'நீட்' தேர்வை ஒழிப்போம் என தி.மு.க., திரும்ப திரும்ப தேர்தல் வாக்குறுதி அளிப்பது ஏன்?
இந்தியாவிலேயே மாநில அரசு நடத்தும் மருத்துவக் கல்லுாரிகள் அதிகம் இருப்பது, தமிழகத்தில் தான். தமிழக அரசு பணத்தில் நடத்தப்படும் மருத்துவக் கல்லுாரிகளில், தமிழகத்தைச் சேர்ந்த ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்க முடியாத நிலையை நுழைவுத் தேர்வுகள் ஏற்படுத்துகின்றன. அதனால்தான், மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு ஏற்கனவே இருந்த நுழைவுத் தேர்வு, தி.மு.க., ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது.
'நீட்' தேர்வு சட்டம் வந்தபோதே அதை எதிர்த்து, தி.மு.க., உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாக, நீட் தேர்வு திணிக்கப்பட்டது.
இதனால், லட்சக்கணக்கில் செலவு செய்து, தனியார் பயிற்சி மையங்களில் படித்தவர்கள்தான் எம்.பி.பி.எஸ்., படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிளஸ் 2 வகுப்பில், முதல் 1,100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் கூட, எம்.பி.பி.எஸ்., சேர முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால், மாணவர்களும், பெற்றோர்களும் தேவையின்றி பெரும் பதற்றத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்; பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவேதான் நீட் தேர்வை எதிர்த்து வருகிறோம்.
இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்தில் திருத்தம் செய்து, நீட் தேர்வை மத்திய பா.ஜ., அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதனால்தான் உச்ச நீதிமன்றம் நீட் தேர்வுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. மத்தியில், 'இண்டியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, நீட் தேர்வை ரத்து செய்வோம்.
பார்லிமென்டில் பெரும்பான்மை இருந்தால், நீட் தேர்வை ஒழிப்பது சாத்தியம்தான். அதனால்தான், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் திரும்ப திரும்ப நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்து வருகிறோம்.
-டி.கே.எஸ்.இளங்கோவன், தி.மு.க., செய்தித் தொடர்பு செயலர்
நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றால், சாதாரண ஏழை கூலித் தொழிலாளியின் பிள்ளைகள்கூட, இந்தியாவில் உள்ள எந்த மருத்துவக் கல்லுாரியிலும் குறைந்த கட்டணத்தில் எம்.பி.பி.எஸ்., படிக்க முடியும். நீட் தேர்வுக்கு முன்பாக, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்தபோது, 1 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை வசூலித்துக் கொண்டிருந்தனர்.
நீட் தேர்வு வந்த பின், தனியார் மருத்துவக் கல்லுாரிகளால் கோடிக்கணக்கில் நன்கொடை பெறுவது நின்று போனது.
அதனால்தான் தனியார் மருத்துவக் கல்லுாரிகள் நீட் தேர்வை கடுமையாக எதிர்க்கின்றன. நீட் தேர்வை எதிர்க்கும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களில் பலர் மருத்துவக் கல்லுாரிகளை நடத்துகின்றனர். நீட் தேர்வால் அவர்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், நீட் தேர்வை எதிர்ப்பதன் ரகசியம் இதுதான்.
நீட் தேர்வை, 13 மொழிகளில் எழுத முடியும். இந்தியா முழுதும் எந்த மருத்துவக் கல்லுாரிகளிலும் தமிழக மாணவர்கள் சேர முடியும். நீட் தேர்வால் இட ஒதுக்கீட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை. நீட் தேர்வு வந்த பின்னும், தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் தான், மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்கிறது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி நடக்கும் நீட் தேர்வை ரத்து செய்வது சாத்தியமல்ல என்பது, தி.மு.க.,வுக்கு தெரியும். ஆனால், தமிழகத்தை மோடி அரசு வஞ்சிக்கிறது என, திரும்ப திரும்ப கூறி, மக்களின் உணர்வுகளைத் துாண்டி, அதன் வாயிலாக மக்களை ஒருவித பதற்றத் திலேயே வைத்திருக்க தி.மு.க., விரும்புகிறது.
மத்திய அரசுக்கு எதிராக, தேசியவாத சிந்தனைக்கு எதிரான மனநிலையை உருவாக்க, நீட் எதிர்ப்பை ஒரு ஆயுதமாக, தி.மு.க., பயன்படுத்த நினைக்கிறது. இந்த எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.
-ராஜம் எம்.பி. நாதன்த.மா.கா., பொதுச்செயலர், வழக்கறிஞர்
வாசகர் கருத்து