ஏன் ஓட்டு போடவில்லை? ஜெயித்து யாரும் சேவை செய்யப் போவதில்லை!

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வேட்பாளர்களும், கட்சி தலைவர்களும், ஒரு மாதமாக, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். தேர்தல் ஆணையமும், ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து, வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஓட்டுப்பதிவு, இம்மாதம், 6ம் தேதி நடந்தது. மொத்தம் உள்ள, 6.28 கோடி வாக்காளர்களில், 4.57 கோடி பேர் ஓட்டளித்தனர்; 1.70 கோடி பேர் ஓட்டளிக்க வில்லை. அவர்களில், பலரும் நகர பகுதிகளை சேர்ந்த படித்தவர்கள்.ஓட்டளிக்க வசதியாக, ஊதியத்துடன் விடுமுறை வழங்கப்பட்டது. அப்படி இருந்தும், 1.70 கோடி பேர் ஓட்டளிக்க வில்லை. பல நாடுகளில், மக்கள் தொகையே, 1 கோடி இல்லாதபட்சத்தில், தமிழகத்தில், அதை விட, அதிகமான வாக்காளர்கள் ஓட்டளிக்காதது ஏன் என்ற, கேள்வி எழுந்துள்ளது.

ஓட்டளிக்காதவர்களை, 'சமூகத்தின் மீது அக்கறை இல்லாதவர்கள், சோம்பேறிகள்' என, சிலர் வசைபாடினாலும், எதற்காக அவர்கள் ஓட்டுப் போட முன்வரவில்லை என்பதை அறிய, 'ஏன் ஓட்டு போடவில்லை' என்ற பகுதி வாயிலாக, நம் நாளிதழ் தரப்பில், விடை காண முடிவு செய்யப்பட்டது.அதற்காக, வாக்காளர்கள், தங்களின் மனதை நெருடும் காரணங்களை தெரிவிக்க, மொபைல் மற்றும் தொலைபேசி எண்கள் தரப்பட்டன.

அவற்றில், காலை முதலே பலரும் ஓட்டு போடாததன் காரணத்தை வெளிப்படுத்தினர். 'பெயரும், போன் எண்ணும் ரகசியமாய் வைக்கப்படும்' என, உறுதி அளிக்கப்பட்டதால், ஓட்டு போடாதவர்கள், அதற்கான காரணத்தை, பெயர், தொகுதியுடன் தெரிவித்தனர். ஓட்டு போடாதவர்கள், எங்கிருந்து கருத்து கூறினர் என்ற, விபரம் மட்டும் தெரிவிக்கப்படுகிறது.

''தபால் ஓட்டு போட படிவம் வழங்கவில்லை; வீடுகளில் பூத் சிலிப் வழங்கவில்லை; அடையாள அட்டை இருக்கிறது; பட்டியலில் பெயர் இல்லை; முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பித்தும் சரிசெய்து தராததால், புதிய முகவரிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடியில் ஓட்டு போட முடிய வில்லை; உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால், ஓட்டு போடவில்லை' என, தேர்தல் ஆணையத்தின் மீது, சிலர் குறை கூறினர்.மற்றவர்கள், தங்கள் கோபத்தை கொட்டித் தீர்த்தனர்.

அதன் விபரம்:

கோவை


அரசு துறையில் பணியாற்றி, நீர் நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் மீது, நடவடிக்கைகள் எடுத்தேன். அதனால், பாதிக்கப்பட்டோரால், என் மகன் உயிரிழக்க நேரிட்டது. மகன் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, போலீசில் புகார் அளித்தேன்.எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், 2009ம் ஆண்டிற்கு பின், எந்த தேர்தல்களிலும் ஓட்டளிக்காமல் உள்ளேன்.

பீளமேடு, கோவை வடக்கு

ஆட்சிக்கு வருவோர், மக்களுக்கான எந்த நலத் திட்டங்களையும் செய்வதில்லை. இலவசம் என்ற பெயரில், மக்களை அடிமையாக வைக்கவே விரும்புகின்றனர். குறிப்பாக, பெண்களின் ஓட்டுக்களை கவர, அவர்களுக்கான இலவசங்களை அறிவிக்கின்றனர்.இலவச அறிவிப்பை கேட்டாலே கோபம் வருகிறது. அதன் வெளிப்பாடகவே, ஓட்டு போட விருப்பம் வரவில்லை.

கோவை வடக்கு

பஸ் கட்டணம் அதிகம் உள்ளது. ஓட்டு போட வசதியாக, கூடுதல் பஸ்களை விடுவதாக அறிவித்தால் போதாது. பஸ்களை இலவசமாக இயக்க வேண்டும்.அப்போது தான், அனைவரும் ஊருக்கு சென்று ஓட்டளிக்க முடியும். பஸ்சில் செல்ல பணம் இல்லாததால், ஓட்டு போடவில்லை.

தேனி

சாதாரண நபராக தேர்தலில் நின்று, வெற்றி பெற்ற பின், பல கோடிகளுக்கு அதிபதியாகின் றனர். வெள்ளைக்காரர்கள் ஆட்சியின் போது, மக்களை அடிமையாக வைத்திருந்தாலும், தரமான கல்வி, மருத்துவம், சாலை வசதிகள் வழங்கினர். ஆனால், சுதந்திர நாடு என்ற பெயரில், நம்மூர் அரசியல்வாதிகள், மக்களின் வரி பணத்தை கொள்ளை அடிப்பதுடன், அரசு செலவில் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். அதை பார்க்கும் போது, வெள்ளைக்காரர்களின் ஆட்சியே பரவாயில்லை என, தோன்றுகிறது.இதனால், அரசியல்வாதிகள் வசதியாக வாழ வழி ஏற்படுத்தி தரக்கூடாது என்பதற்காக, ஓட்டு போடவில்லை.

