காங்கிரசை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன: ஸ்டாலினை சாடும் சீமான்
"லாட்டரி, சாராய பணத்தை வைத்து தி.மு.க., கட்சியை நடத்துகிறது. கடந்த தேர்தலில் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொடுத்தோம். இந்த மக்களுக்காக அவர்கள் பேசியது என்ன?" என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
லோக்சபா தேர்தலில் மைக் சின்னத்தில் நாம் தமிழர் போட்டியிடுகிறது. கன்னியாகுமரியில் அக்கட்சியின் வேட்பாளர் மரிய ஜெனிபரை ஆதரித்து சீமான் பேசியதாவது:
இமயமலை வரை பரவியிருந்த தமிழ் இனம், இன்று அடிமையாக வாழ்கிறது. தங்கள் தாய்மொழியில் படித்தால் வேலை கிடைக்காது என்ற நிலை இருந்தால், அது உலகின் மிகக் கீழான அடிமை நிலைக்கு சமம். போதைக்கு அடிமை, ஆங்கிலத்துக்கு அடிமை என அனைத்துக்கும் அடிமையாக இருக்கிறோம்.
காங்கிரசும் பா.ஜ.,வும் தமிழகத்துக்கு தேவையா. நமது மொழிக்காகவும் உரிமைக்காகவும் என்றைக்காவது நின்றிருக்கிறார்களா. நீதிமன்றத்தில் தமிழில் வாதாட முடியவில்லை. பீகார், ராஜஸ்தானில் அவர்கள் மொழிகளில் வாதாடுகிறார்கள். தாய்மொழியும் வழிபாடும் நடத்த முடியவில்லை, வழக்காடவும் முடியாத நிலையில் இருக்கிறோம்.
புத்தன் பேசிய பாலி மொழியும் சமணர்கள் பேசியும் பிராகிருதமும் எங்கே போயின. சைவமும் தமிழும் மடாலயங்களில் தழைத்து ஓங்கியது என்றார்கள். மடங்கள் இருக்கின்றன. தமிழ் எங்கே?
காவிரியில் 450 டிஎம்சி தண்ணீர் வந்து கொணிடிருக்கிறது. அது விவசாயி பிரச்னை எனப் பார்க்காமல் நமது இனத்தின் பிரச்னை என எண்ண வேண்டும். காவிரி நீர் எங்கள் உரிமை. அவரவர் மண்ணில் உள்ள வளங்கள், அவரவர்களுக்கே சொந்தம் என்றால், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், அனைத்து மாநிலங்களுக்கும் செல்கிறதே.
எங்கள் வளம் எங்களுக்கே என்றால் நரிமணத்தின் பெட்ரோல், அணுஉலையில் தயாரிக்கப்படும் மின்சாரம் என அனைத்தும் எங்களுக்கே என நாங்கள் கூறினால், தேசிய ஒற்றுமை எப்படி ஏற்படும்?
காவிரி விவகாரத்தில் காங்கிரசின் நிலைப்பாடு என்ன, தமிழர்களுக்கு தண்ணீர் வழங்க நாங்கள் முட்டாள்களா என கர்நாடக முதல்வரும் துணை முதல்வரும் பேசுகிறார்கள். காங்சிரசுக்கு ஏன் ஓட்டு என தமிழக மக்கள் முடிவு எடுக்கக் கூடாதா?
அவர்களுக்கு 10 சீட்டை தி.மு.க., கொடுத்திருக்கிறது. அப்படி காங்கிரசை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன இருக்கிறது. சொந்த நாட்டு மக்களின் படகை தடுத்து காப்பாற்ற முடியவில்லை. யாரிடம் இருந்து யாரைக் காப்பாற்ற இந்திய கடற்படை இருக்கிறது என்று தெரியவில்லை. படகை பறிமுதல் செய்தபோது, மீனவர்கள் கொல்லப்பட்ட போது வேடிக்கை பார்க்கிறது.
காங்கிரசுக்கும் பா.ஜ.,வுக்கும் கச்சத்தீவை மீட்பதில் என்ன நிலைப்பாடு இருக்கிறது. கச்சத்தீவு எல்லையை தாண்டி மீனவன் வருகிறான் என்று கூறி அடித்து சித்ரவதை செய்கின்றனர். கேரள மீனவர்களும் எல்லை தாண்டி மீன் பிடிக்கிறார்கள். அவர்களை ஏன் அடிப்பதில்லை. காரணம், அந்த மண்ணை மானமுள்ள ஒருவர் ஆள்கிறார்.
காவிரியில் தண்ணீர் தரமறுக்கும் காங்கிரசுக்கு ஓட்டு போடுகிறீர்கள். அதைத் தட்டிக் கேட்காமல் இருக்கும் பா.ஜ.,வுக்கும் ஓட்டு போடுகிறீர்கள். விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலையை கொடுப்போம் என மோடி சொல்லி 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
எங்களிடம் பணம் இல்லை. உண்டியல் ஏந்தி பிச்சை எடுக்கிறோம். ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்களை வைத்து தான் தேர்தலில் நிற்கிறோம். தேர்தல் பத்திரங்களில் ஒரு ரூபாய் கூட வாங்காத கட்சி, நாம் தமிழர் தான். பா.ஜ., 6250 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் வாங்கியுள்ளது.
அடுத்தபடியாக திரிணமுல் காங்கிரஸ், காங்கிரஸ், தி.மு.க., வாங்கியுள்ளது. லாட்டரி, சாராய பணத்தை வைத்து தி.மு.க., கட்சியை நடத்துகிறது. கடந்த தேர்தலில் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொடுத்தோம். இந்த மக்களுக்காக அவர்கள் பேசியது என்ன?
இந்தமுறையும் ஏமாற்றுவதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது. காங்கிரஸ், பா.ஜ., என மாறி மாறி ஓட்டுப் போடாமல் இந்த முறை எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். தமிழகத்தில் மோடிக்கு ராகுலுக்கோ ஓட்டு கிடையாது. எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின், பழனிசாமி, சீமான் என இவர்களுக்குத் தான் ஓட்டு இருக்கிறது.
தேர்தல் வருகிறது எனத் தெரிந்ததும் பலமுறை தமிழகம் வந்த பிரதமர், வெள்ள பாதிப்பின் போது வந்தாரா? தேர்தலின் போது மட்டும் மோடிக்கு பாசம் வந்துவிடுகிறது. நாய்க்கட்டி, பன்னிக்குட்டியின் விலை கூட நாம் போடும் ஓட்டுக்கு இல்லை. ஒரு கழுதைக்குட்டி கூட பத்தாயிரம் ரூபாய்க்கு விலை போகிறது. வாக்கு என்பது வலிமையான ஆயுதம். அதை காசுக்கு விற்றுவிடாதீர்கள்.
என் சின்னம் (மைக்) இல்லாமல் யாரும் ஒட்டு கேட்க முடியாது. அப்படிப் பார்த்தால் எல்லோரும் எனக்குத் தான் ஓட்டு கேட்கிறார்கள்.
இவ்வாறு சீமான் பேசினார்.
வாசகர் கருத்து