அவங்க உட்காரணும்... நாங்க நிக்கணுமா : வடசென்னையில் தி.மு.க., அ.தி.மு.க., மோதல்
வடசென்னையில் வேட்புமனுத் தாக்கலின்போது தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் மோதிக் கொண்ட சம்பவம், தேர்தல் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் வேட்புமனுத் தாக்கலில் வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இன்று வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று வடசென்னையில் அ.தி.மு.க., வேட்பாளர் ராயபுரம் மனோ தரப்பும் தி.மு.க., வேட்பாளர் கலாநிதி வீராசாமி தரப்பும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர்.
அ.தி.மு.க., தரப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் குவிந்தனர். தி.மு.க., தரப்பில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
அப்போது அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட தி.மு.க.,வினரை தேர்தல் அதிகாரிகள் அமர வைத்துப் பேசினர். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயக்குமார், "எங்க வேட்பாளர் மனுவை தான் முதலில் வாங்கணும். நாங்க தான் முதலில் வந்தோம். ஆனா, அவங்களை உட்கார வச்சுட்டு எங்களை நிக்க வைக்கறது நியாயம் இல்லை" எனக் கொந்தளித்தார்.
இரு தரப்பும் தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தனர். இதுதொடர்பாக, தலைமை தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க., புகார் தெரிவித்துள்ளது.
இது குறித்து அ.தி.மு.க., வழக்கறிஞர் அணியின் இணைச் செயலர் பாபு முருகவேல் கூறியதாவது:
தலைமை தேர்தல் அதிகாரியின் உத்தரவின்படி வேட்பு மனு தாக்கலின்போது முதலில் வருபவர்களின் மனுவையே பரிசீலனை செய்ய வேண்டும். இதில், ஆறாவது எண் அ.தி.மு.க., வேட்பாளருக்கும் ஏழாவது எண் தி.மு.க., வேட்பாளருக்கும் தரப்பட்டிருக்கிறது.
அதன் அடிப்படையில் தான் வேட்புமனு தாக்கல் நடைபெற வேண்டும் என தேர்தல் அலுவலரிடம் தெரிவிக்கப்பட்டது. இதை தி.மு.க.,வினர் ஏற்கவில்லை.
இது தொடர்பாக, தேர்தல் கமிஷனிலும் புகார் தெரிவித்திருக்கிறோம். இதையேற்று, முதலில் வருபவரின் வேட்புமனு தான் பெறப்படும் என தேர்தல் அதிகாரி உறுதியளித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து