மதுரை கிழக்கு

தி.மு.க.,வினர், ஏழு மது ஆலைகளையும்; அ.தி.மு.க.,வினர், நான்கு மது ஆலைகளையும் நடத்தி வருகின்றனர். இந்த தேர்தலில்,மதுவிலக்கு தொடர்பாக, இரு கட்சிகளும் வாய் திறக்க வில்லை. மதுவால், இளம்பெண்கள் விதவையாகி வருகின்றனர்.இரு கட்சிகளில் ஒன்று தான் ஆட்சிக்கு வரும். மதுவிலக்கு தொடர்பாக, யாரும் அறிவிக்காததால் தான், இந்த தேர்தலில் ஓட்டளிக்கவில்லை.

பொன்னேரி

கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு பின், மக்களை ஈர்க்க கூடிய தலைவர்கள் இல்லை. அதை விட, மக்களை வழிநடத்த கூடிய தலைவர்கள் என்று யாரும் இல்லை. இதனால், யாருக்கும் ஓட்டு போடவில்லை.எங்கள் தொகுதி, பல ஆண்டுகளாக தனி தொகுதியாகவே உள்ளது. அனைத்து கட்சிகளும், பட்டியல் இனத்தவரையே வேட்பாளராக அறிவிக்கின்றன. தொடர்ந்து, ஒரே சமூகத்தை சார்ந்த நபர்களுக்கு ஓட்டு போட விருப்பமில்லை. இதனால், ஓட்டு போடவில்லை.

திரு.வி.க.நகர்

ரஜினி அரசியலுக்கு வருவார் என, பல ஆண்டுகளாக காத்திருந்தேன். இந்த தேர்தலிலும் அவர், அரசியலுக்கு வரவில்லை. ஓட்டு போட்டால், ரஜினிக்கு தான் போடுவேன். வேறு யாருக்கும் போட மனதில்லை; இதனால், ஓட்டு போடவில்லை.

மாதவரம்

ஓட்டுப்பதிவுக்கு முன் லேசான காய்ச்சல் இருந்ததால், காய்ச்சலுடன் ஓட்டு போடலாமா என, தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'நீங்கள், கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து, ஆம்புலன்சில் வந்து ஓட்டு போடலாம்' என்றனர். அதில், எனக்கு விருப்பம் இல்லாததால், ஓட்டு போடவில்லை.

திருவையாறு

நானும், என் குடும்பத்தாரும், வெளியூரில் வேலை செய்கிறோம். ஓட்டுப்போட, அரசு பஸ் இயக்கப்படவில்லை. தனியார் பஸ்சில் செல்ல புறப்பட்ட போது, கட்டணம் அதிகம். அந்த அளவிற்கு பணம் இல்லாததால், ஓட்டு போட ஊருக்கு செல்ல முடியவில்லை.

விருதுநகர்

பல ஆண்டுகளாக, ரேஷன் கார்டு கேட்டு வருகிறேன். தனியாக வசிப்பதால், ரேஷன் கார்டு தர முடியாது என, அலைக்கழிக்கப்பட்டு வருகிறேன். எனக்கு கார்டு தராதவர்களுக்கு, நான் ஏன் ஓட்டு போட வேண்டும்?

பழநி

அரசியல் கட்சி வேட்பாளர்களில், யாரும் நல்லவர்களாக இல்லை; குற்றப் பின்னணி உடையவர்களாகவே உள்ளனர். அவர்களுக்கு ஓட்டு போட விருப்பமில்லை.

மதுரை வடக்கு

மதுரை வடக்கில் ஓட்டு இருக்கிறது. கோவையில் வேலை செய்கிறேன். ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள், மதுரை செல்ல பஸ்சே இல்லை. இதனால், சொந்த ஊருக்கு சென்று, ஓட்டளிக்க முடியவில்லை. பொது மக்கள் கால்கடுக்க வெயிலில் நின்று, ஓட்டு போடுவர். அரசியல்வாதிகள் வெற்றி பெற்று விட்டு, பல கோடிகளை குவிப்பர். இதற்கு ஏன், நான் ஓட்டு போட வேண்டும்?

மதுரை மத்தி

மக்கள் உழைத்தால் தான், அவர்களுக்கு சோறு. மக்கள் மீது, அரசியல்வாதிகளுக்கு அக்கறை இல்லை. கொரோனா வைரஸ் பரவல் பற்றி கவலைப்பட்டு இருந்தால், பிரசாரத்தின் போது, தலைவர்கள், மக்களை அழைத்து வந்திருப்பரா?பிரசாரம் முடிந்து விட்டதும், கொரோனாவை பற்றி பேசுகின்றனர். அரசியல்வாதிகளின் மீதுள்ள கோபத்தால் ஓட்டு போடவில்லை.

பல்லடம்

எனக்கு இரு பெண்கள். இருவரும் கல்லுாரி படிப்பை முடித்து, வேலை கிடைக்காமல் வீட்டில் உள்ளனர். என்னுடைய சம்பளத்தில் மட்டுமே குடும்பம் இயங்குகிறது. சொந்த ஊரான தேனிக்கு சென்று ஓட்டு போட்டு வர, 4,000 ரூபாய் தேவை.என் பெண்களுக்கு வேலை கிடைக்காத, அரசாங்கத்தின் மீதான அதிருப்தியில் ஓட்டு போடவில்லை.

