அ.தி.மு.க., ஓட்டு தி.மு.க.,வுக்கு வரும்: ஈ.ஆர்.ஈஸ்வரன் கணிப்பு
"தமிழகம் இன்று சிறப்பாக வளரக் காரணம், அ.தி.மு.க.,வும் தி.மு.க.,வும் தான். அது ஒப்புக் கொள்ள வேண்டிய கருத்து. இன்று பொது எதிரியாக மோடி இருக்கிறார்" என, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
எதிர்க்கட்சிகள் கோபப்பட்டு எதையோ பேசும் அளவுக்கு தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கொடுத்துள்ளது. சமூகநீதி மற்றும் சமூக நலன் சார்ந்த தேர்தல் அறிக்கையாக அது இருக்கிறது.
கடந்த தேர்தலில் தி.மு.க., தேர்தல் அறிக்கையை கொடுத்தபோது அ.தி.மு.க.,வினர் எப்படி அமைதி இழந்தார்களோ, அதேபோல், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வந்ததும், 'சாத்தியமில்லை' என பா.ஜ., பேசுகிறது.
கர்நாடகாவில் மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம் ஆகியவற்றை காங்கிரஸ் அறிக்கையாக கொடுத்தபோதும், இதையே சொன்னார்கள். 'தமிழகத்தில் தோற்றாலும் டில்லியில் ஆட்சி அமைப்போம்' எனக் கூறி கோவையில் உள்ள தொழிலதிபர்களை பா.ஜ., மிரட்டுகிறது. அண்ணாமலையை பொறுத்தவரையில், 'அதை செய்வோம்... இதை செய்வோம்' என்கிறார்.
தமிழக பா.ஜ., தலைவராக அவர் வந்த பின்பு மத்தியில் ஆட்சியில் இருந்தவர்கள் தமிழகத்துக்கு செய்த செய்த எதாவது ஒரு திட்டத்தைப் பற்றிக் கூற முடியுமா?
எதையும் செய்யாமல் தேர்தலில் வாக்குறுதிகளை சொல்லிக் கொண்டிருக்கிறார். கோவையில் களநிலவரம் முற்றிலும் வேறாக இருக்கிறது. பா.ஜ.,வினர் சமூக வலைதளங்களில் தவறான கருத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
தேர்தல் களத்தில் பார்க்கும்போது அ.தி.மு.க.,வின் தீவிர தொண்டர்கள் இந்தமுறை உதயசூரியனுக்கு வாக்களிக்க தயாராக இருப்பதாக சொல்கிறார்கள். தொண்டர்களின் அழுத்தம் காரணமாகத் தான் பா.ஜ., கூட்டணியில் இருந்து பழனிசாமி வெளியில் வந்தார்.
இந்தமுறையும் கூட்டணி அமைத்திருந்தால் பாதிப் பேர் வெளியில் சென்றுவிடுவார்கள் என்பதால் பா.ஜ., அணியில் இருந்து பழனிசாமி வெளியில் வந்தார். ஆனால், தேர்தலுக்குப் பின் மோடியை ஆதரிப்பதில் உறுதியாக இருக்கிறார்.
தமிழகம் இன்று சிறப்பாக வளரக் காரணம், அ.தி.மு.க.,வும் தி.மு.க.,வும் தான். அது ஒப்புக் கொள்ள வேண்டிய கருத்து. இன்று பொது எதிரியாக மோடி இருக்கிறார். தமிழகத்தின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் பொது எதிரி மோடி தான்.
டில்லியில் யார் ஆள வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டிய தேர்தல் இது. ஒரு தொகுதியில் கூட பா.ஜ., இரண்டாம் இடத்துக்கு வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
மோடிக்கு எதிரான ஓட்டு என்றால் அது உதயசூரியனுக்கு போடுவது தான். அ.தி.மு.க., தொண்டர்களில் ஒரு சாரார், எங்கள் வேட்பாளருக்கு வாக்களிக்கும் வாய்ப்பு உள்ளது.
எதைப் பேசி தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பது என்பதில் பழனிசாமி குழப்பத்துடன் இருக்கிறார். ஒன்று மோடி... அல்லது இண்டியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும். மோடியை ஆதரிக்க வேண்டும் அல்லது எதிர்க்க வேண்டும்.
இல்லாவிட்டால் நான் தான் பிரதமர் வேட்பாளர் எனக் கூற வேண்டும். மத்தியில் நான் ஆட்சியமைக்கப் போகிறேன் என்றும் கூறலாம். ஆனால், அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
மத்தியில் உள்ள ஆட்சியை அகற்றுவேன் எனக் கூறவில்லை. அவ்வாறு அவர் பேசவில்லை என்றால் மோடியை அவர் ஆதரிக்கிறார் என்று அர்த்தம். அதைத் தான் அ.தி.மு.க., தொண்டர்களும் புரிந்து கொண்டு கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழகத்துக்கு இன்னும் 5 முறை மோடி வரவேண்டும். அப்போது தான் பா.ஜ., ஓட்டு குறையும். இதுவரைக்கும் பா.ஜ.,வின் ரெக்கார்டு என்பது நோட்டா தான். இந்தமுறையும் அது நிரூபணம் ஆகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து