தி.மு.க.,வுக்கு இதே வேலை: அனிதாவின் ஆபாச பேச்சால் கொதிக்கும் பா.ஜ.,
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தேர்தல் கமிஷனில் தமிழக பா.ஜ., புகார் கொடுத்துள்ளது.
தூத்துக்குடியில் தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், "சேலத்தில் காமராஜரைப் பற்றி பிரதமர் மோடி பேசுகிறார். அவர் ஏதோ காமராஜருடன் கட்டிப் புரண்டு விளையாடியது போல பேசி இருக்கிறார். டில்லியில் காமராஜர் படுத்திருக்கும்போது கொல்ல நினைத்த பாவிகள்" எனக் கூறியவாறே ஆபாச வார்த்தை ஒன்றை உபயோகப்படுத்தினார்.
இந்த வார்த்தை, தேர்தல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய வீடியோவின் நகலை இணைத்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
டி.ஜி.பி.,யிடம் புகார்
இதுகுறித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில், "பிரதமர் மோடிக்கு எதிராக இழிவான மன்னிக்க முடியாத வார்த்தையைப் பேசியதன் மூலம் தி.மு.க., தலைவர்கள் தரம் தாழ்ந்துவிட்டனர். எங்களை விமர்சிக்கவே முடியாத நிலையில் இவ்வாறு செய்துள்ளனர்.
இதனை மேடையில் இருந்த கனிமொழி கூட தடுக்கவில்லை. இதுகுறித்து தேர்தல் கமிஷன், டி.ஜி.பி,.யின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க.,வின் மலிவு அரசியல்
அனிதா ராதாகிருஷ்ணனின் பேச்சு குறித்து பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
நமது தேசத்தையும் மொழியையும் நதியையும் தாயாக நினைத்து போற்றும் இந்த பாரதத்தில், பெண் சக்தியை மதித்து வணங்குகிறார், பிரதமர் மோடி. ஆனால், பெண்களைக் குறி வைத்து அவர்களைக் கீழ்த்தரமாக விமர்சிக்கும் திமுக-வின் மலிவு அரசியல் இன்று எல்லையைத் தாண்டிவிட்டது.
பிரதமரின் தாயாரை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் உங்கள் மமதைக்கு நிச்சயம் அழிவு உண்டு. பெண்ணியப் போராளி என பெருமைப் பீற்றிக் கொள்ளும் கனிமொழி, இந்த பேச்சை விரும்பி ரசித்துக் கேட்டது தான் கேவலத்தின் உச்சம். பெண்களை ஆபாசமாக விமர்சிக்கும் உங்களுக்கும் உங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கும் முடிவுரை எழுத தமிழக மக்கள் தயாராகிவிட்டனர்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜி நிலை வரும்
இதற்கிடையில், அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக தலைமை தேர்தல் கமிஷனில் பா.ஜ., மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் புகார் மனு ஒன்றை அளித்தார்.
பின், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
கனிமொழியையும் தி.மு.க., முன்னணி நிர்வாகிகளையும் வைத்துக் கொண்டு தரம் தாழ்ந்து பிரதமர் மோடியை பற்றி அனிதா ராதாகிருஷ்ணன் பேசியிருக்கிறார். யாரையும் மனம் புண்படும்படியாக பேசக்கூடாது என்பது தமிழ் இனத்தின் பண்பாடு.
அப்படியொரு இனத்தில் பிறந்த அனிதா ராதாகிருஷ்ணன் பேசியது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. யாரும் இதை ஏற்க மாட்டார்கள். இந்தக் கட்சிக்கு இதே வழக்கமாகிவிட்டது. முன்னாள் முதல்வரின் தாயாரைப் பற்றி ஆ.ராசா பேசினார். அப்போது ஸ்டாலின் வேடிக்கை பார்த்தார். இந்நேரம் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
தமிழக மக்களின் மரியாதையைக் கெடுக்கும் விஷயம் இது. இதுகுறித்து தமிழக தேர்தல் கமிஷனில் கடிதம் கொடுத்திருக்கிறோம். அனிதா ராதாகிருஷ்ணன் பதவி விலக வேண்டும். செந்தில் பாலாஜி, பொன்முடியை போன்ற நிலை அவருக்கும் வரும்.
குற்றம் சுமத்தப்பட்டவர் என்ற நிலையில் தான் அனிதா ராதாகிருஷ்ணன் இருக்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் எப்போது சிறைக்கு போவோம் எனத் தெரியாமல் காழ்ப்பு உணர்ச்சியோடு பேசியிருக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து