புதுக்கோட்டை

தொழுகை செய்வதற்கு முன், கை, கால்களை சுத்தம் செய்ய வேண்டும். அப்போது தான், தொழுகை ஏற்கப்படும். ஓட்டு போட்ட பின், கையில் மை வைப்பதால், தொழுகை செய்யும் போது, அதை சுத்தம் செய்ய முடிவதில்லை. எனவே, ஓட்டு போட்டதற்கு அடையாளமாக, மை வைப்பதை தவிர்க்க வேண்டும். அப்போது தான் ஓட்டு போடுவேன்.

மயிலாடுதுறை

அரசு துறைகளில் லஞ்சம் அதிகரித்து, லஞ்சம் இல்லாமல் வேலையே நடக்காது என்ற, சூழல் உருவாகி விட்டது. யார் வந்தாலும், ஊழலில் திளைக்க போகின்றனர். அவர்களுக்கு வாய்ப்பு தரக்கூடாது என்பதால், ஓட்டு போடவில்லை.

சோழிங்கநல்லுார்

ஐந்தாவது, 10ம் வகுப்பு படித்தவர்கள், தேர்தலில் நின்று வெற்றி பெற்றதும், பல கோடி சொத்து சேர்க்கின்றனர். அவர்களுக்கு எப்படி, அந்த பணம் வருகிறது என, தேர்தல் ஆணையம் விசாரிப்பது இல்லை. நடவடிக்கை எடுப்பதும் இல்லை.தேர்தலின் போது மட்டும், வேட்புமனு தாக்கலில் வழங்கப்படும் ஆவணங்களை சரிபார்ப்பது போல, பாவலா காட்டுகின்றனர். தேர்தலில் நிற்பவர்களின் விபரங்களை, ஆறு மாதங்களுக்கு முன் பெற்று, அவர்களின் வருமானம் தொடர்பாக, ஆய்வு செய்ய வேண்டும்.அப்போது தான் குற்றவாளிகள், தேர்தலில் நிற்க முடியாது. இந்த நிலை வரும் வரை, ஓட்டு போட மாட்டேன்.

சிவகங்கை

ஓட்டு போடும் போது, 'பிரின்டர்' கருவியில், வேட்பாளர் பெயர், சின்னம் மட்டுமே வருகிறது. அவற்றுடன், ஓட்டு போட்ட வாக்காளரின் அடையாள எண்ணும் இடம் பெற வேண்டும். அப்போது தான் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க முடியும். இந்த வசதி ஏற்படுத்தினால் தான் ஓட்டு போடுவேன்.

பூந்தமல்லி

அனைத்து அரசு அலுவலகங்களிலும், லஞ்சம் அதிகரித்துள்ளது. லஞ்சம் கொடுத்தால் தான் ஒரு பணி நடக்கும் என்ற, நிலை உள்ளது. போட்டியிடும் வேட்பாளர்களும், ரவுடிகளாக உள்ளனர். ஒவ்வொரு வேட்பாளரும், 10 கோடி ரூபாய் செலவு செய்து, 50 கோடி ரூபாய் சம்பாதிக்க முயற்சிக்கின்றனர். அப்படி இருக்கையில், வரிசையில் நின்று, எப்படி ஓட்டளிக்க முடியும்?

அனகாபுத்துார்

எங்கள் வீட்டில், ஐந்து ஓட்டுகள் இருந்தன. ஒவ்வொரு தேர்தலிலும், அரசு எப்படி இருந்தாலும், எங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகிறோம். இந்த தேர்தலில், ஒரு ஓட்டு மட்டுமே போட முடிந்தது. நான்கு ஓட்டுகள் நீக்கப்பட்டிருந்தன. மற்ற ஓட்டுச்சாவடிகளுக்கு அலைந்தும், அதிகாரிகளிடம் கேட்டும், உரிய பதில் இல்லாததால் ஓட்டளிக்க முடியவில்லை.

கோவை

என் ஓட்டு, திருச்சியில் உள்ளது. வேலை நிமித்தமாக, கோவையில் உள்ளேன். கொரோனா பரவல் காரணமாக வெளியே செல்ல வேண்டாம் என, சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது. இதனால், ஓட்டு போட, திருச்சிக்கு செல்லவில்லை.

வேளச்சேரி

என், 18 வயது முதல் ஓட்டு போட்டு வருகிறேன். வாக்காளர் பட்டியலில் இருந்து, என் பெயர் நீக்கம் செய்யப்பட்டிருந்தது. ஓட்டுச் சாவடிக்கு சென்று, 'சேலேஞ்ச்' ஓட்டு போட முயன்றேன். ஆனால், எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை.

நன்மங்கலம்

வாக்காளர் பட்டியலில், என் பெயர் நீக்கம் செய்யப்பட்டிருந்தது. என் மனைவிக்கு இருந்தது. உயிருடன் இருக்கும் என் பெயர் நீக்கம் செய்யப்பட்டது குறித்து, '1950' தொலைபேசி எண் மற்றும் அதிகாரிகளிடம் தெரிவித்தேன். முறையாக, அவர்கள் பதிலளிக்கவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும், எனக்கு ஓட்டளிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தாம்பரம்

தேர்தல் தேதி அறிவித்ததில், எனக்கு விருப்பம் இல்லை. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தேர்தல் தேவையற்றது. இதனால், பிரசார கூட்டங்களில் மக்கள் முகக் கவசம், சமூக இடைவெளி இல்லாமல் நின்றதால், தொற்று அதிகரித்து, உயிரிழப்பும் அதிகரித்துள்ளது.

