எதிரி நாங்களா... பா.ஜ.,வா : 'இண்டியா' கூட்டணிக்குள் நீடிக்கும் குழப்பம்
கூட்டணி தர்மத்தை இடதுசாரிகள் மீறிவிட்டதாக, காங்கிரஸ் எம்.பி.., சசி தரூர் கடுமையாக சாடியுள்ளார். "எதிரி யார் என்பதை காங்கிரஸ் தெளிவுபடுத்தட்டும்" என, இ.கம்யூ., பதிலடி கொடுத்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில் இ.கம்யூ., கட்சியின் பொதுச்செயலர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிட உள்ளார். 'மீண்டும் அமேதி தொகுதியில் களமிறங்கினால் ஸ்மிருதி இரானியுடன் கடும் மோதலை சந்திக்க வேண்டியிருக்கும்' என்பதால், மீண்டும் வயநாடு தொகுதியிலேயே ராகுல் காந்தி போட்டியிட உள்ளார்.
காங்கிரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டி.ராஜா, "எங்கள் வேட்பாளரை அறிவித்துவிட்டோம். கேரளாவில் இ.கம்யூ., கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளில் வயநாடும் ஒன்று. அங்கு வேட்பாளரை அறிவிப்பது காங்கிரசின் தனிப்பட்ட உரிமையாக இருக்கலாம்.
ஆனால், தேசிய தலைவராக பார்க்கப்படும் ராகுல்காந்தி, எதாவது ஒரு தொகுதியில் பா.ஜ., வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட வேண்டும். வயநாடு தொகுதியில் போட்டியிடுவதன் மூலம் ராகுல்காந்தி என்ன சொல்ல வருகிறார். தங்களின் முக்கிய இலக்கு பா.ஜ.,வா.. கம்யூனிஸ்ட் கட்சியா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
வயநாட்டில் ராகுல் காந்தியை எதிர்த்து இ.கம்யூ., போட்டியிடுவதைப் போல, திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் எம்.பி.., சசி தரூருக்கு எதிராக இ.கம்யூ., சார்பில் பன்யன் ரவீந்திரன் என்பவர் போட்டியிடுகிறார்.
இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள், தங்களுக்குள் எதிர்த்துப் போட்டியிடுவது தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சசி தரூர், " எனக்கு எதிராக இ.கம்யூ., வேட்பாளரை நிறுத்தியதன் மூலம் பா.ஜ., எதிர்ப்பு வாக்குகளை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிடுவதை எதிர்ப்பதன் மூலம் கூட்டணி தர்மத்தை இ.கம்யூ., மீறிவிட்டது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
சசி தரூரின் எக்ஸ் தள பதிவு, இ.கம்யூ., நிர்வாகிகள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இ.கம்யூ., கட்சியின் பொதுச்செயலர் டி.ராஜா கூறுகையில், " கேரளத்தின் வரலாறு என்ன என்பதை புரிந்து வைத்திருக்க வேண்டும். பிரிவினைவாத சக்திகளை கம்யூனிஸ்ட்டுகள் எதிர்த்து வருகின்றன. காங்கிரசை சேர்ந்த பலர், பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர்.
பா.ஜ.,வை எதிர்ப்பதாக கூறிக் கொள்ளும் ராகுல், வயநாட்டில் போட்டியிடும் இடதுசாரி முன்னணியை எதிர்ப்பது சரியல்ல. காங்கிரசின் அரசியல் எதிரி யார் என்பதை மக்களிடம் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்" என்றார்.
வாசகர் கருத்து