2 தொகுதியா.. பம்பரம் தரத் தயார் : வைகோவுக்கு அடுத்த சிக்கல்
பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி வைகோ தொடர்ந்த வழக்கில் தேர்தல் கமிஷன் தெரிவித்த பதில், ம.தி.மு.க., வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், ம.தி.மு.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கப்படாததால் அக்கட்சியின் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காததால், மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்தச் சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வது சிரமம் எனக் கூறி, படகு அல்லது பாய்மரப் படகு சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் கமிஷனில் நாம் தமிழர் முறையிட்டுள்ளது.
இதே நிலை தான் ம.தி.மு.க.,வுக்கும் ஏற்பட்டது. பம்பரம் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கோரிக்கை வைத்தார்.
அந்த மனுவில், '2006 சட்டமன்றத் தேர்தலில் 5.98 சதவீத வாக்குகளைப் பெற்றதால் கட்சி அங்கீகாரத்தை ம.தி.மு.க., இழந்தது. ஆனாலும், 2014 லோக்சபா தேர்தலில் ம.தி.மு.க.,வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதேபோல், இந்த தேர்தலிலும் பம்பரம் சின்னத்தை ஒதுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டது.
பொதுச்சின்ன பட்டியலில் பம்பரம் இல்லாததால் தங்களுக்கு எளிதாக கிடைக்கும் என ம.தி.மு.க., எதிர்பார்த்தது. ஆனால், தேர்தல் கமிஷனில் உரிய பதில் கிடைக்கவில்லை.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ம.தி.மு.க., சார்பில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவின் மீது விளக்கம் அளிக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்று ம.தி.மு.க., தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் கமிஷன் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "ஒரு கட்சி 2 தொகுதிகளில் போட்டியிட்டால் அவர்கள் விரும்பும் சின்னத்தை வழங்கலாம் என்பது விதியாக உள்ளது. ஆனால், ம.தி.மு.க., ஒரு தொகுதியில் தான் போட்டியிடுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, "சின்னத்தை ஒதுக்குவது குறித்து தேர்தல் அதிகாரி தான் முடிவெடுப்பார். பொதுச் சின்னத்தின் பட்டியலில் பம்பரம் உள்ளதா என்பதைப் பற்றி மதியம் 2.15 மணிக்கு தேர்தல் கமிஷன் பதில் அளிக்க வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
"ம.தி.மு.க.,வின் சின்னம் என்ன என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்" என அக்கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
வாசகர் கருத்து