குறுகிய எண்ணம் கொண்டவர் ஸ்டாலின்: பழனிசாமி கண்டுபிடிப்பு
"நாமக்கல் எம்,.பி.,யாக இருந்த காந்திசெல்வன் மத்தியில் சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தபோது தான் நீட் தேர்வு வந்தது. இவர்கள் நீட்டை கொண்டு வந்துவிட்டு தப்பிக்க பார்க்கிறார்கள்" என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.
கள்ளக்குறிச்சி அ.தி.மு..,க வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து பழனிசாமி பேசியதாவது:
ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. என்னைப் பற்றி அவதூறாக பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இது தெய்வசக்தி படைத்த கட்சி. ஸ்டாலினை போல ஓராயிரம் பேர் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.
இந்தக் கட்சியை சிலர் அழிக்க நினைக்கிறார்கள். அ.தி.மு.க.,வை பற்றி யார் பேசினாலும் அவர்கள் இருக்கும் இடமே தெரியாமல் போய்விடுவார்கள். அ.தி.மு.க.,வை முடக்க நினைத்தவர்கள் இன்று எந்த நிலையில் இருக்கிறார்கள் எனறு பார்க்க வேண்டும்.
சிலர் கட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் கூட ஆகவில்லை. உன்னைப் போல எத்தனையோ பேரை பார்த்த கட்சி இது. அ.தி.மு.க.,வை அழிப்பதற்கு இந்த பூமியில் யாரும் பிறக்கவில்லை. 30 ஆண்டுகள் இந்த மாநிலத்தை ஆட்சி செய்திருக்கிறோம்.
அ.தி.மு.க., இருப்பதால் தான் ஏழை மக்களுக்கு நிறைய திட்டங்கள் கிடைத்துள்ளன. அ.தி.மு.க.,வின் ஐ.டி., விங் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கைப் போட்டு முடக்கப் பார்க்கிறார்கள். அவற்றை எல்லாம் சட்டரீதியாக சந்திப்போம்.
தி.மு.க., சார்பாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் ஸ்டெர்லைட்டை பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். அந்த நிறுவனத்துக்கு 86 ஏக்கர் நிலத்தைக் கொடுத்தது ஸ்டாலின். அதை சட்டமன்றத்தில் பேசி அவையில் பதிவு செய்துள்ளனர். அந்த ஆலை முதலீடு செய்வதற்கு உங்கள் தயவு தேவைப்பட்டது.
அ.தி.மு.க., ஆட்சியில் அந்த ஆலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தோம். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் புதுப்பிக்க வேண்டும் என அவர்கள் வந்தபோது, அதைப் புதுப்பிக்காமல் இருந்தோம்.
அந்த சம்பவம் நடப்பதற்கு முன்பு 144 உத்தரவு போடப்பட்டது. ஆனால், உங்கள் கட்சி எம்.எல்.ஏ., ஊர்வலம் நடத்தி கலவரத்தைத் தூண்டியதால் தான் விரும்பத்ததகாத சம்பவம் நடந்தது.
1972ல் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 1 பைசா குறைக்க வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களை குருவிகளைப் போல சுட்டது தி.மு.க., அரசு.
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வுக்காக போராடியபோது, அவர்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தியதில் ஆற்றில் விழுந்து 14 பேர் இறந்தார்கள். இதற்கு தி.மு.க.,தான் காரணம்.
தேர்தல் நேரத்தில் அவதூறு பிரசாரம் செய்து அரசியல் ஆதாயம் தேட முயற்சித்தால் தகுந்த பதிலடி கொடுப்போம். நீட் தேர்வு என்னுடைய ஆட்சியில் வந்ததாக ஸ்டாலின் குற்றம் சுமத்துகிறார். 2010ல் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது தி.மு.க., அதில் அங்கம் வகித்தது.
நாமக்கல் எம்,.பி.,யாக இருந்த காந்திசெல்வன் மத்தியில் சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தபோது தான் நீட் தேர்வு வந்தது. உங்கள் ஆட்சியில் கொண்டு வந்துவிட்டு தப்பிக்க பார்க்கிறீர்கள். ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாக்க பார்க்கிறார்கள்.
நீட் தேர்வை தடுத்து நிறுத்துவதற்கு இன்று வரையில் அ.தி.மு.க., போராடிக் கொண்டிருக்கிறது. 2017-18 ம் ஆண்டு அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 9 பேர் மட்டுமே மருத்துவப் படிப்புக்கு தேர்வானார்கள். ஆனால், அரசு ஒதுக்கீட்டில் 3147 காலி இடங்கள் இருந்தன. இதற்காக 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்தேன்.
இன்றைக்கு 2160 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதற்கு நாங்கள் தான் காரணம். இதுபோன்ற ஒரு திட்டத்தை ஸ்டாலின் கொண்டு வந்தாரா?
கடந்த 3 ஆண்டுகாலம் குடும்ப ஆட்சி தான் நடந்து வருகிறது. ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தமிழகத்தை ஆட்டிப் படைக்கின்றனர். ஒருவர் ஒற்றை செங்கல்லை தூக்கிக் கொண்டு அலைந்து கொண்டிருக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019ல் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
அப்போது தேர்தல் நடந்ததால் தி.மு.க., கூட்டணியில் 38 பேர் வெற்றி பெற்றனர். இவர்கள் 5 வருடகாலம் பார்லிமென்ட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இது மத்திய அரசின் திட்டம். இதை எம்.பி.,க்கள் தான் கேட்டுப் பெற வேண்டும். 'ஏன் அதற்கு நிதி ஒதுக்கவில்லை?' என அழுத்தம் கொடுத்திருந்தால் திட்டம் நிறைவேறியிருக்கும்.
ஒற்றை செங்கல்லை தூக்கிக் கொண்டு விளம்பரம் தேடுகிறார்கள். ஆனால், கெங்கவல்லியில் நாங்கள் கட்டிய கால்நடைப் பூங்காவை ஏன் பூட்டி வைத்திருக்கிறார்கள்?
1700 கோடி ரூபாய் செலவில் ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடைப் பூங்காவை கட்டினோம். அதற்கு ரிப்பனை கூட இவர்களால் வெட்ட முடியவில்லை. அமெரிக்காவில் ஒரு பசு 65 லிட்டர் பாலை கறக்கிறது. 'நமது சூழலுக்கு ஏற்றவாறு 40 லிட்டர் பால் கறக்க வேண்டும்' என இந்த திட்டத்தைக் கொண்டு வந்தேன்.
கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு என ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இதைக் கொண்டு வந்தோம். ஆனால், சேலம் மாவட்டத்துக்குப் பெயர் வந்துவிடும் என்ற குறுகிய எண்ணம் ஸ்டாலினுக்கு இருப்பதால் இதை திறக்க மறுக்கிறார். மத்தியில் இவர்கள் ஆட்சிக்கு வரத் துடிக்க காரணம், இங்கும் அங்கும் கொள்ளையடிப்பதற்காகத் தான்.
இவ்வாறு பழனிசாமி பேசினார்.
வாசகர் கருத்து