கடலுார், வடலுார்

மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் ஓட்டு வழங்கப்பட்டும், அதற்கான வாய்ப்பு வழங்கப் பட வில்லை. இதனால், எங்களால் ஓட்டளிக்க முடியவில்லை. எனவே, 'ஆன்லைன்' வாயிலாக ஓட்டளிக்க, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நான், குணம் அடைந்து, வீட்டிற்கு திரும்பினேன். இருப்பினும், மறுநாள் வீட்டிற்கு வந்த சுகாதாரத் துறை அதிகாரிகள், பாதுகாப்பு கவசங்களை வழங்கி, கட்டாயம் அணிந்து தான் செல்ல வேண்டும் என, வலியுறுத்தினர். இது, என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. அதனால், ஓட்டு போடவில்லை.

திருவான்மியூர்

தமிழக அரசியல் மீது வெறுப்பு வந்து விட்டது. எதற்கு எடுத்தாலும் லஞ்சம் என்ற நிலையை, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் உருவாக்கியுள்ளன. ஊடகங்களை பார்த்தால், மக்களுக்கு பைத்தியமே பிடித்து விடும்.ஏனெனில், ஒவ்வொருவரும் அவரது எதிர்கட்சியினரின் செயல்பாடுகளையும், ஊழலையும் தான் அடுக்கடுக்காக கூறுகின்றனர். அவர்கள் மீதுள்ள வெறுப்பை வெளிப்படுத்தவே, நான் ஓட்டு போடவில்லை.

திருவான்மியூர்

எனக்கு சொந்த ஊர் நாகை. ஓட்டு போடச் சென்று வர, 1,000 ரூபாய் தேவை. குறைந்த சம்பளம் வாங்கும் என்னால் ஓட்டு போடுவதற்காக மட்டும், 1,000 ரூபாய் செலவு செய்ய முடியாது. 'ஆதார்' எண்ணை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து, எங்கு வேண்டுமானாலும், அவரவர் ஓட்டை போட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புத்துார்

எந்த ஆட்சி வந்தாலும், அரசு பணியில் உள்ளவர்கள், தங்களது சொந்த ஊருக்கு பணியிட மாற்றம் கேட்டு விண்ணப்பித்தால், 10 லட்சம் ரூபாய் வரை, லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது. லஞ்சம் இல்லாமல், அரசு துறையில், எந்த வேலையும் நடப்பது இல்லை.கமல், திருமாவளவன், சீமான் உள்ளிட்டோர், ஆட்சிக்கு வந்தாலும், எந்த பயனும் இல்லை; வரப் போவதும் இல்லை. அவர்களால் உணர்ச்சிவசமாக பேச மட்டும் தான் முடியும். தி.மு.க., -- அ.தி.மு.க., ஊழல்வாதிகள்.

மேடவாக்கம்

மூன்று முறை விண்ணப்பித்தும், வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கவில்லை. அலைந்து திரிந்தது மட்டும் தான் மிச்சம். ஜனநாயக கடைமையை ஆற்ற நினைத்தாலும், அரசு அதிகாரிகளிடம் ஒத்துழைப்பு இல்லாததே, ஓட்டுப் போட முடியாததற்கு காரணம்.

மதுரை

மதுரையில் அடிப்படை வசதிகளே இல்லை. சாலையில் கழிவு நீர் ஆறாக ஓடுகிறது. இதற்கு தீர்வு காண வேண்டி, பலமுறை சம்பந்தப்பட்ட வார்டு அலுவலகத்திற்கு சென்று, புகார் தெரிவித்தேன். எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு அதிகாரிகள் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ஓட்டுப் போடவில்லை.

திருப்பூர்

இலவச திட்டங்களை, ஏழைகளுக்காக அறிவிப்பதில் தவறில்லை. வசதியானவர்கள் உட்பட அனைவருக்கும், வழங்குவது தவறு. அரசியல்வாதிகள், பணம் சம்பாதிக்கவே, இலவச அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். அதுவும், தேர்தல் சமயத்தில், புதிது புதிதாக அறிவிக்கின்றனர். மக்களை அடிமையாக்க, தேர்தலை மையப்படுத்தி இலவசங்கள் அறிவிக்கப்படுவதால், ஓட்டுப் போடவில்லை.

மதுரை

தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரென்றே தெரியவில்லை. 'போஸ்டர்' துண்டறிக்கை வாயிலாக மட்டுமே, வேட்பாளர்களின் புகைப்படங்களை பார்க்க முடிந்தது. ஒருவர் கூட, நேரில் ஓட்டு கேட்டு வரவில்லை. அந்த அதிருப்தியால், ஓட்டுப் போடவில்லை.

நெய்வேலி

என் வாக்காளர் அடையாள அட்டையில், முகவரி பிழையாக உள்ளது. அதை சரி செய்து தரும் படி, பல முறை மனு அளித்தேன். சரிசெய்து தரவில்லை; இணையதளத்தில் முயற்சித்தும் பலனில்லை. என் கோரிக்கையை நிறைவேற்றி தராத அதிருப்தியில் ஓட்டளிக்கவில்லை.

மதுரை

வயது முதிர்ந்த நிலையில் நடக்க முடியாமல், படுத்த படுக்கையாக உள்ளேன். அப்படி இருந்தும், ஓட்டளிக்க விரும்பினேன். அதற்காக, தேர்தல் அதிகாரிகளை முன்கூட்டிேய தொடர்பு கொண்டு, என் நிலையை எடுத்துக் கூறி, வாகன வசதி செய்து தரும்படி கேட்டேன். அதற்கு அவர்கள் உறுதி அளித்தனர். ஓட்டுப்பதிவு தினத்தன்று, வாகன வசதி கேட்டு, அதிகாரிகளை பல முறை தொடர்பு கொண்டேன். எந்த பதிலும் வரவில்லை. அதனால், என்னால் ஓட்டுப் போட முடியவில்லை.

