வரலாற்றை மாற்றிவிட முடியாது : பா.ஜ.,வை சாடிய ராகுல்காந்தி
"லோக்சபா தேர்தல் என்பது இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே நடக்கும் மோதல்" என, காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் துவங்க இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், பா.ஜ., அரசின் 10 ஆண்டுகால செயல்பாடுகளை விமர்சித்துப் பேசி வருகின்றனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியோ, காங்கிரஸ் அரசின் ஊழல்களையும் மாநிலக் கட்சிகளின் செயல்பாடுகளை விமர்சித்துப் பேசி வருகிறது. இதனால் அரசியல் களமே அனல் பறந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், 'லோக்சபா தேர்தலை இரண்டு சித்தாத்தங்களுக்கு இடையே நடக்கும் மோதல்' என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
ஒருபக்கம் இந்தியாவை எப்போதும் ஒருங்கிணைத்த காங்கிரசும் மற்றொரு பக்கம் மக்களைப் பிரிக்க முயல்பவர்களும் இருக்கிறார்கள்.
நாட்டை பிளவுபடுத்த நினைத்தவர்களின் பக்கம் கைகோர்த்து அவர்களை பலப்படுத்தியவர்கள் யார்.. நாட்டின் சுதந்திரத்துக்காகவும் ஒற்றுமைக்காகவும் கைகோர்த்து நின்றவர்கள் யார் என்பதற்கு வரலாறே சாட்சி.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது ஆங்கிலேயர்களுடன் நின்றவர்கள் யார்... இந்தியாவின் சிறைகள் காங்கிரஸ் தலைவர்களால் நிரப்பப்பட்டபோது அவர்களுக்கு ஆதரவாக நின்றது யார் என்பது மக்களுக்குத் தெரியும்.
அரசியலுக்காக பொய்களை வாரியிறைப்பதால் வரலாற்றை மாற்றிவிட முடியாது.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து