'தோற்றால் உடனே ராஜினாமா': அமைச்சர் மூர்த்தி ஆவேசம்
'தேனி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெறாவிட்டால், மறுநாளே அமைச்சர், மாவட்ட செயலர் பதவியை ராஜினாமா செய்வேன்' என, மதுரை மாவட்டம் அலங்காநல்லுாரில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி ஆவேசமாக பேசினார்.
தேனி லோக்சபா தொகுதிக்குட்பட்ட மதுரை மாவட்டம் பாலமேடு மஞ்சமலை சுவாமி கோவிலில் தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், அமைச்சர் மூர்த்தி, கூட்டணி கட்சி நிர்வாகிகள் வழிபட்டனர். அலங்காநல்லுாரில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:
கடந்த லோக்சபா தேர்தலில் 40க்கு தேனியை தவிர்த்து 39ல் வெற்றி பெற்றோம். தேனி தொகுதியில் தோற்றதற்கு, சோழவந்தான் சட்டசபை தொகுதியில் குறைவான ஓட்டுகள் பெற்றதே காரணம். தேனியில் தோற்ற வருத்தம் முதல்வருக்கும், அமைச்சர் உதய நிதிக்கும் இன்றும் உள்ளது.
இங்கு பொறுப்பில் உள்ளோருக்கு பொறுப்பில்லை. கட்சிக்காரர்களிடம் நேரில் சென்று பேசி அழைத்து வராமல் அலைபேசியில் அரசியல் செய்தால் எப்படி உருப்படும். உங்களால் பார்க்க முடியவில்லை என்றால் ஒதுங்கி விடுங்கள்.
நான் பார்த்துக் கொள்கிறேன். பாலில் தண்ணீர் ஊற்றுவது போல் பொய் பேசுவதை விடுங்கள். பின் மூர்த்தியின் பேச்சு, நடவடிக்கை எப்படி இருக்கும் என உங்களுக்கு நன்கு தெரியும். அதற்கு வாய்ப்பு தராதீர்கள்.
வேதனையுடன் இங்கு நின்று பேசுகிறேன். இன்று வருவதாக சொன்ன வாகனங்கள், 10,000 பேர் எங்கே? முதல்வர் இரவு பகலாக உழைக்கிறார். இன்று நடந்தது அத்தனையும் துரோகம். இது எனக்கோ, தங்க தமிழ்ச்செல்வனுக்கோ அல்ல. உங்களை கட்சியில் ஆளாக்கிய முதல்வருக்கு செய்துள்ள துரோகம். நான் ஏதேனும் 'பச்சையாக' சொல்லி விடுவேன், நிருபர்கள் எழுதிக் கொண்டாலும் பரவாயில்லை, உண்மையை சொல்கிறேன்.
தங்க தமிழ்ச்செல்வன் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை எனில், நான் மறுநாளே வடக்கு மாவட்ட செயலர், அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்து விடுவேன்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
வாசகர் கருத்து