காலாப்பட்டு, புதுச்சேரி

முக்கிய கட்சிகள் சார்பில் நிற்கும், வேட்பாளர்கள் அனைவரும் 'கிரிமினல்'கள். அதில், எந்த கிரிமினலுக்கு ஓட்டளித்தாலும், மக்களுக்கு சேவை செய்யப் போவதில்லை. அதனால், ஓட்டுப்போட மனம் வரவில்லை.

தாம்பரம்

முதியோர் காப்பகத்தில் வசிக்கிறேன். அந்த முகவரியில், வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும், 'பூத் சிலிப்' இல்லாததால், ஓட்டளிக்க முடியவில்லை. இதற்கு, தேர்தல் ஆணைய அதிகாரிகளின் அலட்சியமே காரணம்.

திண்டுக்கல்

எனக்கு இரண்டு பெண்கள். இரு பெண்கள் வைத்திருப்போருக்கு, அரசின் சார்பில் நிதியுதவி செய்யப்படுகிறது. நானும், அந்த திட்டத்தில் விண்ணப்பித்து உள்ளேன். நிதியுதவி பெறக் கூடிய காலம் வந்ததும், சென்னையில் உள்ள அரசு அலுவலகத்தில் நிதியுதவி கேட்டேன். அவர்கள், அலைக்கழித்தனரே தவிர, நிதியுதவி தரவில்லை. அரசு திட்டத்தின் பயன் கிடைக்காத விரக்தியில் ஓட்டளிக்கவில்லை.

அம்பத்துார்

ஒவ்வொரு முறை ஓட்டு போட்டும், தேர்தலில் வெற்றி பெற்றவர்களால், நல்ல சாலை வசதி கிடைக்கவில்லை. சாலையில் தோண்டிய பள்ளத்தை மூடாததால் விபத்து ஏற்படுகிறது. சுத்தமான குடிநீரும் கிடைப்பதில்லை. இந்த வெறுப்பால், தேர்தலில் ஓட்டுப் போடவில்லை.

கோவை

உடுமலை பேட்டையில் இருந்து, கோவைக்கு ஓட்டுப் போட செல்ல வேண்டும். பஸ்சில் செல்ல பணம் இல்லை. அதனால், ஓட்டளிக்கவில்லை. அடுத்த தேர்தலுக்காவது ஓட்டளிக்க வசதியாக, இலவச பஸ் சேவை ஏற்படுத்த வேண்டும்.

திருப்பூர்

தேர்தலில் நிற்க தகுதியே இல்லாதவர்கள், அரசியல்வாதிகளாக தேர்தலில் நிற்கின்றனர். அவர்களின் பின்னணியை பார்த்தால், ரவுடி, மோசடி பேர்வழிகள் என, தெரிகிறது. அப்படிப்பட்ட நபர்களுக்கு ஓட்டுப் போடுவதால், எந்த பலனும் கிடைக்க போவதில்லை.

ஆனைமலை, கோவை

தேர்தலில் வெற்றி பெறுவோர், மக்களுக்கு நன்மை செய்வதில்லை. அதனால், 'நோட்டா'வுக்கு ஓட்டளிக்கலாம் என்று எண்ணி னேன். 'ஒரு தொகுதியில், நோட்டாவுக்கு அதிக ஓட்டு கிடைத்தால், அதற்கு அடுத்து ஓட்டு வாங்கிய வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் படுவார்' என, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பதாக செய்திகள் வாயிலாக அறிந்தேன். அதனால், நோட்டாவுக்கு கூட ஓட்டளிக்கவில்லை.

கொளத்துார்

அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி, சம்பந்தப்பட்ட அரசு துறைகளிடம், பல முறை முறையிட்டேன். அங்குள்ள அதிகாரிகளுடன் சண்டை போட்டு, மன உளைச்சல் ஏற்பட்டதே தவிர, கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அந்த கோபத்தால் ஓட்டுப் போடவில்லை.

மாதவரம்

கொரோனா பாதிப்பால் ஓட்டுப் போடவில்லை.

பெரும்பாக்கம்

கொரோனா பாதிப்பால், குடும்பத்தில் உள்ள யாரும் ஓட்டுப் போடச் செல்லவில்லை

மயிலாப்பூர்

முகவரி மாற்றம் செய்து தரக்கோரி, தேர்தல் அலுவலகம், இணையதளம், கட்டணமில்லா தொலைபேசி எண் ஆகியவற்றில் பல முறை முயற்சி செய்தும், என் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற, தேர்தல் ஆணையத்திற்கு அக்கறை இல்லை. அதனால், ஓட்டளிக்க முடியவில்லை. தேர்தல் ஆணையத்தின் அலட்சியமே, நான் ஓட்டளிக்காததற்கு காரணம்.

திருப்பூர்

கொரோனா பாதிப்பால் ஓட்டளிக்க முடியவில்லை

ஸ்ரீபெரும்புதுார்

ஓட்டுப் போடச் சென்றபோது, என் ஓட்டை, ஒரு பெண் போட்டு விட்டார் என்பதை அறிய முடிந்தது. இது தொடர்பாக, அதிகாரிகளிடம் முறையிட்ட போது, அவர்கள் என் மீது தவறு இருப்பது போல கூறி, ஓட்டளிக்க அனுமதிக்கவில்லை. அதனால், ஓட்டுப் போட முடியவில்லை.

