசாயி சின்னத்தை, கர்நாடகாவை சேர்ந்த கட்சிக்கு தேர்தல் கமிஷன் ஒதுக்கீடு செய்துவிட்டது. சின்னத்தை கேட்டு டில்லி உயர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில், நாம் தமிழர் கட்சி சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்து, 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, பிப்., மாதம் நாம் தமிழர் கட்சி வெளியிட்டது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள எஞ்சிய 20 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிட வேண்டும்.
சின்னம் உறுதியாக தெரியாததால், கட்சியினர் பலரும் போட்டியிட தயங்குகின்றனர். ஏற்கனவே, வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட சிலர் தங்கள் பெயரை திரும்ப பெறும்படி கட்சி தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், நாம் தமிழர் கட்சி தலைமை தவித்து வருகிறது.
கடந்த மூன்று நாட்களாக வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல், வேட்பாளர் தேர்வில் அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கவனம் செலுத்தி வருகிறார். அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை சமரசம் செய்யும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.
வேட்பாளர் அறிமுக கூட்டத்தை சென்னையில் பிரமாண்டமாக நடத்தவும் திட்டமிடப்பட்டு இருந்தது. வேட்பாளர்கள் தேர்வில் நீடிக்கும் குழப்பத்தால், அந்த நிகழ்ச்சியும் தாமதமாகி வருகிறது.
மனு தாக்கலுக்கு குறைந்த அவகாசமே இருப்பதால், வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு, பின்னர் நிலையை சரி செய்து கொள்ளலாம் என அக்கட்சி நிர்வாகிகள், தலைமைக்கு ஆலோசனை கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வாசகர் கருத்து