ஸ்கிரிப்டை மாற்ற மாட்டேன் : உதயநிதி உறுதி
"எங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும். நீட் வேண்டாம். பழனிசாமியை போல ஆளுக்கு தகுந்தார்போல ஸ்கிரிப்டை மாற்றிப் பேசும் ஆள் நான் இல்லை" என, அமைச்சர் உதயநிதி பேசினார்.
காஞ்சிபுரத்தில் நடந்த பிரசாரத்தில் உதயநிதி பேசியதாவது:
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று 2021ல் ஆட்சிக்கு வந்தோம். அப்போது கொரோனா காலம். பிரதமர் மோடி பேசும்போது, 'வீட்டுக்குள் போய் ஒளிந்து கொள்ளுங்கள்... வேலைக்குப் போக வேண்டாம்' என்றார். பிறகு ஒருநாள், 'வெளியில் வந்து விளக்குப் பிடியுங்கள். தட்டு எடுத்து வந்து ஒலி எழுப்பினால் கோவிட் பயந்து ஒடிவிடும்' என்றார்.
ஆனால் முதல்வர் ஸ்டாலினோ, கோவிட் ஆடை அணிந்து கொண்டு கோவையில் கொரோனா வார்டுக்கு சென்றார். இந்தியாவிலேயே அதிக கொரோனா தடுப்பூசியை போட்டு வழிகாட்டியது தமிழக மக்கள் தான்.
ஆட்சிக்கு வந்தபோது கடும் நிதி நெருக்கடியிலும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டத்தில் முதல் கையெழுத்து போட்டார். அந்த திட்டத்தின் மூலம் 460 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர். காலை உணவுத் திட்டம் மூலம் தரமான உணவு கிடைக்கிறது.
உயர்கல்வி படிக்கும் பெண்களின் வங்கிக்கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. பெண்களுக்கு மட்டுமல்ல, தமிழ்ப் புதல்வன் என்ற திட்டத்தில் மாணவனுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க உள்ளனர்.
மகளிர் உரிமைத் தொகையானது, 1 கோடியே 15 லட்சம் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தேர்தல் முடிந்த பிறகு தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் இந்த தொகை சென்றடையும்.
10 வருடமாக இந்தியாவை மோடி ஆண்டிருக்கிறார். இதுவரை தமிழகத்துக்காக எதையாவது செய்தாரா. மோடி சுடுவது எல்லாம் வடை தான். 2019ம் ஆண்டு மதுரைக்கு வந்து எய்ம்ஸ் கட்டப் போகிறோம் என அடிக்கல் நாட்டினார். நேற்று திருச்சியில் பேசிய பழனிசாமி, 'உதயநிதி கல்லைத் தூக்கிவிட்டார்' எனப் பேசினார். நான் கையில் வைத்திருக்கும் இந்தக் கல் தான், அந்தக் கல்.
இந்தக் கல்லை திருப்பிக் கொடுக்க மாட்டேன். 'மீண்டும் கல் எடுத்துவிட்டார், ஸ்கிரிப்டை மாத்துங்க' என பழனிசாமி கூறுகிறார். நான் எய்ம்ஸ் கட்டுவதற்காக வைக்கப்பட்ட கல்லை காட்டினேன். ஆனால், பழனிசாமி பிரதமரிடம் பல்லைக் காட்டினார். (புகைப்படத்தைக் காட்டுகிறார்)
2029 ஜனவரி மாதம் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டியபோது எடுத்த படம் இது. நான் ஏன் ஸ்கிரிப்டை மாற்ற வேண்டும். எங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும். நீட் வேண்டாம். பழனிசாமியை போல ஆளுக்கு தகுந்தார்போல ஸ்கிரிப்டை மாற்றிப் பேசும் ஆள் நான் இல்லை. என் கொள்கையைத் தான் பேசுவேன்.
தேர்தல் வருவதால் தமிழகத்தை மோடி சுற்றி சுற்றி வருகிறார். அவர் இங்கேயே தங்கியிருந்தாலும் ஜெயிக்கப் போறது கிடையாது. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஒரு ரூபாயை கூட பிரதமர் தரவில்லை.
'நாங்க என்ன ஏ.டி.எம் மிஷினா வைத்திருக்கிறோம்' என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா கேட்டார். 'உங்க அப்பன் வீட்டுப் பணத்தைக் கேட்கவில்லை' என்றேன். இதில் எதாவது தவறு இருக்கிறதா? இதுவரையில் பதில் இல்லை.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களை ஈ.டி, சி.பி.ஐ., என மிரட்டிப் பணிய வைத்ததைப் போல எங்களையும் மிரட்டிப் பார்க்க நினைத்தார்கள். பொய் வழக்கின் மூலம் அமைச்சர் செந்தில்பாலாஜி சிறையில் இருக்கிறார். விரைவில் அவர் வெளியே வருவார்.
அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் போட்டு பதவியைப் பறித்தனர். உச்ச நீதிமன்றம் சென்று மீண்டும் அவரை அமைச்சராக பதவியேற்க வைத்தோம். உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு இந்தளவுக்கு ஆளான கவர்னர் வேறு யாருமில்லை.
மத்திய அரசின் ஊழல்களை சி.ஏ.ஜி., சுட்டிக் காட்டியுள்ளது. மத்திய அரசிடம் ஏழரை லட்சம் கோடி ரூபாய்களுக்கு கணக்கு இல்லை. ஒரு கி.மீ ரோடு போட 250 கோடி ரூபாயை செலவு செய்துள்ளனர். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு ஒரே செல்போன் எண்ணில் இருந்து காப்பீடு பணத்தை எடுத்துள்ளனர்.
10 வருட ஆட்சியில் வாழ்ந்தது ஒரே குடும்பம் தான். அது மோடியின் நெருங்கிய நண்பரான அதானி மட்டும்தான். அனைத்து பொதுத்துறைகளையும் அவரிடம் கொடுத்துவிட்டனர். இது தான் பா.ஜ., அரசின் ஒரே சாதனை.
இவ்வாறு உதயநிதி பேசினார்.
வாசகர் கருத்து