தாம்பரம்

தேர்தலில் நிற்பவர்களுக்கும், வெற்றி பெறுவோருக்கும் மக்கள் மீது அக்கறை இல்லை. அக்கறை இல்லாதவர்கள் விஷயத்தில், நாம் ஏன் அக்கறை செலுத்த வேண்டும் என்பதால் ஓட்டளிக்கவில்லை.

ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்

அரசியல்வாதிகளில், யார் நல்லவர்கள் என்று, அடையாளம் காட்ட வேண்டிய ஊடகங்களும், மக்களின் உணர்வுப் பூர்வமான கருத்துகளை வெளியிடாமல், தங்களின் கருத்துகளை திணித்தன. இதனால், நல்லவர்களை அடையாளம் காண முடியாததால், ஓட்டுப் போடவில்லை.

தாம்பரம்

அரசியல்வாதிகள் ஊழல் செய்கின்றனர். அவர்களுக்கு ஓட்டளித்தால், ஊழலுக்கு துணை போவதாக அர்த்தம் என, கருதி ஓட்டளிக்கவில்லை.

காட்டுமன்னார்கோவில்

எங்கள் தொகுதி, பல ஆண்டுகளாக, தனி தொகுதியாகவே உள்ளது. ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களே தொடர்ந்து, தேர்தலில் நிற்கின்றனர். அந்த சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ஓட்டுப் போடக்கூடாது என்பதால் ஓட்டளிக்கவில்லை.

அண்ணா நகர்

அரசியல்வாதிகள் சுயநலவாதிகள். பிரசாரம் என்ற பெயரில், மக்கள்கூட்டத்தை கூட்டி, கொரோனாவை பரப்பினர். மக்கள் மேல் அக்கறை இருந்திருந்தால், கொரோனா சமயத்தில் கூட்டம் சேர்த்திருப்பரா; தற்போது, கூட்டம் சேரக்கூடாது என, அறிவுறுத்தி வருகின்றனர். இப்படி ஏற்படும் என, எனக்கு முன்கூட்டியே தெரியும். அதனால் தான், சுயநலவாதிகளுக்கு ஓட்டுப் போடவில்லை.

திருப்பூர்

தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும், அதற்கு பின், மக்களின் வரிப் பணத்தை கொள்ளை அடித்தும், அரசியல்வாதிகள், நாட்டை கெடுத்து வைத்துள்ளனர். நாட்டை குட்டிச் சுவராக்கும் நபர்களை Fஊக்குவிக்க கூடாது என்பதற்காக, ஓட்டுப் போடவில்லை.

ராமநாதபுரம்

எங்கு பார்த்தாலும், லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது. அதற்கு, அரசியல்வாதிகளே முக்கிய காரணம். யார் வெற்றி பெற்றாலும், ஊழலையும், லஞ்சத்தையும் ஒழிக்க போவதில்லை. எனவே, யாருக்கும் ஓட்டுப் போடவில்லை.

எண்ணுார்

அரசு ஊழியரான என் தங்கைக்கு, 70 கி.மீ., துாரத்தில், ஓட்டுச்சாவடியில் வேலை வழங்கப் பட்டது. தங்கைக்கு உதவியாக இருந்ததால், என்னால் ஓட்டளிக்க முடியவில்லை. தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு, வீடுகளுக்கு அருகில் வேலை வழங்க வேண்டும்.

நங்கைநல்லுார்

கொள்ளை அடிக்கவே தேர்தலில் நிற்கின்றனர். அரசியல்வாதிகளை நினைத்தாலே, வெறுப்பு தான் ஏற்படுகிறது. மக்கள் மீது அக்கறை இல்லாத நபர்களுக்கு ஓட்டளித்து, அவர்களுக்கு நாம் ஏன் அடையாளம் வழங்க வேண்டும். இதனால், ஓட்டளிக்கவில்லை.

ராயபுரம்

தேர்தலில் நிற்கும் போது, மக்களை நாடி வருகின்றனர். வெற்றிபெற்ற பின் உதவி கேட்டு சென்றால், அலுவலகத்தின் உள்ளே கூட அனுமதிப்பது இல்லை. குறைகளை சொல்லவும் முடிய வில்லை. யார் வெற்றி பெற்றாலும், இந்த நிலையே ஏற்படும். இதனால், ஓட்டுப் போடவில்லை

திருப்பூர்

இலவச அறிவிப்புகள் பிடிக்கவில்லை. அரசியல் கட்சியினர் எந்த தேர்தலுக்கு, இலவச அறிவிப்பு வெளியிடாமல் உள்ளனரோ, அப்போது தான் ஓட்டுப் போடுவேன். அதுவரை ஓட்டுப் போட மாட்டேன்.

நங்கநல்லுார்

கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது, மக்கள், வருமானம் இன்றி மிகவும் சிரமப் பட்டனர். அப்போது, எந்த அரசியல் கட்சியினரும் மக்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. தேர்தல் சமயத்தில் மட்டும், மக்களை சந்திக்க வந்ததால் ஓட்டுப்போடவில்லை.

மதுரை

உறவினரின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக, சொந்த ஊருக்கு செல்ல வேண்டியது நேரிட்டதால், ஓட்டு போட முடியவில்லை. 'ஆதார்' எண்ணுடன், வாக்காளர் அடையாள அட்டையை இணைத்து, எந்த ஓட்டு சாவடியிலும் ஓட்டு போட அனுமதிக்க வேண்டும்.

குன்னுார்

தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு ஓட்டுப் போட பிடிக்கவில்லை. வேறு கட்சிக்கு ஓட்டு போட விருப்பம் வந்தாலும், அந்த கட்சி, திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கிறது. இதனால், யாருக்கும் ஓட்டுப் போடவில்லை.

