தேர்தல்களை மாற்ற வரும் செயற்கை நுண்ணறிவு
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற மறைந்த தலைவர்கள் புதிய கருத்துக்களை பேசுவது போல காணொலிகள் உலவத் துவங்கிஉள்ளன. இவை எல்லாம், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவின் மாயாஜாலம்.
இப்படி படம், இசை, காணொலி, கட்டுரை, கவிதை என, மனிதர்கள் உருவாக்கும் எதையும் அதனால் உருவாக்க முடியும். அதே நேரம், இதற்கு வேறு சில சக்தி வாய்ந்த திறன்களும் உள்ளன. குறிப்பாக ஆய்வு செய்வது.
கடந்த சில தசாப்தங்களில், புள்ளிவிபரத் தரவு வாயிலாக ஆய்வு செய்வதில் மிகுந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், இன்று சமூக ஊடகங்கள் புதிய சவாலை முன்னிறுத்தி உள்ளன.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், டீ கடை பெஞ்சில் மதிக்கப்படும் நபர், ''ஏ சதாம் உசேனே...!'' என்று தெருக்கோடியில் 30 பேர் முன் நின்று உலக அரசியல் பேசிய காலம் மலையேறிவிட்டது. இன்று எவரையும் எவரும் விமர்சிக்கும் வண்ணம் கருத்து பரிமாறல் பரவலாகி இருக்கிறது.
இப்படிப்பட்ட கருத்து உருவாக்கம், படங்கள், ஒலிப்பதிவு, காணொலி என பலவிதமாக நடக்கிறது. ஒவ்வொரு பதிவும் ஒரு தரவு புள்ளி. ஆனால், இந்த தரவுகளை வழக்கமான புள்ளிவிபர ஆய்வு வழிகளில் ஆய்வு செய்ய முடியாது.
இதற்கு, 'கீவேர்ட்' எனப்படும் முக்கிய சொற்களை மட்டும் ஆய்வு செய்வது என, ஒரு உத்தி உருவானது. ஆனால், இது இடைக்கால தீர்வாகத்தான் இருந்தது.
நிகரற்ற கணிப்பு
இப்போது, செயற்கை நுண்ணறிவு அசுர வேகத்தில் வளர்ந்து, அந்த விதமான ஆய்வுகளை பழங்கதையாக்கிவிட்டது. செயற்கை நுண்ணறிவால், கோடிக்கணக்கான படங்கள், காணொலிகள் உள்ளிட்ட ஊடகத் துகள்களை அப்படியே புரிந்துகொள்ள முடியும்.
ஒரு ரயில் விபத்து பற்றி நிறைய படங்கள் வெளியாகின்றன என்றால், அனைத்து படங்களையும் அதுவாக திரட்டி, ஒப்பிட்டு, பல தகவல்களை அதனால் சொல்ல முடியும். உதாரண மாக, எத்தனை பெட்டிகள் பாதிக்கப் பட்டன. அது போல முன்னதாக நடந்த சம்பவங்களின் படங்களை பார்த்தால் ஏதேனும் ஒற்றுமை இருக்கிறதா, முன்பு நடந்த சம்பவத்திற்கும், இதற்கும் ஒரே காரணம் இருக்கக் கூடுமா உள்ளிட்ட பல தகவல்களை அதனால் கணிக்க முடியும்.
இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த திறனை, அரசியல்வாதிகள் இப்போது கச்சிதமாக பயன்படுத்த துவங்கி உள்ளனர்.
சமீபத்தில் நடந்த ஒரு தேர்தலில், சமூக ஊடகங்களில் அதிகம் தென்படும் அரசியல் கட்சி ஒன்று, தேர்தல் களத்தை கணித்து சொல்ல, செயற்கை நுண்ணறிவு குழுவினரின் உதவியை நாடியது.
அந்த குழுவினர் புள்ளிவிபரங்கள், சமூக ஊடக தரவுகள், செய்தி கட்டுரைகள் உள்ளிட்ட ஏராளமான தகவல்களை கணினியில் உள்ளீடு செய்தனர். அவற்றை உள்வாங்கிய செயற்கை நுண்ணறிவு நிரல்; மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள், மனநிலை ஆகியவற்றை கணித்து, அழகாக தொகுதிவாரியாக கொடுத்தது.
