முகவர்கள் ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை வெளியில் செல்ல அனுமதியில்லை

ராமநாதபுரம் ; லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடியும் வரைமுகவர்கள் வெளியில் செல்ல அனுமதி இல்லை. அலைபேசி, ஐபேட், லேப்டாப் கொண்டுவரக் கூடாது என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கையின் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, எஸ்.பி., சந்தீஷ் முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் கூறியதாவது:
ராமநாதபுரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டசபை தொகுதிக்கான ஓட்டுகள் ஜூன் 4ல் அண்ணா பொறியியல் கல்லுாரியில் காலை 8.00 மணிக்கு எண்ணப்படும். ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைக்கப்படுகிறது.
வேட்பாளர்களின் முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். அதில் ஒதுக்கீடு செய்துள்ள சட்டசபை தொகுதி, மேஜை எண் ஆகிய விபரங்கள் குறிப்பிடப்படும். அந்த தொகுதியை தவிர்த்து வேறு இடங்களில் முகவர்கள் பார்வையிடக் கூடாது.
வேட்பாளர், தலைமை ஏஜன்ட் அனைத்து சட்டசபை தொகுதி ஓட்டு எண்ணிக்கையை மேற்பார்வையிட அனுமதியுண்டு. அலைபேசி, ஐபேட், லேப்டாப் உட்பட எந்த மின்னணு சாதனத்தையும் எடுத்து வரக்கூடாது.
ஓட்டு எண்ணிக்கை முகவர்கள் பேனா, குறிப்பேடு மற்றும் 17சி படிவம் ஆகியவற்றை எடுத்து வரலாம். முகவர்கள் ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை வெளியில் செல்ல அனுமதியில்லை. அவர்கள் காலை 6:00 மணிக்கு முன்னரே வர வேண்டும்.
போலீசார் சோதனை முடிந்து ஓட்டு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தாமதமாக வந்தால் கட்டாயம் அனுமதி கிடையாது என்றார். கூட்டத்தில் பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) இளங்கோவன், வேட்பாளர்கள், மற்றும் முகவர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து