தி.நகர்

ஓட்டுப் போட விடுமுறை அளிக்கவில்லை. எங்கள் நிறுவனத்தில் குறைந்த ஊழியர்களே பணிபுரிவதால், விடுமுறை அளிக்காதது குறித்து புகார் அளித்தால், உரிமையாளருக்கு தெரிந்து விடும். அதனால், புகார் அளிக்கவும் முடியவில்லை. ஓட்டுப் போடவும் முடியவில்லை.

மேற்கு மாம்பலம்

மாற்றுத்திறனாளியான என்னை, 2015 வெள்ளத்தின் போது, சகோதரர் சுமந்து சென்று காப்பாற்றினார். எங்களது தெருவில் என்னதான் மழை நீர் வடிய கட்டமைப்பு வசதி இருந்தாலும், சாரல் மழைக்கே குளம் போல் மழை நீர் தேங்குகிறது.
சென்னை மாநகரின் பல இடங்களில், மின்சார 'கேபிள்'களை தரைக்கு அடியில் புதைத்து உள்ளனர். ஆனால், என் வீடு அமைந்துள்ள தெருவில் மட்டும் கேபிள் புதைக்கப்படவில்லை. என் கோரிக்கைக்கு செவி சாய்க்காத அரசியல்வாதிகளுக்கு ஓட்டுப் போட, நான் விரும்பவில்லை.

கோவை

ஓட்டுப்பதிவுக்கு சில தினங்களுக்கு முன்னர் வரை, அனைத்து வாக்காளர்களுக்கும் 'பூத் சிலிப்' வழங்கப்படும். இம்முறை பூத் சிலிப் வழங்கப்படவில்லை. இதனால், எனக்கு ஓட்டு இல்லை என்ற மனநிலைக்கு வந்ததால், ஓட்டுப் போடவில்லை.

தேனி

தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் ஊழலில் கை தேர்ந்தவர்கள். அவர்களை தவிர, மற்றவர்களுக்கு ஓட்டுப் போட்டாலும் எந்த பயனும் இல்லை. இதனால், யாருக்கும் ஓட்டுப் போடவில்லை.

சிதம்பரம்

சில தினங்களுக்கு முன் என்னுடைய, கை, கால் எலும்பு முறிந்து விட்டது. தபால் ஓட்டு போட எனக்கு அனுமதி தரும்படி, தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை வைத்தேன். என் கோரிக்கைக்கு, அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை. ஜனநாயக கடமையை ஆற்ற முடியாதது, எனக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது.

அண்ணா நகர்

பல்லாவரத்தில், 40 ஆண்டுகளாக வசதித்து வந்தேன். ஒவ்வொரு தேர்தலிலும், தவறாமல் ஓட்டுப்போட்டு வந்தேன். இம்முறை ஓட்டுப்போட சென்றால், வாக்காளர் பட்டியலில் இருந்து என் பெயர் நீக்கப்பட்டிருந்தது. இது, எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே, நான் ஓட்டுப் போட முடியவில்லை.

கோவை

வாக்காளர் அடையாள அட்டை வேண்டி, சிறப்பு முகாமில் விண்ணப்பித்தேன்; கிடைக்க வில்லை. ஆன்லைனில் விண்ணப்பித்தேன் அதிலும் கிடைக்கவில்லை. பலமுறை அலைந்து, திரிந்ததே மிச்சம். இதனால், ஓட்டுப் போட முடியவில்லை.

கள்ளக்குறிச்சி

ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை. வெளிநாட்டில் நடத்துவது போல, ஓட்டுச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்.ஒவ்வொரு கட்சியினரும், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், சில பொருட்களை இலவசமாக தருகிறோம்' என்று அறிவிக்கின்றனர். இதை, ஓட்டுக்காக அரசியல் கட்சியினர் கொடுக்கும் லஞ்சமாகவே, நான் கருதுகிறேன். எனவே, யாருக்கும் ஓட்டுப் போட பிடிக்கவில்லை.

உடுமலை

கொடுக்கும் வாக்குறுதிகளை, அரசியல்வாதிகள் நிறைவேற்றுவது இல்லை. 'டாஸ்மாக்' கடை யால் பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிந்தும், மது விற்பனை செய்ய அரசு அனுமதிக்கிறது. இதனால், ஏற்பட்ட மன வருத்தமே ஓட்டுப் போடாததற்கு காரணம்.

வேளச்சேரி

ஐ.ஐ.டி.,யில் பணியாற்றி, ஓய்வு பெற்ற பின் வேளச்சேரியில் குடியேறினேன். சிறப்பு முகாமில், முகவரி மாற்றம் வேண்டி விண்ணப்பித்து இருந்தேன். அதிகாரிகளோ, முகவரி மாற்றம் செய்யாமல், வாக்காளர் பட்டியலிலிருந்து பெயரை நீக்கம் செய்து விட்டனர். அதனால், என்னால் ஓட்டு போட இயலவில்லை.

மேற்கு மாம்பலம்

முதியவர்களுக்கு, தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், பலருக்கு தபால் ஓட்டு போடுவதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை என்பதே உண்மை. நான், 1950 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, தபால் ஓட்டு வேண்டி விண்ணப்பித்து இருந்தேன்.அதில் பேசிய நபரோ, உங்களது வீட்டிற்கு அதிகாரிகள் வருவர் என, உறுதி அளித்தார்; யாரும் வரவில்லை. கொரோனா அச்சத்தால், நான் நேரில் சென்று ஓட்டுப் போடவில்லை.

