பக்குவமில்லா துரை: சீறிய ஸ்டாலின்

துரை வைகோவால் முதல்வர் ஸ்டாலின் மிகுந்த கடுப்பில் இருக்கிறார். ம.தி.மு.க., தலைவரும், துரை வைகோவின் தந்தையுமான வைகோவிடம், அவரது 52 வயது மகனின் பக்குவ குறைபாடு பற்றி, போனில், முதல்வர் புகார் செய்துள்ளார்.

நேற்று முன்தினம், திருச்சியில், தி.மு.க., செயல் வீரர்களின் கூட்டம் நடந்தது. அதில், தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள், அமைச்சர்கள் நேரு மற்றும் மகேஷ், தி.மு.க., கூட்டணியின் திருச்சி வேட்பாளர் ம.தி.மு.க.,வை சேர்ந்த துரை வைகோ ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, தி.மு.க., நிர்வாகிகள், 'பிரசாரத்திற்கு குறைந்த காலகட்டமே இருக்கிறது. துரை வைகோ, உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் பிரசாரம் சுலபமாக இருக்கும். வெற்றியை எளிதில் உறுதி செய்யலாம்' என கருத்து தெரிவித்தனர். பதில் அளித்த துரை வைகோ, 'செத்தாலும் சொந்த சின்னத்தில் தான் போட்டியிடுவேன்; பதவிக்காக வேறு சின்னத்தில் போட்டியிட விரும்பவில்லை' என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

கடுப்பான ஸ்டாலின்



அதை கேட்ட அமைச்சர்கள் உட்பட அனைத்து தி.மு.க.,வினரும் எரிச்சல் அடைந்தனர். கூட்டத்திற்கு பின், நிர்வாகிகள், அமைச்சர்களிடம் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். இந்த விஷயத்தை அமைச்சர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவிக்க, அவரும் கடுப்பானார்.

காரணம், திடீரென வலுத்து வரும் எதிர்க்கட்சிகளின் பலத்தால், 39க்கு 39 இடங்களை தி.மு.க., கைப்பற்றும் என்று இருந்த நிலை, இப்போது சற்று மாறி இருக்கிறது. அதனால், சாதகமான தொகுதிகளை விட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் முதல்வர் செயல்படுகிறார். திருச்சி, தி.மு.க., கூட்டணிக்கு சாதகமான தொகுதியாக கருதப்பட்டாலும், இந்த முறை, வெற்றியை உறுதி செய்ய நல்ல உழைப்பு தேவைப்படும் என, தெரிகிறது.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி சார்பில் காங்கிரசின் திருநாவுக்கரசர் இங்கு போட்டியிட்டு, 4.59 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். ஆனால், 2009 மற்றும் 2014ல் அ.தி.மு.க., தான் வெற்றிபெற்றது. திருச்சி தொகுதி, ஒவ்வொரு தேர்தலிலும், ஏதேனும் ஒரு கட்சி பக்கம் சாயக்கூடிய தொகுதி, இந்தெந்த கட்சிகளுக்கு நிலையாக இவ்வளவு ஓட்டுகள் கிடைக்கும் என்று சொல்வது சிரமம்.

கடந்த 2019ல், தமிழகத்தில் மோடி எதிர்ப்பலை வலுவாக இருந்ததால், காங்கிரசால் அமோக வெற்றிபெற முடிந்தது. ஆனால், இந்த முறை நிலை அப்படி இல்லை. எதிர்க்கட்சிகளும் கூட்டணி வாயிலாக பலம் பெற்று உள்ளன. தே.மு.தி.க.,வுக்கு இங்குகிட்டத்தட்ட ஒரு லட்சம் ஓட்டுகள் இருக்கின்றன. அது அ.தி.மு.க.,வுக்கு கூடுதல் பலமாக அமையும். அ.தி.மு.க., வேட்பாளர் கருப்பையா பன்னீர்செல்வமும் 'வெயிட்டான' நபர் என, கூறப்படுகிறது. புதுக்கோட்டை விஜயபாஸ்கர் சிபாரிசில் வந்தவர், மணல் ராமசந்திரனின் சொந்தக்காரர். நன்கு செலவு செய்யக்கூடியவர்.

