அடிமனை பிரச்னை விஸ்வரூபம்: 25 வேட்பாளர்களை நிறுத்த முடிவு

திருவானைக்காவல் கோவில் நிலம் அடிமனை பிரச்னையால், திருச்சி லோக்சபா தொகுதியில், 25 வேட்பாளர்களை நிறுத்த, அடிமனை உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துஉள்ளது. -
திருச்சி திருவானைக்காவல் கோவில் நிலம் பத்திரப்பதிவு தொடர்பாக, கோவில் நிலத்தில் உள்ளோருக்கும், கோவில் நிர்வாகத்துக்கும் பிரச்னை நடந்து வருகிறது. இதனால், திருவானைக்காவல் கோவில் நிலங்கள் பத்திரப்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, திருவானைக்காவல் கோவில் அடிமனை உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நேற்று முன்தினம் இரவு நடந்தது. கூட்டத்தில் நிர்வாகி பத்மநாபன் பேசியதாவது:
திருவானைக்காவல் அடிமனை பிரச்னைக்கு தீர்வு ஏற்பட, பலமுறை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், திருச்சி லோக்சபா தொகுதியில், நம் சங்கத்தின் சார்பில், 25 வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்.
அப்போதாவது தமிழக அரசு இப்பிரச்னையில் தலையிடுகிறதா என்று பார்ப்போம். ஏற்கனவே, ஐந்து பேர் வேட்பு மனு விண்ணப்பம் வாங்கி உள்ளனர். இன்று மற்றவர்கள் வேட்பு மனு விண்ணப்பம் வாங்கி, 27ல் வேட்பு மனு தாக்கல் செய்வர். இப்பிரச்னையில் உரிய தீர்வு கிடைக்காவிட்டால், அடுத்தடுத்து போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஏற்கனவே, ஸ்ரீரங்கம் கோவில் நிலம் அடிமனை பிரச்னை உள்ளது. இந்நிலையில், திருவானைக்காவல் கோவில் அடிமனை பிரச்னை தேர்தல் நேரத்தில் விஸ்வரூபம் எடுப்பதால், ஆளுங்கட்சிக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
வாசகர் கருத்து