கட்சி தலைமை எந்த தொகுதிக்கு சென்றாலும் அங்குள்ள சிறப்பை பேசுவதற்கும், பிரச்னைகளை கூறி மக்களை தன் பக்கம் ஈர்ப்பதற்கும், தன்னை நோக்கி வந்தவர்களை ஓட்டுகளாக மாற்றும் வல்லமை கொண்ட ஆற்றல்மிக்க பிரசாரத்தை மேற்கொள்ள முடிந்தது.
வெறும் மண்டை காயும் புள்ளிவிபரங்களை படிப்பதற்கு பதிலாக, 'இது ஸ்கிரிப்ட்... இப்படி பேசுங்கள்!' என்று பிரசாரத்தை எளிதாக்கும் வகையில் அமைந்தன செயற்கை நுண்ணறிவு தகவல்கள்.
பழைய தகவல்களின் அடிப்படையில் மட்டுமல்லாமல் நிகழும் சம்பவங்கள் குறித்த தகவல்களையும் உள்வாங்கி, அவற்றால் மக்களின் மனநிலை எப்படி மாறும் என்பதைக்கூட கணிக்க திறன் இருக்கிறது. அரசியலுக்கான வானிலை முன்னறிவிப்பு போல!
திடீரென முளைக்கும் புதிய சிக்கலை சமாளிப்பது, மாற்று கட்சி வேட்பாளரின் புதிய யுக்திக்கான பதிலடி என்று எந்த தேவைக்கும் செயற்கை நுண்ணறிவு தீர்வு தந்து, அதை சமாளிக்கும் விதங்களையும் கோடிட்டுக் காட்டியது!
மிக முக்கியமாக, இதன் கணிப்புகளில் சார்பு நிலை இல்லை என்பதே இதனுடைய மிகப்பெரிய பலம். கம்ப்யூட்டருக்கு யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை பாருங்கள்.
பலனுள்ள செலவு
அரசியல்வாதிகளுக்கு மிக முக்கியமாக, எங்கே செலவு செய்தால் அதிக பலன் கிடைக்கும் என்ற கணிப்புகளிலும் இது கைகொடுக்கிறது. ஓட்டு மேகங்கள் எங்கே திரண்டு வெற்றி மழையை பொழியும் என்பதை வேட்பாளருக்கு கணித்து தருகிறது. மேகத்தின் அளவைப் பொறுத்து அங்கே செலவு செய்து தீவிரம் காட்டலாம் அல்லது மேகம் இல்லாத இடங்களில் வேட்பாளர் கவனம் செலுத்தலாம்.
சொட்டு நீர் பாசனத்தில் தேவையான இடத்திற்கு மட்டும் தண்ணீர் பாய்ச்சுவது போல், தேவையான இடத்திற்கு மட்டும் வேட்பாளர் பணத்தை செலுத்தினால் போதும்!
இதன் இன்னொரு அதிசய சக்தி, தனி வாக்காளர்களுடன் வேட்பாளர்களுக்கு நெருக்கத்தை உருவாக்குவது.
ஒவ்வொரு வாக்காளரின் விருப்பு -வெறுப்புகள் மற்றும் தேவைகளை செயற்கை நுண்ணறிவு மூலம் தனித்தனியே ஆய்வு செய்து, அதற்கேற்ப அவருடன் தனிப்பட்ட உரையாடலை ஏற்படுத்தி நிர்வகிக்க முடியும். அதன் வாயிலாக, 'உன் கருத்து தான் என் கருத்தும்; உன் தேவைகளை என்னால் பூர்த்தி செய்ய முடியும்' என்ற பிம்பத்தை வாக்காளருக்கு வேட்பாளரால் ஏற்படுத்த முடியும்.
இதன் மூலம் வாக்காளரின் ஈடுபாட்டை சாதாரணமாக அதிகரிப்பது மட்டுமல்லாது, அவரை முரட்டு பக்தராகவும் மாற்ற முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது!
இனி வரும் காலங்களில் இதை செம்மையாக பயன்படுத்த தெரிந்த வேட்பாளர்கள் எளிதில் வெற்றியை அள்ளிச்செல்வர் என்பதில் ஐயமில்லை. மொத்த தேர்தல் வியூகங்களே செயற்கை நுண்ணறிவு பரிந்துரையின்படி நடந்தாலும் இனி ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
-கே.சுவாமிநாதன்தொழில்நுட்ப வல்லுனர்
வாசகர் கருத்து