Advertisement

பம்பரம் இல்லை... நேரு இல்லை... மகேஷ் இல்லை

திருச்சி தொகுதி ம.தி.மு.க., வேட்பாளர் துரை வேட்புமனு தாக்கலுக்கு வராத கல்வி அமைச்சர் மகேஷ், கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வேட்புமனு தாக்கலில் பங்கேற்றதால், ம.தி.மு.க.,வினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

திருச்சி லோக்சபா தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., சார்பில், வைகோ மகன் துரை போட்டியிடுகிறார். அவர், சின்னம் பிரச்னை மற்றும் தி.மு.க.,வினர் ஒத்துழைப்பு இல்லாத வெறுப்பில், அமைச்சர்கள் நேரு மற்றும் மகேஷ் முன்னிலையில், கதறி அழுது புலம்பினார். இது, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியினரை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.

இது தொடர்பாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவிடம் பேசி தன் அதிருப்தியை வெளிப்படுத்திய தகவலும் வெளியானது.

இந்நிலையில், நேற்று முன்தினம் துரை வேட்புமனு தாக்கல் செய்தார். தன் மகன் பிரசாரத்துக்காக அமைச்சர் நேரு பெரம்பலுார் சென்று விட்டார். அதேநேரம், திருச்சி லோக்சபா தொகுதியில் திருச்சி கிழக்கு, திருவெறும்பூர் தொகுதி மாவட்ட செயலராக இருக்கும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், துரை வேட்புமனு தாக்கலுக்கு வராமல் தவிர்த்து விட்டார்.

கடந்த 2006ல் மகேஷுக்காக, திருவெறும்பூர் தொகுதியை விட்டுக் கொடுத்தார் கே.என்.சேகரன். அவருக்காக இந்த முறை திருச்சியை வாங்கலாம் என நினைத்த மகேஷின் எண்ணத்தில் ம.தி.மு.க., மண் அள்ளி போட்டு விட்டது. அதனால் தான், அவர் வேட்புமனு தாக்கலுக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதை, தி.மு.க.,வினர் மறுத்துள்ளனர்.

அதேநேரம், நேற்று கரூர் தொகுதி காங்., வேட்பாளர் ஜோதிமணி வேட்புமனு தாக்கல் செய்தபோது, அமைச்சர் மகேஷ் கலந்து கொண்டார். இதனால், துரை வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சிக்கு வராமல், திட்டமிட்டே அமைச்சர் மகேஷ் தவிர்த்து விட்டார் என்று ம.தி.மு.க.,வினர் புலம்பி வருகின்றனர்.

இதற்கிடையில், ம.தி.மு.க.,வின் பம்பரம் சின்னமும் பறிபோனதில் அக்கட்சியினர் கடும் வருத்தத்தில் உள்ளனர். இருந்தபோதும், சுயேச்சை சின்னத்தை கேட்டு பெற்று, அதில் தான் நான் போட்டியிடுவேன் என துரை, உதயசூரியன் சின்னத்தை தவிர்ப்பது போல பேட்டியளித்திருப்பது, ஏற்கனவே கோபத்தில் இருக்கும் தி.மு.க.,வினரை மேலும் கோபப்படுத்தி இருக்கிறது.

இது குறித்து, ம.தி.மு.க., பிரமுகர்கள் கூறியதாவது:

தி.மு.க., கூட்டணியில் திருச்சி தொகுதியை துவக்கத்தில் இருந்தே ம.தி.மு.க.,வுக்கு வலியுறுத்தி கேட்டார் வைகோ. இறுதி வரை போராடி, அதை பெற்றும் விட்டார். இது, லோக்கல் தி.மு.க.,வினருக்கு பிடிக்கவில்லை. அதனாலேயே, தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட துரையை வலியுறுத்தினர். இதை பொறுக்காத துரை, கூட்டணி கட்சியினர் பங்கேற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.

இந்த தகவல் வெளியில் பரவியதும், ஒட்டுமொத்த தி.மு.க.,வும் துரை மீது காண்டாகினர். லோக்கல் அமைச்சர்கள் நேருவும், மகேஷும் துரையின் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சிக்கு வராமல் திட்டமிட்டு புறக்கணித்துள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் துரைக்கு லோக்கல் தி.மு.க.,வினர் எப்படி தேர்தல் பணியாற்றுவர் என புரியவில்லை. ஸ்டாலினிடம் பேசி வைகோ தான் சரி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


நேருவுக்கு தலைச்சுற்றல்! தன் மகன் போட்டியிடும் பெரம்பலுார் தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணராயபுரம் கொசூர் பகுதியில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார் அமைச்சர் நேரு. அப்போது அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. உடனே, அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை எடுத்தார். பின், திருச்சியில் இருக்கும் வீட்டுக்கு வந்து முழு ஓய்வு எடுத்தார். பிரசாரத்துக்காக தென் மாவட்டம் சென்ற முதல்வர் ஸ்டாலின், நேரு உடல் நிலை குறித்து போனில் விசாரித்துள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்