அதேபோல், அ.ம.மு.க.,வின் அமைப்பு செயலர் சாருபாலா தொண்டைமான் இங்கு சுயேச்சையாக போட்டியிட்டே ஒரு லட்சம் ஓட்டுகளை பெற்றவர். அவருடைய பலம், பா.ஜ., கூட்டணிக்கு பலம் சேர்க்கும்.

ஸ்டாலின் சொன்னதென்ன?



இந்த பின்னணியில் தான், முதல்வர் துரை வைகோ மீது கடுப்பாகி, வைகோவிடம் புகார் செய்துள்ளார். வைகோவிடம், முதல்வர் பேசியதாக கூறப்படுவது:

தொகுதி பங்கீட்டின் போது எல்லா கூட்டணி கட்சிகளும் எனக்கு சங்கடத்தை கொடுத்தன. கம்யூனிஸ்டகள் மட்டும் தான் சுமுகமாக இருந்தனர். நீங்களும் நான்கு தொகுதி கேட்டு நிறைய அழுத்தம் கொடுத்தீர்கள். உங்களை கூட்டணியில் சேர்த்திருப்பதே தி.மு.க.,வினருக்கு பிடிக்கவில்லை. ஆனால், என் தந்தை உங்கள் மீது உள்ள அபிமானத்தில் சேர்த்துக்கொண்டார். அதே மரியாதை எனக்கும் இருக்கிறது.

அதனால் தான் ம.தி.மு.க., கட்சி இருக்கும் நிலையை கூட பொருட்படுத்தாமல் ஒரு சீட்டை ஒதுக்கினோம். உங்கள் மகனுக்கு திருச்சி கண்டிப்பாக வேண்டும் என்று வற்புறுத்தினீர்கள். அதனாலேயே நாங்கள் காங்கிரசுடன் மல்லுகட்டும் சூழல் வந்தது. திருநாவுக்கரசர் வரலாறு காணாத விகிதத்தில் ஜெயித்தார். காங்கிரசுக்கு அந்த தொகுதியை விட்டுக்கொடுக்க மனசே இல்லை. தி.மு.க.,விலேயே பலரும் அந்த தொகுதியை கேட்டு வந்தனர். அவர்களை எல்லாம் புறம் தள்ளி உங்கள் மகனுக்காக அந்த தொகுதியை வாங்கிக் கொடுத்தேன்.

ஆனால், அவரோ, செயல்வீரர் கூட்டத்தில் எந்த பக்குவமும் இல்லாமல் உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார். 'செத்தாலும் பரவாயில்லை தனி சின்னம் தான் வேண்டும்' என்று பேசினால், எந்த தி.மு.க.,காரர் தேர்தல் வேலை செய்ய வருவார்? அவர்கள் மனம் புண்படாதா? சொந்த சின்னத்தில் போட்டியிடுவதில் அவர் உறுதியாக இருந்தார் என்றால், அதை நாசூக்காக வேறு விதமாக சொல்லக்கூடாதா? அல்லது ஒன்றும் சொல்லாமல் கூட விட்டிருக்கலாம். தனியே அமைச்சர்களிடமோ, என்னிடமோ சொல்லி இருக்கலாம்.

கள நிலைமை அறிந்து நடக்க வேண்டாமா? அவரை ஜெயிக்க வைப்பது அவ்வளவு எளிது அல்ல. அனைவரும் உழைத்தால் தான் அது சாத்தியம். நான் சொல்வதை சொல்லிவிட்டேன். நீங்கள் தான் அவரிடம் பேசி, மேற்படி பிரச்னை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு, முதல்வர் பேசியதாக கூறப்படுகிறது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்