மயிலாப்பூர்

மக்கள் குறைகளை தீர்க்காத அரசியல்வாதிகளுக்கு ஏன் ஓட்டு போட வேண்டும். லஸ் 'சர்ச்' சாலையில் பயன்பாடின்றி உள்ள, வாகனங்களை அகற்ற யாரும் நடவடிக்கை எடுப்பது இல்லை. தமிழக அரசியல்வாதிகள் மீது உள்ள வெறுப்பின் காரணமாகவே ஓட்டுப் போடவில்லை.

மதகடிப்பட்டு, புதுச்சேரி

ஓட்டு போட வேண்டும் என்பது கட்டாயம், ஜனநாயக கடமை என்று சொல்றாங்க. அதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், மக்களை ஆளக் கூடியவர்களுக்கு தகுதி நிர்ணயிக்கப்பட வில்லை. படிப்பதற்கு ஒரு தகுதித் தேர்வு உருவாக்குவது போல, தேர்தலில் நிற்பதற்கு அடிப்படை தகுதி நிர்ணயிக்க வேண்டும்.

வீடு வீடாக ஓட்டு கேட்பதை நிறுத்த வேண்டும்.மக்களுக்கு இலவச கல்வி, சுகாதாரம், குடிநீர் மற்றும் சாலை வசதி செய்து கொடுத்தால் மட்டுமே போதுமானது. அடுத்த தேர்தல் நடத்தும் போது, வேட்பாளர்களுக்கு அடிப்படை கல்வி மற்றும் இதர தகுதிகளை தேர்தல் கமிஷன் நிர்ணயிக்க வேண்டும்.

மதுரவாயல்

மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, அரசு முதலில் செய்து தர வேண்டும். கொரோனா தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க, குழந்தைகள் பள்ளி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பள்ளி சென்றால் தான், அவர்களுக்கு தெளிவான கல்வி அறிவு இருக்கும். 'ஆன்லைன்' வகுப்பு குழந்தைகளுக்கு உதவாது. இது, அடுத்த தலைமுறையை பாதிக்கும் விஷயம். அரசின் மீது நம்பிக்கை குறைந்ததால், ஓட்டுப் போடவில்லை.

ஊரப்பாக்கம்

ஏழு ஆண்டுகளாக, ஊரப்பாக்கம் காரணை புதுச்சேரியில் ஓட்டு போட்டு வந்தோம். ஜனவரி மாதம் வாக்காளர் பட்டியலை பார்த்த போது, என் பெயர் இருந்தது. ஆனால், ஓட்டு போடச் சென்ற போது, என் பெயர் நீக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.என் மனைவி, மகனுக்கு இருந்தது; எனக்கு இல்லை. வெயிலில் ஒன்றரை மணி நேரமாக நின்று, ஓட்டுப் போட உள்ளே சென்ற போது பெயர் இல்லை. அதனால் ஓட்டுப் போடாதது, மிகுந்த வருத்தமளிக்கிறது.

கோவை

நான், கோவையில் வேலை செய்கிறேன். என் சொந்த ஊரான விழுப்புரத்தில், எனக்கு ஓட்டு இருக்கிறது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், நான், ஓட்டுப் போட செல்லவில்லை. நான் செலவு செய்து, ஓட்டுப் போடும் அளவிற்கு, யோக்கியன்கள் தேர்தலில் நிற்கவில்லை. வெற்றி பெற்றாலும் அவர்கள், மக்களுக்கு நல்லது செய்யப்போவதில்லை. பிரச்னை என கதவை தட்டியதும், அதைத் தீர்த்து வைக்கப் போவதும் இல்லை. அதனால், ஓட்டுப் போடவில்லை.

விருதுநகர்

மத்திய, மாநில அரசுகள் மீதான அதிருப்தி காரணமாகவே ஓட்டுப் போடவில்லை. கொரோனா ஊரடங்கை அமல்படுத்துவதற்கு, அவர்கள் தான் காரணம். தேர்தலுக்கு முன், தினமும் லட்சக் கணக்கான மக்களை கூட்டி, முக கவசம் கூட அணியாமல் பிரசாரம் செய்து விட்டு, தற்போது முக கவசம் அணிய கூறுகின்றனர். இதனால், பாதிக்கப்படுவது மக்கள் தான்.பிரசாரத்தில் ஈடுபட்ட எந்த தலைவரும், முக கவசம் அணியவில்லை. அவர்கள், தேவைக்காக மக்களை பயன்படுத்தி விட்டு, தற்போது மக்களை வதைக்கிறார்கள். அவர்களால் தான் கொரோனா பரவுகிறது. அவர்கள் மீதான அதிருப்தியினால் ஓட்டுப் போடவில்லை.

'ஏன் ஓட்டு போடவில்லை' என, நம் நாளிதழ் சார்பில், ஓட்டு போடாதவர்களிடம் கருத்துக்கள் கேட்டதற்கு, அவர்கள் அளித்த பதிலில் இருந்து, தேர்தல் ஆணையத்தின் அலட்சியமும், அரசியல்வாதிகளின் ஊழல்களுமே, முக்கியக் காரணங்களாக தெரிய வந்துள்ளன. இக்கருத்துக்களைப் படித்து, தன் செயல்பாடுகளை தேர்தல் ஆணையம் துல்லியமாய் திருத்தினால், அடுத்த தேர்தலில் அதிக வாக்காளர்களை ஓட்டு போட வைக்க முடியும்.

போட்டியிடக் கூடிய அரசியல்வாதிகளுக்கு அடிப்படைத் தகுதியை நிர்ணயிக்க, அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்; அதற்கும் தேர்தல் ஆணையம் முயற்சி செய்தால், 100 சதவீத வெற்றி காணலாம்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)